பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்495

  யோகியார் நதிக்கரைக்கு வந்து தமது உடம்பைத் தேடினார். அது காணப்படவில்லை. யோகச் சிந்தையால் ஆராய்ந்தார். சிவாகமப் பொருள்களைத் தமிழில் உலகுக்கு இவர் வாக்கினால் வெளிப்படுத்தத் திருவுளங் கொண்டு இறைவர் தம் உடலை மறைப்பித்தார் என்றறிந்தார்.
  அதன்பின் திருவாவடுதுறையிற் சேர்ந்து இறைவரை வணங்கிக் கோயிலின் புறக் குடபால் மிக்குயர்ந்த அரசின்கீழ்ச் சிவயோக நிட்டை கூடியிருந்து சிவாகமப் பொருளை, ஓராண்டுக்கொன்றாக "ஒன்றவன் றானே" என்று தொடங்கி 3000 ஆண்டுகள் 3000 திருமந்திரங்களை அருளி உலகுக்கு உபகரித்தருளினார். பின்னர்த் திருவருளால் திருக்கயிலை சேர்ந்து என்றும் பிரியாது இறைவர் திருத்தாளடைந்தார்.
 
  கற்பனை:- 1. அணிமாதி சித்திகள் கைவரப் பெறுதல் மிக அரிய நிலை; அதனினும் மிக்க நிலை சிவயோகங் கைவருதல்.
  2. திருக்கயிலையில் இறைவனுடனிருக்கும் இன்பத்தினும் அணைந்தோர் தன்மை பெற்ற அடியாருடனிருத்தல் மிக்க இன்பமுடைத்து.
  3. அருஞ் சித்தி கைவந்த யோகியாராயினும் தாம் எண்ணியபடி காரியம் முடித்தல் இறைவரருளன்றி யியலாது. இங்குச் சிவயோகியாராகிய சித்தர் குறுமுனிபால் உற்ற கேண்மையினால் உடன் சிலநலா ளுறைவதற் கெண்ணி வழிக்கொண்டார். ஆயின், இடையில் பசுக்களின் துயர்தீர்க்க எண்ணிச் செய்த செயலின் வழியே கண்ட சிவனருள் பற்றித் தடையுண்டு, ஆவடுதுறையில் போதிநிழலில் 3000 ஆண்டு மூலனுடலிற் றங்கி யோகமிருந்து சிவாகமப் பொருளை உலகுய்ய அருளி மீண்டு திருக்கயிலை யணைந்து மீளாநிலையிற் றிருத்தாள் அடைந்தனர்.
  4. ஆகாய கமனம் - வானிற் செல்லுதல் - வல்ல சித்தராயிருந்தும் பொதிகை செல்ல எண்ணிய யோகியார் இடையில் சிவன் பதிகள் வழிபட்டுப் போந்தனர். இதுவே தலயாத்திரையின் முறை.
  5. திருவாவடுதுறையுள் வந்து வழிபட்டபோது அந்நிலைமைத் தானத்தை அகலாததொரு கருத்து முன்னி எழுங்குறிப்பினால் யோகியர்க்கு ஆதரவுமூண்டது. இவ்வாறு பெரியோர்பால் சிவனருளின் முற்குறிப்பு நிகழும். (3573)
  6. பசுக்களின் துயரைத்தைக் கண்டு இரங்கி அவற்றின் துன்ப நீங்கச் செய்வேன் என்று முற்பட்டார் யோகியர்; இவ்வாறு பிற உயிர்களின் துயருக்கிரங்குதல் பெரியோர்களின் தண்ணளி இயல்பு; இத்தன்மை வரவேண்டிச் சிவனை வேண்டுவர் பெரியோர். "எவ்வுயிரு மென்னுயிர்போ லெண்ணி யிரங்கவுநின், றெய்வ வருட்கருணை செய்யாப் பராபரமே" என்று வேண்டினர் தாயுமானார். (3575)
  7. பிற உயிர்க்கு நன்மை செய்யும் ஆசையும் ஒரோர்கால் துன்பத்துக் கிடமாகும். யோகியார் இங்கு இடையனாகிய மூலனுடம்பிற் புக்குச் செய்த கருணைச் செயலால், மூலன் மனைவி தீண்டவருதலும், தாம் மறுத்தலும், அவனது சுற்றத்தாராற் றொடரப்படுதலும் பின்னர்த் (திருவருளால்) தம் உடல் கரப்பிக்கப் பெறுதலும் நிகழ்ந்தன. “ஈசனோ டாயினு மாசை யறுமின்கள் ஆசை படப்பட வாய்வருந் துன்பங்கள்” என்பது திருமூலரது அனுபவத் திருவாக்கு.