| 10 | உடைய வாகிய தடமென் கொங்கை வேண்டாது பிரிந்த விரிபுன லூரன் பூண்டாங் ககலம் புல்குவ னெனப்போய்ப் பெருமட முடையை! வாழி; வார்சடைக் கொடுவெண் டிங்கட் கொழுநில வேய்க்குஞ் 21 | |
| 15 | சுடுபொடி யணிந்த துளங்கொளி யகலத் தண்ண லாரூர் திண்ணிதிற் செய்த சிறைகெழு செம்புனல் போல நிறையொடு நீங்காய் நெஞ்ச நீயே. 22 | |
(இ-ள்) அழகுடை....அரற்ற - அழகுடைய கிண்கிணிச் சதங்கை காலிலே சத்திக்க; தொழிலுடை...பூண்டு - கைவினையுடைய சிறுபறையினைக் கைக்கொண்டு; தேர்....ஆடி - சிறுதேரினை ஒரு தனியே இழுத்து, ஒரு களிற்றினை உருட்டி, ஒள்ளிய புழுதி படிந்து; பொருகளிறு.....பயிற்றி - போர்யானையைப் போன்ற பொலிவுடனே பின்னே தாழ்ந்து இளைஞராகிய அழகிய கழலையணிந்த சிறார்களுடனே இளநடை பழகி; அக்கரை....கட்டி - சங்குமணிகளை அரையிலே கட்டி (மார்பில்) ஐம்படைத்தாலி கட்டி; ஒக்கரை....ஊரன் - பக்கத்தே விளங்கும் புன்தலை மயிரினையுடைய குதலையாகிய அழகிய சொற்களையுடைய புதல்வனை நினைத்த பொழுதே சுரந்து பொழிந்த மிகுதியாகிய இனிய பாலினை உடையனவாகிய பெரிய மெல்லிய கொங்கைகளை விரும்பாமற் பிரிந்துபோன விரிபுனல் ஊரனது; பூண்தாங்கு...உடையை - அணிகள் தாங்கும் மார்பினைத் தழுவுவேன் என்று சென்று பெரிய மடமையை உடையையாயினை; நெஞ்சம் நீயே - எனது நெஞ்சே நீ; வாழி வாழ்வாயாக; வார்சடை....நீயே - நீண்ட சடையிற் சூடிய வளைந்த வெண்மதியினது கொழுவிய நிலவொளியைப் போன்ற சுடுபொடி யணிந்த துளங்கும் ஒளிபொருந்திய மார்பினையுடைய இறைவரது திருவாரூரில் திண்மையொடு செய்யப்பட்ட அணையினுள் தங்கியிருக்கும் செம்புனல் போல நிறைவொடு நீங்காதிருப்பாயாக. |
(வி-ரை) திணை - பெருந்திணை; துறை - பரத்தையிற் பிரிந்த தலைவனை நினைந்து தனிவருந்திய தலைவி நெஞ்சொடு புலத்தல். |
1-8. அழகுடை...புதல்வன் - இவை புதல்வனது வருணனை; கிண்கிணி பூணுதல், சிறுபறை முழக்குதல், சிறு தேருருட்டுதல், பொடியளைதல். சிறாருடன் நடைபயிறல், ஐம்படை கட்டுதல் முதலியவையும், சிறுபுன் குஞ்சி, குதலைக் கிளவியுடைமை என்ற இவை ஓராண்டுப் புதல்வர்க்குரிய அணி - செயல் - இயல் முதலியனவாம். |
3. ஒண்பொடி - புழுதி; 4. களிறு - மரத்தால் யானைபோற் செய்த விளையாட்டுப் பண்டம்; களிறனைய பொக்கம் - களிறு போன்ற பொலிவுபுடைபரத்தல் “பொக்கம் பரப்ப” (ஆளு - பிள் - உலா). பிற்றாழ்ந்த சிறார் - உடன் விளையாடும் சிறுவர். பிற்றாழ்ந்து - யானையின் தோற்றம் முன் உயர்ந்தும் பின்னே தாழ்ந்தும் காணப்படும்; அப்பொலிவு தோன்ற வருவதோர் விளையாட்டு முன்காலத்திற் சிறார் பயின்றனர் போலும் என்பர். (சிவப்பிரகாச தேசிகர் குறிப்பு). பொக்கம் - மிகுதி என்பதுமாம். ஒக்கரை யிருக்கும் - ஒக்கலை என்பதன் போலி; மருங்கில் - பக்கத்தே (இடையில்). |