| |
| ஓடத்தொடர்ந்து துரந்ததற் பின் - ஓடும்படி சாடித் தொடர்ந்து நகரெல்லைப் புறம் கடக்கத் துரத்தியபின். |
| பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து....கரை படுத்து - பன்னும் - குளத்தின் கரையெல்லையை ஆக்கிரமித்து இடத்தாற் குறைபாடு செய்து அங்குப் பாழியும் பள்ளிகளும் அமைத்துக் கொண்டனர் என்று முன் கூறப்பட்ட (3595); எடுத்துச் சொல்லப்பட்ட; பள்ளிகளும் பறித்துக் - கரைபடுத்து - இடத்தின் குறைபாட்டை நீக்கி அகலமாக்கும்படி குளம் கல்ல எண்ணினார் தண்டியடிகள். ஆயின் அதனைச் செய்வதற்கு அவ்விடத்தில் அமணர் நிலையாக அமைத்துக்கொண்ட பாழி பள்ளிகளைப் பறித்தாலன்றி இயலாதாதலானும், அதனைச் செய்து கரை எல்லையினை அளவு படுத்துதல் அரசனாலன்றி யமையாமையானும் அரசன் அதனைச் செய்தனன் என்க; இந்நாளிலும் பொதுப்பயன்களுக்கு இடம் வேண்டின் அரசாங்கம் அதனை எடுத்து அளவுபடுத்தும் சட்டமுறை காண்க;
(Acquisition of land for Public purposes; Land Acquisition Act). கரைபடுத்தல் - கரையினை எல்லைகண்டு அளவுபடுத்துதல். (வழக்கு வென்ற அம்பலம் கட்டுதற்கு வீடுகள் வாங்கியது காண்க.) |
| மன்னன் அவனும் - நில வேந்தனான தன்மையேயன்றி, இறைவரருளப் பெற்ற தன்மையும் கூடியவன் என்பார் மன்னனும் என்னாது மன்னனவனும் என்றார்; அவன் - முன் கூறியபடி அருளப்பெற்ற அவன் என முன்னறிசுட்டு. |
| மன மகிழ்ந்து வந்து - அரச நீதிமுறையே யன்றி அருள் முறையும் முற்றியதால் உளதாகிய மகிழ்ச்சி. |
| அடி பணிந்தான் - இறைவரருள் பெற்ற தொண்டரை வணங்கு முகத்தானும் விடைபெறும் பொருட்டானும் பணிந்தனன் என்க; தொண்டர்பால் சார்ந்து - என முன்னர்ப் பணிதல் கூறாமை என்னை? எனின், அங்கு இருபாலும் வழக்கறுத்து உலகியல் நீதிமுறை செய்யப் போந்தானாதலின் வெளிப்பட வணக்கங் கூறிலர்; தானே சென்று அவர்பாற் சார்ந்தமையே வணக்கமாயிற் றென்பது. |
| 24 |
3616 | மன்னன் வணங்கிப் போயினபின் மாலு மயனு மறியாத பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப் புரிந்த பணியுங் குறைமுடித்தே உன்னு மனத்தா லஞ்செழுத்து மோதி வழுவா தொழுகியே மின்னுஞ் சடையா ரடிநீழன் மிக்க சிறப்பின் மேவினார். | |
| 25 |
| (இ-ள்.) மன்னன்....பின் - முன்கூறியபடி அரசன் வணங்கி விடை பெற்றுச் சென்ற பின்னர்; மாலும்....போற்றிசைத்து - விட்டுணுவும் பிரமனும் அறியாத பொற்பாதங்களை வந்தித்து; புரிந்த....குறை முடித்தே - தாம் செய்த திருப்பணியின் குறையினை நிறைவாக்கிய பின்பே; உன்னும்....ஒழுகியே - இடைவிடாது நினைக்கும் மனத்தினால் திருவைந் தெழுத்தினையும் ஓதி இவ்வொழுக்கத்தில் வழுவாத நிலையின் நின்றபடியே; மின்னும்....மேவினார் - ஒளி வீசும் சடையினை உடைய சிவபெருமானது திருவடி நீழலாகிய மிகுந்த சிறப்பின்கண்ணே பொருந்தினார். |
| (வி-ரை.) மன்னன் வணங்கிப் போயினபின் - பணிந்தான் என்று (3615) முன்கூறி, இங்கு வணங்கிப் போயின பின் என்றமையால் பணிந்து போயின நிகழ்ச்சி இடையில் நிகழ்ச்சி இடையில் நிகழ்ந்தது என்பது குறிப்பெச்சம். |
| போற்றிசைத்தல் - ஈண்டு இறைவர் தம்பாற் செய்த பேரருளின் பொருட்டு நன்றியினால் வந்தித்துத் துதித்தலைக் குறித்தது. |