| |
| வார் - முலைக்கச்சு; கழல் மறவாத கல்லெறிந்தது நாயனாரது சரிதவரலாறு; ஏகாரம் - பிரிநிலை; தேற்றமுமாம்; எறிந்த - எறிந்த அதனாற் கதி பெற்ற; உமைபங்கன் கழல்களையே மறக்காமல் கல் எறிந்த - என்றது அம்மை முலைகளுக்குக் குழைந்து சுவடு கொண்டருளிய இறைவர்,சாக்கிய நாயனார் எறிந்த கல்லுக்கும் குழைந்து சுவடு கொண்டருளிய இறைவர், சாக்கிய நாயனார் எறிந்த கல்லுக்கும் குழைந்து அதனை ஏற்று அருளினர் என்ற குறிப்புப்பெற முலையாள் உமைப்பங்கன் கழலே - கல் எறிந்த என்று கூறினார்; இக்கருத்தினை வகைநூல் வகுப்பது காண்க. மறத்தல் - அயர்த்தல்; எறிந்த - எறிந்த அதுவே யாறாகச் சிவகதி பெற்ற என்க. சாக்கியர் - இவரது இயற்பெயரன்று; இவர் சமய விசாரிப்புக் கொண்டு சாக்கியராயினர் என்பது சரிதம்; சாக்கியர் - புத்தர்; அவ்வேடந் துறவாதே சிவனன்பு செய்தாராதலின் அப்பெயராற் கூறியருளினர். சிவனே எல்லாச் சமயங்களுக்கும் தாமே தலைவராய் இயங்குகின்றார் என்பது; இதனை விரிநூல் விரித்துக் காட்டியருளிய நிலை "அறுசமயத் தலைவராய் நின்றவர்" (3636) என்றதனாற் குறித்தமை காண்க. |
| வகை:- தகடன.....சாக்கியன் - தகடு போன்ற ஆடையினை உடைய சாக்கியர்; மாக்கல்....கம்பர் - பெரிய கற்களாலாகிய பெரிய இமயமலையின் மகளாராகிய பார்வதிம்மையாரின் தனம் தழுவுதலினாற் குழைந்த திண்ணிய தோல்களையுடைய திருவேகம்பரது; செம்பொன்...எறிந்து -செம்பொன் போன்று விளங்கும் திருமேனிமேல் செங்கல்லினை எறிந்தவதுவே வழியாக; சிவபுரத்து....புக்கவன்-சிவலோகத்திலே புகழ் பொருந்தப் புகுதப் பெற்றவரது; ஊர்.....புவனியிலே - ஊர் இவ்வுலகில் சங்கமங்கைப் பகுதியாகும். |
| தகடன ஆடை - புத்தர்கள் போர்க்கும் துவராடை; தகடு - மெல்லிய பொற்றகடு; "துவராடைப் படம்" (3647) என்பது விரிநூல்; சாக்கியன் - புத்தன்; இந்நாயனார் புத்த சமயத்தில் இருந்து பின் சிவநெறி யுணர்ந்து அவ்வேடத்துடனே சிவவழிபாட்டினின்றமையால் இப்பெயரால் வழங்கப்பெற்றனர்; சாக்கியன் - கவுதம சாக்கியமுனி என்ற புத்தனது பெயர்; அவனது சமயக் கோட்பாட்டார் சாக்கியர் எனப்படுவர்; சாக்கியன் - புக்கவன் - (அவனது) ஊர் சங்க மங்கைப் பதி என்று கூட்டுக; மாக்கல்.....மகள் - மாக்கல் - தடவரை - இமய மால் வரை; வரையின்மகள் - மலையரசன்மகளாய் வந்த பார்வதி; தனம்...கம்பர் - திருவேகம்பர்; இந்நாயனார் கச்சிப்பதியில் வந்திருந்து தொண்டு செய்து பேறு பெற்றாராதலின் "உமைபங்கன்" என்ற தொகை நூலுக்கு வகை நூலாசிரியர் இவ்வாறு பொருள்வகுத்தார்; இதனை விரிநூல் ஆசிரியர் "காஞ்சியணிநகரஞ் சென்றடைந்து" (3638) என விரித்தருளுதல் காண்க. காஞ்சிபுரத்தில் இந்நாயனார் கல்லெறிந்து பேறு பெற்ற ஆலயம் "முத்தீசர் கோயில்" என்று வழங்கப்பட்டு வழிபடப் பெறுகின்றது; செம்பொன் திகழ்தருமேனி - பொன்னார் மேனியனே" (தேவாரம் - நம்பி); "பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி" (பொன் - அந்.1 - சேரமான்); சிவபுரத்துப் புகப்பெற்றவன்; "மிக்க சிவலோகத்திற் பழவடிமைப் பாங்கருளி" (3652) என்பது விரிநூல். சங்கமங்கை - பதியின் பெயர்; (3636) |
| விரி:- (இ-ள்) அறுசமயத் தலைவராய்....அன்பராய் - ஆறு சமயங்கட்கும் தலைவராகி நின்ற சிவபெருமானுக்கு அன்பராகி; மறுசமய தொண்டர் - புறச் சமயச்சாக்கியர்களது வடிவினோடே வரும் தொண்டராகி; உறுதி....திறம்- உறுதி (சைவ சமயமே மெய்ச்சமய மென்றதுணிவு) வருதலினாலே சிவலிங்கத்தினைக் |