பக்கம் எண் :

474திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  அகன்று ஏகுவார் - கண்டார் - என்க; முன்போல மேலே தெற்கு நோக்கிச் செல்வாராகிய யோகியார்.
  பேண வரும் - மேய்ப்பதற்காகச் சேர்த்துக்கொண்டு வரப்பட்டு அந்த நதிக் கரைப் புறவில் கூடிய; கரைப் புறவு - காவிரித் தென்கரைப் புறவிடங்களில். இவ்விடம் புறவு எனப்பட்டது. மருதப் புறவாகிய நதிக்கரைச் சார்வில் பசுக்கள் மேய்ந்து தங்கக்கூடிய புல் செடி முதலியவை நிறைந்த குறுங்காடுகள்; முல்லைச் சார்புடையவை; மேய்ச்சற் புறம்போக்கு என்பது நவீன வழக்கு.
  கோக்குலங்கள் புலம்புவன - புலம்புவனவாகிய நிலையில் இருந்த கோக்குலங்களை; புலம்புதல் - கதறுதல்; அம்மா என அலறி அழைத்தல். கண்ணீர் சோர்தல், முகங் கவிழ்தல் முதலிய மெயப்பாடுகளைக் கொள்ளுதல். "வெம்பிடு மலருஞ் சோறு மெய்ந்நடுக் குற்று வீழும்" (108); "ஆத் தரியா தாகி முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற் கண்ணீர் வார" (112) என்ற நிலைகள் காண்க.
  குலங்கள் - கூட்டம் குறித்தது; எதிர் - தம்முன்; தம் எதிரே.
 

10

3574
அந்தணர்தஞ் சாத்தனூ ராமேய்ப்பார் குடித்தோன்றி
முந்தைமுறை நிரைமேய்ப்பான் மூலனெனும் பெயருடையான்
வந்து தனி மேய்க்கின்றான் வினைமாள வாழ்நாளை
வெந்தொழில்வல் விடமுண்ண வீடிநிலத் திடைவீழ்ந் தான்.
 

11

  (இ-ள்) அந்தணர்தம்....பெயருடையான் - அந்தணர் வாழ்கின்ற சாத்தனூரில் பசுக்களை மேய்க்கின்றவர்களாகிய இடையர்கள் குடியிலே பிறந்து தனது முன்னோர்களது மரபின் தொழில்முறையிலே பசுக்களை மேய்த்து வருவானாகிய மூலன் என்ற பெயருடையவன்; வந்துதனி மேய்க்கின்றான்....வீழ்ந்தான் - (ஊரினின்றும் நதிக்கரைப் புறவில் மேய்ச்சலிடை) தனி வந்து பசு மேய்க்கின்றானாக, அப்போது போகத்தின் எல்லை வினை ஒழிந்ததாதலின் அவனுடைய ஆயுளைக் கொடிய தொழிலுடைய பாம்பின் விடம் உண்டு ஒழித்துவிடவே உயிர்துறந்து நிலத்தில் வீழ்ந்தான்.
  (வி-ரை) அந்தணர்தம்....சாத்தனூர் - இப்பதி திருவாவடுதுறையினை ஒட்டியதாக அதன் தென்புறம் உள்ளது என்றும், திருஆவடுதுறையினை ஒட்டி ஒன்றாகச் சாந்தையூர் அணி ஆவடுதுறை என்று சேர்த்து வழங்குவதென்றும், சிறந்த அந்தணர்கள் நிறைந்தவூர் என்றும், அவ்வந்தணர்கள் திருவாவடுதுறையில் இறைவர்க்குப் பணி செய்பவர் என்றும் சேந்தனார் திருவிசைப்பா (திருவாவடுதுறை) வினால் அறியலாம். "பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர்" (1); "சோதிமதி லணிசாந்தை மெய்ச்சுருதி விதிவழியோர் தொழும், ஆதியமரர் புராணன்" (2); "ஒழிவொன்றிலாப் பொன்னித் தீர்த்தமும் முனிகோடி கோடியா மூர்த்தியும், அழிவொன்றிலாச்செல்வச் சாந்தையூரணியா வடுதுறை யாடினாள்" (8) (திருவிசைப்பா) என்பன காண்க.
  சாத்தனூர் என்பது சாந்தை என மருவி வழங்குவது.
  ஆ மேய்ப்பார் குடி - இடையர் மரபு; கோபாலர் என்ப.
  முந்தை முறை - வழிவழி தனது முன்னோர்கள் செய்துவந்த பழைய முறைமையின்படி,
  மூலன் எனும் பெயருடையோன் - மூலன் - என்பது அவனுடைய பெயர்; இப்பெயர் அவனுடைய உடலைப்பற்றி நின்று பின்னர் அவ்வுடலிற் புகுந்து எழுந்த யோகியாருக்கும் திருமூலர் என வழங்கலாயிற்று; "திருமூலரா யெழலும்" (3577).