பக்கம் எண் :

558திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

புறச் சமய சார்வுகளும் - அதனோடு அமைவுறாது, மேலும் தாம் அதனைப் போலவே ஆய்ந்தறிந்த ஏனைச்சமணம் முதலிய புறச்சமயங்களின் முடிபுகளும்; சார்வு - ஈண்டுச் சார்வினாற் பெறப்படும் முடிபு என்ற பொருள் குறித்து நின்றது.
பொருள் - உண்மைப் பொருள். தெளிந்து - தெளிவு பெற்று; விளங்கப் பெற்று.
ஈசர் அருள் கூட - கூட - கூடுதலால்; காரணப் பொருளில் வந்தது; கூட - உணர்வு நாட்டுவர் - என்று கூட்டுக; அருள் கூடுதலாவது - சிவசத்தி பதிதல்; சத்தி நிபாதம் என்பர். " நம்பரரு ளாமையினால் - அமண் சமயங் குறுகுவார்" (1302) எனச் சைவவுண்மை உணராமைக்கும், அதனாற் பரசமயம் புகுவதற்கும் அருள் கூடாமை - எதிர்மறைக் காரணமாகக் கூறியமை போலவே, ஈண்டுப் புறச்சமயத்தினின்று உண்மையுணர்ந்து சைவநெறியிற் புகுவதற்கு உடன்பாட்டு முகத்தால் அருள்கூட என உணர்த்தியமை காண்க; எனவே உண்மைச் சமய அறிவு கொள்வதற்கும் கொள்ளாமைக்கும். அருள் கூடுதலும் கூடாமையுமே காரணமாம் என்பது உடன்பாடு எதிர்மறை இருவகையானும் காட்டப்பட்டது. இறைவர் யாவர்மட்டும் ஒப்ப அருளுடையவ னன்றே? அஃதாயின் ஒருவர்க்கருளுவதும் ஒருவர்க் கருளாமையும் என்னை? எனின் அஃது அவ்வவர் வினைகளின் பக்குவ பேதம்பற்றி என்க.
ஈறுஇல் சிவநன்னெறியே பொருளாவது - ஈறு - முடிபு; அழிவு; பொருள் - மெய்ப்பொருள்; ஈறு இல்லாமையாவது என்றும் எங்கும் ஒருபடித்தாய் நிகழ்தல்.
உணர்வு நாட்டுவார் - நாட்டுதல் - உணர்ந்த பொருளைக் கடாவிடைகளால் பலவாற்றாலும் உறுதிப்படுத்துதல்; உணர்வு என இங்குக் கூறியது பரபக்கத்தால் புறச்சமயச் சார்வுகள் எவையும் பொருளல்ல - ஆதலின் அவை போக எஞ்சி நின்ற சிவநெறியே பொருள் என்ற பொதுவுணர்வு. பரபக்க நிராகரணத்தால் நிகழ்வது. நாட்டுதல் -அதன்மேல் அம்முடிபினைச் சுபக்க ஞானத்தால் உறுதிப்படுத்துதல்; அது மேற்பாட்டாற் கூறப்படுதல் காண்க.
அந்நிலையில் - என்பதும் பாடம்.

4

3640. (வி-ரை) ஏனை எச்சமயத்தினுக்கும் இல்லாது சைவத்திற்குமட்டும் உளதாகிய தனிச்சிறப்பு இலக்கணத்தை எடுத்துக்காட்டிய சிறந்த இடம் இதுவாம். புறச்சமயத்தி னின்றவாறே ஒருவர் ஒப்புநோக்கி ஆய்ந்து கண்ட முடிபாவது இஃது; ஆதலின் இது மேலும் சிறந்ததாம்; பரசமய நிராகரணமும் சிவசமயத் தாபனமும் ஒருங்கே காணப்படும் இச்சிறந்த பொருளை ஈண்டுச் சாக்கியர் வாயிலாக வெளிப்படவைத்து இப்புராணத்தில் விளக்கிய தகுதியும் பெருமையும் உய்த்துணர்ந்து களிக்கற்பாலது.
செய்வினை....விதித்தபொருள் - செய்வினை - செய்வான் - வினைப்பயன் -கொடுப்பான் - என நான்கு பொருள்களும் ஒரு உண்மைச் சமயத்திற்கு வேண்டப்படுவன; செய்வினை என்றதனாற் பெறப்படும் காரகங்கள் எட்டனுள்ளே சிறப்புப்பற்றி இங்குக் கூறப்பட்டன வினைமுதலும் பயனுமாம்; விதித்த - உண்மை முடிபு கண்டு கூறிய;இந்நான்கும் ஒருங்கு முற்றும் பெறப்படாமையின் ஏனைச்சமயங்கள் எல்லாம் அவ்வவ்வாற்றாற் குறைபாடுபாடுடையன என்பதும், சைவமே முழுமை யுண்மையும் பெற்றுடையதென்பதும் நாயனார் கண்ட மெய்வகை - உண்மைகண்ட நிலை. வினை ஒப்பாத சமயங்கள்; வினை செய்பவனாகிய அவ்வவ்வுயிர்கள்பாற் சேர்ப்பானாகிய இறைவனை ஒப்பாத சமயங்கள் என ஏனை எல்லாம் சமயங்களும் அவ்வக் குறைபாட்டால் ஒழியத்தக்கன என்பதாம். உலகாயதம், ஏகான்வாதம், சாங்கி