| கற்புரிசைத் திருவதிகை - மும்மதிலெய்த வீரம் நிகழ்ந்தமை குறிக்கப் புரிசை பற்றிக் கூறினார். பொன் வெள்ளி செம்பு மதில்களையுடைய புரங்களை இருந்தவாறே எரித்த எளிமையும் வலிமையும் குறிக்கக் கற்புரிசை என்று இலேசுபடக் கூறினார்; கலந்து - கூடி; கூடுதல் அதன்வழிச் செல்லுதல். |
| அற்புதக் கூத்து - அற்புதம் - காணுந்தோறும் புதிது புதிதாயிருத்தல்; ஆடுகின்ற அம்பலம் - ஆடுதற்கிடமாகிய மன்றம். ஆடுதற்கு இறைவர் என்ற எழுவாய் அவாய் நிலையான் வந்தது. |
| திருவீதி பொற் பதி - "மாதவங்கள் நல்குந் திருவீதி நான்கும் தொழுது" (2063) - "பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி புரண்டு வலங்கொண்டு" (1444) என்றவை காண்க; இத்திருவீதிச் சிறப்பினை யுணர்த்துதற்கு அம்பலஞ் சூழ்திருவீதிப் பொற்பதி எனப் பதியின் சிறப்பினைத் திருவீதியொடு படுத்துக் கூறினார். |
| பொற்பதி - அங்கங்கும் பொன்னாலாகிய பணிகள் பல செய்யப்பட்டு விளங்கும் பதி; விண்ணவரும் இரணியவர்மன் முதலியோரும் அணிந்த பொன்னம்பலமும், "திருப்பே ரம்பலஞ் செய்ய, தூய பொன்னணி சோழன்" என்றபடி திருப்பணி செய்த பேரம்பலமும், தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய திருஎல்லையும் முதலியனவும் கருதத்தக்கன. பொற்றில்லைக் கூத்து என்ற திருமந்திரப் பகுதி காண்க. இரண்ய மயகோசமாம் திருத்தில்லை என்பாருமுண்டு. |
| பெரும் பற்றப்புலியூர் - ஏனைப் பற்றுக்களை எல்லாம் ஒழித்த துறவிகளுக்கும் பெரும்பற்றை விளைப்பது. "துறந்தோ ருள்ளப் பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானை" (தேவா). |
| 6 |
3570 | எவ்வுலகு முய்யவெடுத் தருளியசே வடியாரைச் செவ்வியவன் புறவணங்கிச் சிந்தைகளி வரத்திளைத்து வவ்வியமெய் யுணர்வின்கண் வருமானந் தக்கூத்தை அவ்வியல்பிற் கும்பிட்டங் காராமை யமர்ந்திருந்தார். | |
| 7 |
| (இ-ள்) எவ்வுலகும்....வணங்கி - எல்லா உலகங்களும் உய்யும்படி தூக்கிய சேவடியினை உடைய கூத்தப்பெருமானைச் செம்மையாகிய அன்புபொருந்த வணங்கி; சிந்தை களிவரத்திளைத்து - மனத்தில் மகிழ்ச்சி வர அவ்வனுபவத்தில் அழுந்தித் தம் வசமற்று நின்று; வவ்விய....கூத்தை - உயிர்ப் போதத்தினை விழுங்கி அதன்மேல் விளங்கும் மெய்யுணர்வாகிய சிவபோத நிலையில் வெளிப்படும் சிவானந்த அருட் கூத்தினை; அவ்வியல்பிற் கும்பிட்டு - முழுதும் பதிஞானமாகிய தன்மையிலே நின்று அனுபவித்து வழிபட்டிருந்து; அங்கு....அமர்திருந்தார் - அத்திருப்பதியிலே ஆராமையினாலே விரும்பித் தங்கியிருந்தனர். |
| (வி-ரை) எவ்வுலகும் உய்ய - விண்ணும் மண்ணும் பிறவுமாகிய உலகமெங்குமுள்ள எல்லா உயிர்களும் உய்திபெறும் பொருட்டு. |
| உலகுய்ய எடுத்தருளிய சேவடியார் - இஃது ஐந்தொழிற் கூத்தினை உணர்த்தியது; எடுத்தருளி - தூக்கிய; பிறவிப் பெருங்குழியினின்றும் மேலே எடுத்த என்பதும் குறிப்பு. "ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே" (அரசு - தேவா). |
| செவ்விய....திளைத்து - ஐந்தொழிற் கூத்தின் இயல்பினை முழுதும் அத்திருவடிவத்தில் வைத்து எண்ணி எண்ணிக் கண்டு ஆனந்தத் தழுந்தி. |