8. புதல்வன் றன்னை உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால் - “பானினைந் தூட்டுந் தாய்” (திருவா) என்றபடி புதல்வனை நினைத்தபோதே முலையிற் பால்சுரத்தல் தலையன்புடைய தாயர் இயல்பு. “முன்னின் - நிலை விளம்பக், கொங்கை சுரந்த வருட் கோமகள்” என்று இதனைப் பத்திச் சுவைபட விரித்தனர்; சிவப்பிரகாசர்; (நால்வர் நான்மணிமாலை). |
11. கொங்கை வேண்டாது பிரிந்த - தலைவியுடனிருத்தலை விரும்பாது பரத்தைவயிற் பிரிந்த தலைவனது நிலை குறித்தது. |
11-18. பிரிந்த...நீயே - விரும்பாது பிரிந்த தலைவனை நினைந்தமையால் அவன்பாற்சென்று கூடுவன் என்று எண்ணிப்போன நெஞ்சமே நீ பெருமடமுடையை : வேகத்துடன் ஓடுகின்ற நீர் சிறைப்பட்டுத் தனது வேகத்தினை உள்ளடக்கி நிற்றல் போல் நிறை என்னும் குணத்தை விடாது பொருந்தி இருப்பாயாக. தலைவனது பிரிவாற்றாது அவனை நினைந்து வருந்திய தலைவி தனது மனத்தினைத் தேற்றிப்புலத்தல். உன்னை விரும்பாது பிரிந்த அவனைச் சேர நினைப்பது மடமை; ஆதலின் நிறைவொடு நீங்காது அடங்குவையாக என்றபடி. வாழி இகழ்ச்சிக் குறிப்புப்பட நின்றது; அதுவே உனக்கு வாழ்வாகும் என்றது. நெஞ்சம் நீயே! - போய்ப் பெருமடமுடையை - சிறைகெழு புனல்போல - நிறைவொடு நீங்காய் - வாழி என்று கூட்டுக. அகலம் - மார்பு; (அகன்றிருப்பது). |
17. சிறைகெழு செம்புனல்போல - விரைந்து செல்லும் புதுப்புனல் அங்கங்கும் அணைகளாற் றடுக்கப்பட்டுத் தேங்குதலாற் பயிருக்கு உதவுதல்போல், தலைவனை விரையும் உள்ளமே நீ அவ்வாறு அவமே செல்லாது நிறைவுடனிருத்தலே பயன்தரும் என்றது; பயன்பற்றி வந்த உவமம். செம்புனல் - புதுவெள்ளம். எத்துணை அணைகள் கடந்துவரினும் புதுப்புனல் செந்நிறம் மாறாது வருதல் காண்க. 22 |
| வெண்பா |
| | நீயிருந்திங் கென்போது நெஞ்சமே நீளிருட்கண் ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீயரங்கத் தைவா யரவசைத்தா னன்பணைத்தோட் கன்பமைத்த செய்வான லூரன் றிறம். 23 | |
(இ-ள்) நீள்....தோட்கு - நீண்ட நள்ளிர விருளின்கண் ஆயிரங் கைகளையும் வீசித் தீயினில் ஆடி அந்தத் தீ அரங்கத்திலே ஐந்து வாய்களையுடைய பாம்பினைச் சுற்றிக் கட்டியுள்ள இறைவரது நல்ல பெரிய தோள்களுக்கு; அன்பமைந்த....திறம் - அன்பு கூர்ந்தவற்றைச் செய்யும் நல்ல ஊரனது திறங்களை; நீ....நெஞ்சமே - நீ இங்கு நின்றுசிந்தித்துக்கொண்டு வருந்தியிருந்தமையால் என்ன பயன்; போது அவனிருக்கும் அவ்விடத்தே போதுவாயாக. |
(வி-ரை) திணையும் துறையும் அவை. நெஞ்சைத் தேற்றுதல். |
நெஞ்சமே - ஊரன்திறம் - (சிந்தித்து வருந்தி) இங்கு இருந்து என் (பயன்) - (அங்குப்) போது என்று கூட்டுக. ஆயிரம் கை - ஆயிரம் - அநேகம் என்னும் பொருள் தந்து நின்றது. “ஆயிரம் பொன்வரை போலு மாயிரந் தோளுடையானும்” (தேவாரம்). வட்டித்தல் - வீசுதல்; சுழற்றல்; தீ அரங்கத்து - அந்தத்தீயாகிய அரங்கிலே என்று சுட்டு வருவிக்க. நீளிருள் - சங்கார காலம்; “இருளிடத் துன்னைச் சிக்கெனம் பிடித்தேன்” (திருவா); ஐவாய் அரவு - இறைவர் பூண் |