| |
| உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
| 34. சாக்கிய நாயனார் புராணம் |
| தொகை |
| "வார்கொண்ட வனமுலையா ளுமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்" | |
| (6) |
| - திருத்தொண்டத் தொகை |
| வகை |
| தகடன வாடையன் சாக்கியன் மாக்கட் டடவரையின் மகடனந் தாக்கக் குழைந்ததிண் டோளர்வண் கம்பர்செம்பொன் திகழ்தரு மேனியிற் செங்கல் லெறிந்து சிவபுரத்துப் புகழ்தரப் புக்கவ னூர்சங்க மங்கை புவனியிலே. | |
| (41) |
| - திருத்தொண்டர் திருவந்தாதி |
| விரி |
3636 | அறுசமயத் தலைவராய் நின்றவருக் கன்பராய் மறுசமயச் சாக்கியர்தம் வடிவினால் வருந்தொண்டர் உறுதிவரச் சிவலிங்கங் கண்டுவந்து கல்லெறிந்து மறுவில்சரண் பெற்றதிற மறிந்தபடி வழுத்துவாம். | |
| 1 |
| சருக்கம்:- "வார்கொண்ட வனமுலையாள்" என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகை ஆறாவது திருப்பாட்டிற் போற்றப்படும் சாக்கியர் - சிறப்புலியார் - சிறுத்தொண்டர் - கழறிற்றறிவார் - கணநாதர் - கூற்றுவனார் என்ற ஆறு நாயன்மார்களது சரிதவரலாறும் பண்பும் கூறும் பகுதி; சருக்கம் - சிறு பிரிவு; புராணம் - அதனுட் பிரிவு. இம்முறையே முதலாவது சாக்கிய நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார். |
| புராணம்:- சாக்கிய நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி; இனி, ஆசிரியர் நிறுத்த முறையானே, வார்கொண்ட வனமுலையாள் சருக்கத்தில் கூறப்படும் ஆறு அடியார்களின் சரிதங்களுள் முதலாவதாகச் சாக்கிய நாயனாரது சரிதங் கூறத் தொடங்குகின்றார். |
| தொகை:- வாரினைக் கட்டிய அழகிய முலையினையுடைய உமையம்மையாரைப் பங்கினில் உடையவராகிய சிவபெருமான் கழல்களையே மறவாமற் கல் எறிந்து அதனாற் கதி கூடிய சாக்கிய நாயனாருக்கும் அடியேனாவேன். |