பக்கம் எண் :

[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 34. சாக்கிய நாயனார் புராணமும் உரையும்553

கண்டு மகிழ்ந்து கல் எறிந்த குற்ற நீக்கும் திருவடியினைப் பெற்ற தன்மையை; அறிந்தபடி வழுத்துவாம் - அறிந்த அளவினாலே துதிப்போம்.
(வி-ரை) இது கவிக்கூற்று; இனிக் கூறப்புகும் புராணத்தின் உள்ளுறைகூறி வகுத்துத் தோற்றுவாய் செய்தருளினர்.
அறுசமயத் தலைவராய் நின்றவர் - சிவபெருமான்; அறுசமயம் - சமயங்களெல்லாம் புறப்புறம் - புறம் - அகப்புறம் - அகம் என நான்கு வகையாகப் பகுக்கப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் முறையே அறுவகைப்படும்; புறப்புறம் - உலகாயதமும் நால்வகைப் பௌத்தமும் ஆருகதமும் என அறுவகைப்படும்; புறம் - தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாக்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும்; அகப்புறம் - பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும்; அகம் - பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என அறுவகைப்படும். இவற்றின் தன்மைகளையும் இவற்றுள் பேதங்களையும் சாரமாக வடித்தெடுத்து எமது மாதவச் சிவஞான முனிவர் சிவஞானமாபாடியத்தில் அவையடக்கப் பகுதியில் புறன் என்ற விடத்துக் காட்டியருளினர்; கடைப்பிடிக்க. (கழகப்பதிப்பு-42-45); முடிந்த முடிபாகிய சித்தாந்த சைவத்திற்கும் இவற்றுக்கும் உள்ள வேறுபாடுகளும், இவை ஏன் சமயங்கள் என வகுக்கப்பட்டன என்ற நிலைகளும், பிறவும் ஆண்டே கண்டு கொள்க. இங்கு அறுசமயம் என்றது ஒவ்வொன்றும் அறுவகையாக வகுக்கப்பட்ட நால்வகைச் சமயங்களை என்க; சமயம் - சமயங்களுக்கும் என முற்றும்மையும் நான்கனுருபும் விரிக்க.
அறுசமயத் தலைவராய் நின்றவர் சிவபெருமானே என்றது "ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்" (பிள் - தேவா); "ஆறு சமயத் தவரவரைத், தேற்றுந்தகையன" (தேவா-அரசு); "அறிவினான் மிக்க வறுவகைச் சமயத் தவ்வவர்க்கங்கே யாரருள் புரிந்து" (தேவா-நம்பி); "அறுவகைச் சமயத் தோர்க்கு மவ்வவர் பொருளாய்" (சித்தி) என்பன முதலிய திருவாக்குக்களால் அறியக்கிடக்கும் உண்மை; இத்தனை சமயபேதங்களெதற்காக வகுக்கப்பட்டன? இவை வேண்டுமா? இவை மக்களுள்ளே பிணக்கமும் கலாமும் விளையக்காரணமாகின்றனவே? என்று வினாவிப் பிணங்குவோர் பலர்; உயிர்களின் பக்குவ பேதங்கள் பலப்பலவாதலின் அவ்வப்பக்குவங்களுக் கேற்ப அத்துணையும்வேண்டப் படுவனவே என்பது சிவாகம உண்மை ஞானநூற்றுணிபு. அவற்றாள் பிணங்கி ஒழியாது ஞானநூற்றுணிபு பற்றி அவ்வவற்றுக் கேற்றவாறு படிமுறையில் வைத்துக் கண்டு, ஆன்றோர் வாய்க்கேட்டமைந் தொழுகலே அறிவுடைமை.
அறுசமயத் தலைவராய் நின்றவர் - "ஆறொன் றியசம யங்களி னவ்வவர்க் கப்பொருள்கள், வேறொன் றிலாதன" (அரசு. இன்னம்பர். திருவிருத் - 4) என்ற படி அவ்வச் சமயத்தவரும் அவ்வவர் தத்தம் சமயக் கொள்கையுள் அமைந்து அதுவதுவே முடிபு என்று கொள்ளும்படி அவரவர் பக்குவத்துக் கேற்றபடி விளக்கஞ் செய்து அங்கங்கும் நிற்றல். "அவ்வவர் பொருளாய்"(சித்தி); நின்றவர் - விளங்க நின்றவர்; தலைவராதல் - தமது நிறைவுக்குள் அவை ஒவ்வோர் அங்கமாக அமையத்தாம்" அவற்றுள் அடங்காது மேலோங்குதல்; "வேறாங்குறியது வுடைத்தாய்" (சித்தி). "சமயகோ டிகளெலாந் தந்தெய்வ மெந்தெய்வமென், றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது" என்று இக்கருத்தை அழகாக விரித்தனர் தாயுமானார்.