கூறிய குறிப்புமுடையது. கண்ணாளன் - கண்ணுதல் - எண்ணுதல் - நினைத்தல்; உயிர்களின் ஆக்கத்தையே நினைப்பவன் என்ற குறிப்பும் உடையது. 29 |
| கட்டளைக் கலித்துறை |
| | தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் றாள்பணியா தாழ்ந்து கிடந்துநை வார்கிளை போலயர் வேற்கிரங்கிச் சூழ்ந்து கிடந்த கரைமேற் றிரையென்னுங் கையெறிந்து வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே. 30 | |
(இ-ள்) தாழ்ந்து....போல் - கீழ்த் தாழ்ந்து கிடந்த சடையினை முடியாகவுடைய சங்கரரது திருவடிகளைப் பணியாமல் பிறவியிலே ஆழ்ந்துகிடந்து வருந்துகின்றவர்களுடைய கிளைபோல; அயர்வேற்கு இரங்கி - வருந்தி யிளைக்கும் எனக்கு இரங்கி; சூழ்ந்து....விரிகடலே - சுற்றிலும் சூழ்ந்துகிடந்த கரையின் மேலே அலையென்னும் கையினை மோதி வீழ்ந்து கிடந்து சத்தித்து உறங்காமலிருக்கின்றது இந்த விரிந்த கடல். |
(வி-ரை) திணை - கைக்கிளை; துறை - கடலொடு புலம்பல்; அயர்வேற்கு இரங்கி விரிகடல் துயிலாது என்க. இரவில் கடல் மிகுந்த அலைகளை யுடைமையும் காண்க. |
தாழ்ந்து கிடந்த சடைமுடி - தொங்கிய சடையினையே முடியாக உடையவர்; “சடைமுடி சாட்டியக் குடியார்க்கு” (திருவிசைப்பா); சங்கரன் - சுகத்தைச் செய்பவன் என்ற பொருட்குறிப்பிற் கூறிய பெயர்; பணியாது.....கிளைபோல் - சங்கரனைப்பணியாதார் கிளையுடன் வருந்துவர் என்ற உண்மையினை வற்புறுத்த எழுந்த உவமை; வினைபற்றி எழுந்தது. கிளைபோல அயர்வேன் என்றது “பெற்றும் பெறாரி னழுங்கி” என்றபடி, பெரியோர் தம்மைச் சிறியோரின் வைத்து வருந்தி யிரங்கும் நிலை. |
அயர்வேற்கு இரங்கிக் கடல் துயிலாது என்றது இரவிற் றுயில்பெறாது வருந்தும் எனது துயரங்கண்டு இரங்கிக் கையெறிந்து தானும் துணையாய்த் துயிலாதிருந்தது என்றதாம்; திரை என்னும் கை எறிந்து - துயருறுவாரைக் காணிற் கருணையாளர் கையெறிந்து இரங்குதல் குறித்தது; தற்குறிப்பேற்றம். கையெறிதல் - வீழ்தல் - அலறுதல் - துயிலாதிருத்தல் - இவை ஒருவரது துன்பத்திற்கிரங்கி அன்பினால் உற்றதுணையாளர்பால் நிகழும் செயல்கள். விரிகடல் - முதலும் முடிவும் மண்டலித்து முடிந்தது. |
“என் கண்ணுளெப் போதும் வருகின்றவே” (பொன். அ. 20) என்றபடி இரவும் துயிலாது இறைவனை நினைந்து கிடப்பேனுக்கு அவனது அருளின் கடல் துணையாய் உடனிற்கின்றது என்றதொரு உட்குறிப்புத்தந்து முடித்தல் கண்டு கொள்க. 30 |
சேரமான் பெருமாள் நாயனார் என்னும் கழறிற்றறிவார் நாயனார் அருளிய திருவாரூர்த் திரு மும்மணிக் கோவையும், அதற்குக் கோவை - சிவக்கவிமணி - C. K. சுப்பிரமணிய முதலியார், B.A., எழுதிய உரையும் முற்றுப் பெற்றன. |
| கழறிற்றறிவார் நாயனார் திருவடி வாழ்க! திருச்சிற்றம்பலம் - - - - - - - |