பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்471

  அன்புற வணங்குதல் - சிந்தை களிவரத் திளைத்தல் - என்ற நிலை வேறு; இவை கருவி கரணங்களின் எல்லையளவு கண்டு ஆனந்தத் தழுந்துதல். மேல் அவ்வியல்பிற் கும்பிட்டு என்ற நிலை வேறு; அது தற்போதமிழந்த நிலையில் வெளிப்படுவதாய் ஞாதிரு ஞான ஞேயங் கடந்த சிவபோத அனுபவம்; அவ்வியல்பில் - அச்சிவபோத நிலையேயாகி; இது யோகியர்களால் காலமிடங் கடந்த சிவானுபூதிக நிலையில் அனுபவிக்கப்படும் சிவானந்த நிலை; "பின்னர்த் தேவிருக்கை யமர்ந்தருளிச் சிவயோகந்தலை நின்று, பூவலரு மிதயத்துப் பொருளோடும் புணர்ந்திருந்தார்" (3588) என்னும் நிலையில் மூவாயிரத் தாண்டு சிவபோதியி னிழலில் அமர்ந்திருக்கும் நிலையிதுவாகும். இதனை ஆனந்தக் கூத்தென்றும், முன்னையது ஐந்தொழிற் கூத்தென்றும் அற்புதக்கூத்து - சிவானந்தக் கூத்து முதலிய பகுதிகளுள்ளும், பிறாண்டும் கண்டு கொள்க. "நின்றயங்கி யாடலே நினைப்பதென்னியமமே" (தேவா) என்ற கருத்தும், காண்க. இவற்றினியல்புகளையும் அனுபவ நிலைகளையும் திருமந்திரத்தினுள் 9-ம் தந்திரத்தினுள்ளும் மெய்கண்ட ஞான நூல்களுள்ளும் கண்டுகொள்க.
  ஆராமை - ஆராமையினாலே; ஆராமையாவது மனநிறைவு பெறாமை.
  காஞ்சிபுர வழிபாட்டினை இரண்டு பாட்டுக்களாலும், பெரும்பற்றப் புலியூரினை இரண்டு பாட்டுக்களாலும் உரைத்தருளினர்; இதுபற்றி முன் திருமலைச் சிறப்பில் உரைத்தவை பார்க்க,
  எடுத்தாடிய - சிந்தைதெளிவர - அமைந்திருந்தார் - என்பனவும் பாடங்கள்.
 

7

3571
டநிலைமா ளிகைப்புலியூர் தன்னிலுறைத் திறைஞ்சிப்போய்
"அடல்விடையின் மேல்வருவா ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த" தெனக்கருதி மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத காவிரியின் கரையணைந்தார்.
 

8

  (இ-ள்) தடநிலை....போய் - பெரிய நிலைகளையுடைய மாளிகைகள் நிறைந்த பெரும்பற்றப்புலியூரில் தங்கியிருந்து வணங்கி மேற்சென்று; அடல்....எனக்கருதி - வலிமையுடைய இடபத்தின் மேல்வரும் இறைவர் அமுது செய்யும்படி சிறிதும் அஞ்சாமல் விடத்தினைக் கொடுத்தது என்று கருதி; மேதினிக்கு....நிறையாத - உலகுக்கு எல்லா வளங்களையும் நிறையக் கொடுத்துக், கடலின் வயிற்றினை நிறைக்காத; காவிரியின் கரையணைந்தார் - காவிரியாற்றின் கரையினை அணைந்தனர்.
  (வி-ரை) தடநிலை மாளிகை - இவை இறைவரது திருமாளிகையும் அதனைச் சூழ்ந்த அம்பலம்சூழ் திருவீதியில் தில்லைவாழந்தணர்களின் மாளிகைகளும்.
  அடல் விடையின்....எனக்கருதிக் கடல் வயிறு நிறையாத - ஏனை ஆறுகள் போலக் காவிரியாறு கடலிற்போய்ப் பாய்வதில்லை; அதன் நீர் முதலிய வளமெல்லாம் தொடக்கத்திலிருந்து நிலங்களை வளம்படுத்தற்கே பயன்படுகின்றன; எஞ்சிய நீர் மிகக்குறைவாதலின் காவிரிப் பூம்பட்டினத்தருகில் காவிரி சங்கமுகத்துறையிலே கடலினுள் சென்று பாய்வதற்குப் போதியதன்றாம். அதற்குக் காவிரி கருதியதாக ஒரு காரணங் கற்பித்து இவ்வாறு கூறினார். தற்குறிப் பேற்ற அணி. சிவாபராதம் செய்தாரோடு இணக்கம் கூடாது என்று கூறும் விதியினை வலியுறுத்தல் கருத்து. "காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே" (திருவிசைப்பா); "அவரைக் கண்டா லம்மநா மஞ்சுமாறே" (திருவா) என்றற் றொடக்கத்த திருவாக்குக்களின் கருத்துக் காண்க; இக்கருத்தையே எடுத்தாண்டு ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தினுள் (வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத்தில்)