பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 32. மூர்க்க நாயனார்புராணமும் உரையும்529

உம்பர்க்கு.....செய்தவருக்கு - சிவனது கருணைத்திறங் குறித்தது; "பொங்கி நின்றெழுந் தகட னஞ்சினைப், பங்கி யுண்டதோர் தெய்வமுண் டோசொலாய்" (அரசு); உம்பர்க்கு அமுதளித்து - நஞ்சை அமுது செய்தவர் - தாம் விதித்த அறநூல் விதிப்படி சூதினால் வரும் தீமையினைத் தாம் ஏற்று, அதனை அடியவர்க்காக்கிய நலத்தினை நாயனாருக்கு அளித்த இச்சரித அருட்குறிப்புப்பட நின்றது.
இம்பர்த் தலம் - இந்நிலவுகில்; இம்மையில்.
வழியடிமை என்றும் குன்றா இயல்பு - வழிவழி இருமரபும் சிவனடிமையினின்றும் வழுவாத தன்மை; "மரபிரண்டுஞ் சைவநெறி வழிவந்த கேண்மையராய்" (1915); "இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி" (முருகு); "சைவத்துறையின் வழிவந்த குடிவளவர்" (1900); "மறிவளருங் கையார் பாதம், பற்றியே வருங்குலத்துப் பான்மையினா னாதலினால்" (2210) என்பன முதலியவை காண்க. இவ்வாறு வழிவழி வரும் பெருமை வேளாண் குடிகளின் சிறப்புத் தொண்டைநாட்டிற்குச் சிறப்பாயுரியது; பழயனூர்த் திருவாலங்காட்டு வரலாறு பற்றி முன் கூறியவை காண்க. இயல்பு - செயற்கையானன்றித் தம்மோடுடனாய் மாறாது வரும் இயற்கை என்பது.
தம் பற்றுடை நிலை - வழியடிமையாகும் இயல்புடனே தாந்தாமும் அப்பற்றுடன் வாழ்வார் என்பது; வழிவரு மியல்பேயன்றித், தம்பற்றின்றி வாழ்வாரும் உலகிற் பலராகுதல் காண்டலின் இவ்வாறு கூறினார்.
வரும் தம் குலத்தில் - என்க; தம் என்பது குலத்தைக் விசேடித்தது; பற்றுடை நிலை - அன்பின் உறுதியையுடைய நிலைமையான என்க; இயல்பின் வரும் - முறைமைப்படி வரும் அன்பு என்க; "எம்பிரா னெந்தை தந்தை தந்தையெங் கூட்டமெல்லாம், தம்பிரா னீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும்" (3546) என்றபடி இயல்பின் முறையால் வந்த பற்று;- (இவை ந. சிவப்பிரகாச தேசிகர் குறிப்புக்கள்.)
நிலை வேளாண் குலம் - வழியடிமையும் தம்பற்றும் உடைய நிலையே தமது பெருமையாம் என்று இறுமாக்கும் எண்ணம் வேளாண்மக்களுக்கு இந்நாளிலிருப்பக் காண்ப தரிதாகின்றது!
தலைமை சார்தலாவது - அக்குலத்தின்அப்பெருமையிற் சிறந்தொழுகுதல்.
தலைமை சார்ந்துள்ளார் - இவரது இயற்பெயர் இன்னதென்று சொல்லப் பெறவில்லை. மூர்க்கர் என்பது பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் போந்த காரணப் பெயர்; "நற்சூதர் மூர்க்கரெனும் பெயர்பெற்றார் நானிலத்தில்" (3626) என்பது காண்க. இயற்பகையார் - மெய்ப்பொருளார் - எறிபத்தர் - நாளைப் போவார் -என்பன முதலாகிய பெயர்களுங் காண்க. மெய்ப்பொருணாயனார் புராணம் பார்க்க; இயற் பெயர் வழங்காது காரணப் பெயர் வழங்குதல் ஒரு சிறப்பு என்க.
சார்ந்துள்ளார் - நிலைமையார் - (3620) என்பன அவர்தம் பண்புகளாற் சரிதங் கூறியவாறு.

2

3620
கோதின் மரபிற் பிறந்துவளர்ந் தறிவு கொண்ட நாட்டொடங்கி
"ஆதி முதல்வர் திருநீற்றி னடைவே பொரு"ளென் றறிந்தரனார்
காத லடியார்க் கமுதாக்கி யமுது செய்யக் கண்டுண்ணும்
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார்.

3

(இ-ள்.) கோதில்....தொடங்கி - குற்றமில்லாத மரபிலே பிறந்து வளர்ந்து அறிவு தெரிந்த நாள் முதலாக; ஆதி....அறிந்து - ஆதி முதல்வராகிய சிவபெரு