| |
| அரசன் உடனே விழித்து உடல் சிலிர்த்து எழுந்து இறைவரை வணங்கிப், பொழுது புலர்ந்ததும் அடிகள்பால் வந்து, கனா நிகழ்ச்சியினைச் சொல்லினன். அது கேட்ட அடிகள் அவனிடம் அந்நாள் முன் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறித், தம்மிடம் அமணர் ஒட்டிய செய்தியினையும் அறிவித்து, இந்த வழக்கின் உண்மைகண்டு முடிக்க என்று வேண்டினர். அரசன் அமணர்களை அங்கு அழைத்துக் கேட்க அவர்களும் அதற்கு இசைந்தனர். |
| அரசன் அடிகளாரை "நீவிர் கண்பெறு நிலையினைக் காட்டுவீராக" என்றான். அவர் திருவைந்தெழுத்தை ஓதி, நிகழ்ந்த சூளுறவை எடுத்துக் கூறிக் குளத்தின் மூழ்கிக், கண் செவ்வே விழித்து எழுந்தனர்; வானவர் பூமாரி பொழிந்தனர். உடனே அமணர்கள் கண்ணிழந்து மயங்கினர். |
| அரசன் பழுது புரிந்த அமணர்களே குற்றப்பட்டார்கள் என்று கண்டனன்; வயவர்களை ஏவி அமணர்களை அவர் இசைந்தவாறே அத்திருநகரத்தில் எங்கும் இல்லாதவாறு ஓடத்துரத்தினன். அவர்கள் குளக்கரையினை ஆக்கிரமித்துக் கட்டிய பாழிகளையும் பள்ளிகளையும் இடித்து எறிந்து குளக்கரையினை எல்லைப்படுத்தி, அடிகளாரை வந்து பணிந்து விடைகொண்டு சென்றனன். |
| அடிகளார் சிவபெருமான் திருவடிகளைத் துதித்துப், பணியினையும் குறைமுடித்துத், திருவைந்தெழுத்தினை இடையறாது ஓதித் திருத்தொண்டினெறிவழாது ஒழுகிச் சிவன் றிருவடி நீழலை அடைந்தனர். |
| |
| கற்பனை :- 1. திருவாரூரில் பிறக்கும் தன்மை முன்னைப் பெருந்தவத்தாலன்றி வராது. (3592) |
| 2. தவமுடைய பெரியோர் அகநோக்கிலே சிவன் கழலே கண்டு கொண்டிருப்பர்; வேறு காணார். (3592 - 3600) |
| 3. புறநோக்கம் பெறின் பரத்தினையன்றிப் பதார்த்தங்களையும் பார்க்க வருமாதலின் அகநோக்கிற் சிவமே கண்டிருக்கும் தவமுடையோர் புறநோக்காகிய கண் பார்வையினையும் வேண்டார் (3592); ஆனால் அத்தன்மையோர் புறநோக்கமும் வரப் பெற்றால் அகம் புறமிரண்டினாலும் சிவனையே காண்பாராதலின் நாட்ட மிக்கவராவார். (3593) |
| 4. சிவன் பணிகள் செய்யும்போது ஓயாது நாவினால் திருவைந்தெழுத்தினைக் ஓதிக்கொண்டே செய்தல் வேண்டும்; அப்போது மனத்தாற் சிவன் கழல் சிந்தை செய்தலும் வேண்டும். (3594 - 3596 - 3616) |
| 5. ஆறு - குளம் முதலிய தீர்த்தக் கரைகளில் இடத்தாற் குறைபாடு நேரும்படி ஆக்கிரமித்து மக்கள் குடியிருப்புத் தானங்களை அமைத்துக்கொள்ளுதல் மாபெருஞ் சிவாபராதம் (3595); இந்நாளில் இச்செயல்களே உலகில் மிக்குக் காணப்படுவதும், விரும்பப்படுவதும் மிக வருந்தத்தக்கன. |
| 6. தண்டியடிகள் பிறவியந்தகரா யிருந்தும், குளம் கல்லும் கடிய வேலையினைக் கண்டு, மேலும் கீழும் தறிநட்டுக் கயிறு பிணித்துத் தடவி ஏறியும் இறங்கியும் பணி செய்தனர். இது சிவன்பணியில் வைத்த உறைப்பினாலன்றி இயலாததொன்று (3596); கண்ணும், பிற கருவி கரணங்களும் வசதியாகப் பெற்றிருந்தும் மக்கள் அரன் பணியின்பால் சிறிதும் அவற்றை ஆக்காமல் வீணே நாள் கழித்து இறந்தொழிகின்றார்; அந்தோ! |