பக்கம் எண் :

494திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  கண்ட - குருடாயிருந்த விழிகள் விழிக்கப்பெற்றுத், தம் கண்ணாலே கண்ட என்பதும் குறிப்பு. "நாட்டமிகு" என்ற முதனூற் கருத்தை விரித்தபடியும்,சரிதத் தோற்றுவாய்க் குறிப்புமாம்.
  விறல் - அடிமைத் திறத்தின் உறைப்பினாற் போந்த வலிமை. "வீரமென்னால் விளம்புந் தகையதோ?" (144) (திறம் - சரிதப்பண்பும் வரலாறும்.)
  அமணர் கலக்கம் கண்ட - விறல் - என்பன வகைநூ லாட்சி; ஆசிரியர் காட்டியருளியவாறு.
 

23

 
  சரிதச் சுருக்கம்:- திருக்கயிலையில் திருநந்தி தேவரது அருள்பெற்றவராய் அணிமாதி சித்திகள் கைவரப் பெற்றுடையராய் ஒரு யோகியார் இருந்தார். அவர் அகத்திய முனிவருடன் கூடிய நண்பினாலே அவருடன் சிலநாள் இருப்பதற்கெண்ணி வடகயிலையினின்று பொதிகை மலையினை நோக்கிப் புறப்பட்டு வழிக்கொண்டார்.
  வழியிலே திருக்கேதாரம் பசுபதி நேபாளம் வழிபட்டுக், கங்கைக் கரையணைந்து நீராடிக், காசிப்பதியிணை வணங்கி, விந்தம் சீபர்ப்பதம் திருக்காளத்தி, திருவாலங்காடு பணிந்து, திருக்காஞ்சிபுரம் அணைந்து காமாட்சி யம்மையாரையும் திருவேகம்பரையும் பணிந்து, அங்குள்ள யோகமுனிவர்களுடன் விரும்பியிருந்து, சிதம்பரத்தை அடைந்து திருஅம்பலத்திலே இறைவரது ஆனந்தக் கூத்தனைக் கும்பிட்டுச் சிந்தை களிவரத் திளைத்து, அமர்ந்திருந்தார். அதன்பின் காவிரிக்கரையினை அணைந்து கடந்து ஏறித் திருவாவடுதுறையினை அணைந்து பணிந்தார். அங்கு அத்தானத்தை விட்டு நீங்காததோர் காதலும் விருப்பமும் திருவருளால் எழுந்தது.
  அவர், பின்னும், அதனைவிட்டு நீங்கிச் செல்லும்போது காவிரிக்கரைப் புறவிலே பசுக்கூட்டங்கள் புலம்புவனவற்றைக் கண்டார். அவற்றை மேய்க்கின்றவன் சாத்தனூரில் உள்ள மூலன் என்னும் இடையன் விடந்தீண்டப்பட்டு அங்கு இறந்துகிடந்தான். அவன் உடம்பினைச் சூழ்ந்து கதறிப் புலம்பிப் பசுக்கள் வருந்தின. கருணையினாலே பசுக்களின் துன்பத்தை நீக்கவேண்டுமென்று யோகியார் எண்ணினார். அவற்றை மேய்ப்போன் உயிர்பெற் றெழுந்தாலன்றிப் பசுக்கள் துன்ப நீங்கா என்று கண்டார். தமது உடம்புக்குக் காவல் செய்துவைத்துப் பரகாயப் பிரவேசம் என்ற சித்தியினாலே யோகியார் தம் உயிரை இடையனது உடலிற் பாய்ச்சித் திருமூலராய் எழுந்தார். பசுக்கள் துன்ப நீங்கி மகிழ்ந்துபோய் மேய்ந்தன. அவற்றைக் காத்து நீரூட்டி நீழலமர்வித்து மாலையில் அவைபையத் தத்தம் மனைகளை நோக்கிச் செல்ல, அவற்றின் பின்போய் ஊர்ப்பொது எல்லையில் நின்றார். பசுக்கள் தத்தம் மனைகளைச் சேர்ந்தன.
  பொழுது கழிந்தும் தன் கணவன் வராமை கண்டு கவலைப்பட்டு வந்த மூலனுடைய மனைவி, இவர் நின்ற நிலைகண்டு இவர்க்கு ஈனம் அடுத்தது என்று வந்து மெய்தீண்ட, அதற்கிசையாது "உன்னோடு எனக்கு ஒரு தொடர்புமில்லை" என்று மறுத்து, அங்கு ஒரு பொதுமடத்திற் போய் யோகத்திலிருந்தார். பிற்றை நாள் இடையன் மனைவியும் ஊரவரும் வந்து பார்த்து, அவர் பித்துற்ற மயலும் பிறிது ஒரு சார்பும் இலர் என்றும், சிவயோகி என்றும், தெரிந்து அவளைக் கொண்டு அகன்றார்கள்.