| |
| அன்னப் பெடைகள் அலர் புக்கு ஆட - தாமரைப் பூக்களில் ஏறியிருந்து அசைய - ஊசலாட; புகுதல் - நீரினுள் நீந்திச் சென்று பூக்களில் ஏறி; "சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலி கதிர்வீச, வீற்றிருந்த, வன்னங்காள்!" (தோணிபு - பழந்தக் - 6); "செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு மிலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல், வெறிகதிர்ச்சா மரையிரட்ட விளவன்னம் வீற்றிருக்கு மிழலையாமே" (மேகரா - 2.) |
| அன்னம் ஆட - கொடிகள் ஆடும் - அன்னங்கள் பொய்கைகளுள் வாவிகளாகிய நீரரங்கினிடை அலர் மேலாட, கொடிகள் நில அரங்கினிடை ஆடும் என்பது அணி நயம். |
| மின்னுக் கொடிகள் - துகிற் கொடிகள் - மின்கொடி போன்ற பெண்களும், துகிற்கொடிகளும் என்று எண்ணும்மை விரிக்க. முன்னது உவமையாகுபெயர்; பின்னது பண்புத்தொகை. |
| விழவிற்கு ஆடும் - விழாவின் பொருட்டு ஆடுகின்ற; துகிற் கொடிகள் - வெண்கொடிகள்; "வீதித், தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே" (மேகரா - 6); "மாடந் தோறுங், கோதைசூ ழளகபாரக் குழைக்கொடியாட மீது, சோதிவெண் கொடிக ளாடுஞ் சுடர்நெடு மறுகில்" (474). |
| அலர்புக்காட - விழவிற்காடு - இச்சரிதமுடைய நாயனார் முதலில் இங்கு ஆடிப், பின்னர், விழவிற் குடந்தையிற் சூதாடிய சரிதக் குறிப்புப்பட நகர்வளங் கூறிய கவிநயம் காண்க. இஃது ஆசிரியரது சிறப்பு. |
| விழ - விற்காடு வேற்காடு - சொல்லணி. |
| வேற்காடு - வேலமரங்களின் அடர்ச்சி பற்றியும், முருகப்பெருமான் திருக்கை வேல்பற்றியும் வந்த பெயர். தலவிசேடம் பார்க்க. |
| புடை வாவி - என்பதும் பாடம். |
| 1 |
3619 | செம்பொற் புரிசைத் திருவேற்கா டமர்ந்த செய்ய சடைக்கற்றை நம்பர்க் கும்பர்க் கமுதளித்து நஞ்சை யமுது செய்தவருக் கிம்பர்த் தலத்தில் வழியடிமை யென்றுங் குன்றா வியல்பில்வருந் தம்பற் றுடைய நிலைவேளாண் குலத்திற் றலைமை சார்ந்துள்ளார். | |
| 2 |
| (இ-ள்.) செம்பொன்....செய்தவருக்கு - செம்பொன் அணிந்த மதிலையுடைய திருவேற்காட்டில் விரும்பி யெழுந்தருளிய சிவந்த சடைக் கற்றையினையுடைய நம்பரும், தேவர்களும் அமுதம் அளித்துத் தாம் விடத்தை அமுதாக உண்டவரும் ஆகிய சிவபெருமானுக்கு; இம்பர்த் தலத்தில்....நிலை - இவ்வுலகத்தில் இம்மையிலே வழி வழியாக வரும் அடிமைத் திறத்தினில் என்றும் வழுவாத தன்மையில் வருகின்ற தமது பற்றுடைய நிலையினையுடைய; வேளாண்....உள்ளார் - வேளாளர் குலத்தில் தலைமையாகிய நிலையினைப் பெற்றுள்ளார். |
| (வி-ரை.) நம்பர்க்கு அமுது செய்தவருக்கு - என்ற இரண்டும் சிவபெருமான் என்ற ஒரு பொருள்மே னின்ற அடையடுக்கு; நம்பர்க்கு - செய்தவருக்குச் செய்யும் - அடிமை என்க. "ஊரெரித்த, வப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த, துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்" (திருத்தொண்டர் திருவந்தாதி - 1); இவ்வாறே "அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை" என்பது முதலாக இரண்டனுருபில் வரும் அடையடுக்குச் சிறப்பு அரசுகள் திருத்தாண்டகங்களுட் சிறக்கக் காணலாம். |