| நேரிசை யாசிரியப்பா |
| | கயங்கெழு கருங்கடன் முதுகு தெருவுபட வியங்குதிமி றடவி யெறியொளி நுளையர் நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைமிகுத் தால வட்ட மேய்ப்ப மீமிசை | |
| 5 | முடிகெழு தருவலை வீசி முந்நீர்க் குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட சுரிமுகச் சங்குஞ் சுடர்விடு பவளமும் எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி விரிகதிர் நிலவுஞ் செக்கரும் தாரகை | |
| 10 | உருவதுங் காட்டு முலவாக் காட்சித் தண்ணந் துறைவன் றடவரை யகலம் கண்ணுறக் கண்டது முதலா வொண்ணிறக் காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக் கோளிழைத் திருக்குங் கொள்கை போல | |
| 15 | மணிதிகழ் மிடற்று வானவன் மருவும் அணிதிக ழகலத் தண்ண லாரூர் ஆர்கலி விழவி னன்னதோர் பேரலர் சிறந்தது சிறுநல் லூரே. 25 | |
(இ-ள்) கயம்.....நுளையர் - மிக்க ஆழமுள்ள கரிய கடலின் மேற்பரப்பு தெருவு போல வழிவிடும்படி இயங்கும் படகினைத் துடுப்பினாற் செலுத்தும் ஒளியெறியும் பரதவர்கள்; நெய்....வேண்டி - நெய்யினையுடைய மீன்களைப் படுத்தற்கு விரும்பி; கைம்மிகுத்து - கைமுயற்சிமிக்கு; ஆலவட்டம்.....வீசி ஆல வட்டம் போலத் தலையின்மேலே விளக்கமுடைய வலையினை விரித்து வீசி;; மூந்நீர்.....கொள்ளை கொண்ட - கடலின் குடரினை வாங்குதல் போல இழுத்துக் கொள்ளை கொண்ட; சுரிமுக....கூடி - சுழிந்த முகத்தினையுடைய சங்குகளும் ஒளிவீசும் பவளமும் கதிர்விரியும் முத்துக்களின் தொகுதியும் சேர்ந்து; விரிகதிர்...காட்டும் - விரியும் கதிர்களையுடைய நிலாவும் செவ்வானமும் விண்மீன்களின் கோலமும் ஆகிய இவற்றினைப் போல விளங்கும்; உலவா....துறைவன் - கெடாத குளிர்ந்த நீர்த்துறையினையுடைய தலைவனது; தடவரை....முதலா - பெரிய மலைபோன்ற மார்பினைக் காட்சிப்படக் கண்ட நாள்முதலாக; ஒண்நிறம்...ஆரூர் - ஒள்ளிய கருநிறத்தையுடைய விடத்தினைக்கொண்ட பாம்பு கதிர்வீசும் பிறையினைக் கவ்வியிருக்கும் கொள்கையினைப்போல, நீலமணிபோல விளங்கும் திருமிடற்றினையுடைய தேவதேவரும், பொருந்திய அணிகள் திகழ்தற்கிடமாகிய மார்பினையுடையவரும் ஆகிய இறைவரது திருவாரூரின்கண்; ஆர்கலி....ஊரே - கடல்போல ஒலிபரந்த திருவிழாவிற் போல சிறிய நல்ல எமது ஊர் பெரிய அலர் மொழிகளின் ஒலி சிறந்து விளங்கிற்று. |
(வி-ரை) திணை - கைக்கிளை; துறை - காண்டல். பெண்பாற்கூற்று. தலைவி கண்டு சோர்ந்தது. |
1-11. கயங்கெழு....தண்ணந்துறைவன் - தன்மை, உவமை, உருவகம் என்னும் மூன்றணிகளும் கலந்துவிளங்கும் மிக்க அருமைப்பாடுடைய பாட்டு; கயங்கெழு...வேண்டி - இவை தன்மையணி. |