பக்கம் எண் :

பெரியபுராணம்11

றது காண்க. “தவத்தினில்” (போதம். 8) என்ற விடத்து, “இனி இவ்வான்மாக்களுக்கு
முற்செய்தவத்தால் ஞான நிகழும்” என்று அதிகரணம் வகுத்து ஓதியதும் கருதுக. வழி
- வழியே வந்த; முன்னைவழி - அவ்வரசமரபின் முந்தையோர் வழி வந்த ஒழுக்கம்
என்ற குறிப்புமாம்; “மன்னிய சைவத்துறையின் வழிவந்த குடிவளவர்” (1900).
 

     மேல் - மேனோக்கியதாக; அக்கினி மேனோக்கும் தன்மை குறித்தது; “ஊர்த்துவ
ரேதசு” என்பது வடமொழி வழக்கு. “விரூபாட்சன்” என்னும் நாமமும் காண்க.

     கழலே - தொண்டே - ஏகாரங்கள் பிரிநிலை.
 
     அரசர் உரிமைத் தொழில் - என்க. உரிமையாவது அரசர் மரபின்வந்து
வழிவழி தமக்கு உரிமையாய்ப் பெறுதல்.
 
     புரியாராகிப் - புரிவார் - என்க; புரியார் - முற்றெச்சம். புரியாது.
திருத்தொண்டே - இவை மேல்வரும் இரண்டு பாட்டுக்களில் விரிக்கப்படுவன.
 
     முன்னைவழி அன்பால் - இளமை தொட்டே சிவனன்பில் விளங்குதல் அரிது;
அரசர்மரபில் வந்தோர் அரசுரிமை ஆட்சித் தொழில் புரியாது சிவனது அடிமைத்
தொழில் புரிதல் அதனினும் அரிது; இந்நிலை முன்னைத் தவத்தாலன்றி வாராது
என்பது கருத்து. “தவத்தினில்” “முற்செய்தவத்தால்” (போதம். 8)            7
 
      3755. (வி-ரை) உலகின்....அல்ல - இயல்பு - இயலுதல்; வாழ்தல்; வாழ்க்கை
செலுத்துதல் என்ற பொருளில் வந்தது. உறுதி - நிலைபேறான குறிக்கோள்; உறுதிப்
பொருள்; உறுதியல்ல - நிலைபேறுடையன வல்ல; அழியுந்தன்மையுடையன; இவை
உறுதியல்ல என்று உணர்ந்தமையால் உறுதியான இறைவன் திருத்தொண்டினையே
புரிந்தனர் என்பது.
 
     புலரி - விடியற்காலம்; இருள் புலரும் காலம். புலர்தல் - நீங்குதல்; மெலிதல்.
 
     புனித வெண்ணீற்றினும் மூழ்கி - திருநீற்றினை உத்தூளனமாக மேனி நிறைய
அணிதல் இங்கு மூழ்குதல் எனப்பட்டது; உம்மை உயர்வு சிறப்பு; குளித்தல்
எண்வகைப்படும் - அவை வருமாறு; வாருணம் (நீரின் மூழ்குதல்); ஆக்கினேயம்
(தீச்சம்பந்தமான திருநீறணிதல்); சந்தியா வந்தனத்தில் பஸ்ம ஸ்நானம் என்பதோர்
அங்கமாதலும் காண்க. மந்திரம் (மந்திரங்களை உச்சரித்தல்); மானதம்
(பிரணவத்தியானம்); திவ்வியம் மகேந்திரம் (சூரிய கிரணத்துடன் தோற்றிய மழையில்
கிழக்கு நோக்கி ஏழடி நடத்தல்); மாருதம் (வாயவ்யம்) (காற்றுக் கலந்த
பசுப்பாததூளிபட எதிரிட்டு நடத்தல்); பார்த்திபம் (சிவன்கோயில், அல்லது ஆறு
இவற்றின் மண்ணைக் குழைத்துத் தரித்தலும் குழைத்த நீரைத்தெளித்துக்
கொள்ளுதலும்); கௌரவம் (ஆசாரியர் பாததீர்த்தத்தில் மூழ்குதல் - அதனை மேலே
தெளித்தல்; உட்கொள்ளுதல்). இவற்றுள் முன் நான்கும் நித்தியம் எனவும், பின்னைய
நான்கும் நைமித்திகம் (நிமித்தம் பற்றிச் செய்யப்படுவது) எனவும் படும்.
(சைவபூஷணம்). இவற்றுள், இங்குக் கூறியது ஆக்கினேயஸ்நானம் (தீயிற்குளித்தல்).
மண்முதலிய ஐம்பூதங்களின் பொருத்தத்தாலும் தூய்மை செய்யப்படும்; அவை ஒன்றற்
கொன்றேற்றமாய் வருதலும் உலகியலிலும் வைத்துக் கண்டு கொள்க. புனித
வெண்ணீறு
- புனிதம் செய்யும் நீறு; “சுத்தமதாவதுநீறு” (தேவா). வெண்ணிறமுள்ள
நீறே அணியத்தகுந்தது.