சேரலன்....நண்ணுவார் - அரசாள்பவரது கருத்துக்கு மாறுபட்டாராதலின் அங்கிருக்க அஞ்சிச் சேரர் நாடு அணைந்தனர். சேரர் இவரது ஆட்சிக்குட்படாத முடிமன்னர் என்பதும் இதனாற் பெறப்படும். |
நண்ணுவார் - இருத்தி - எய்தியபின் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. 4 |
3934. (வி-ரை) ஒருமை உரிமை - ஒருமையாவது ஒரே நற்சார்பிற் செல்லும் ஒழுக்கம்; உரிமையாவது முடியைப் பேணிச் சூட்டி வழிவழி காக்கும் உரிமை. சோழர் ஒரு மரபுக்கே முடிசூட்டும் உரிமை என்பது மொன்று. |
ஒரு குடியை....இருத்தி - அம்பலவாணர் பூசைக்கும் திருவாபரணங்களின் காவலுக்கும் ஒருகுடி இங்கு இருத்தல் வேண்டுமாதலின் அதனோடு இந்த மணிமுடியினையும் காவல் புரியும்படி வைத்துச் சென்றனர் என்க. |
அருமை புரிகாவல் - அரிதாகிய காப்பு; அருமையாவது அதன் தகுதிக்கேற்றபடி வல்லவாறு எல்லாம் இயற்றுதல். |
இருமை மரபும் தூயவர் - “இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி” (திருமுருகு); இருமைமரபு - தந்தைவழி தாய்வழி யிரண்டும். |
வரும் ஐயறவு - முடிசூடுதற்கு எண்ணியபடி கிடைக்கப் பெறாதபடியால், வேறு என் செய்வது என்று தோன்றாதநிலை ஐயுறவு எனப்பட்டது; முடிசூடுதலை விடுதலோ? அன்றி அதற்கு வேறுவழி தேடுதலோ? இன்னது செய்வது என்று தோன்றாதநிலை. |
மன்றுளாடுங் கழல் பணிவார் - தில்லைவாழந்தணர்கள்பால் அந்த மணிமுடியிருத்தலானும், அவர்களே அது சூட்டுவித்தற்குரிமையுடையா ராதலானும், அவருள் தாமும் ஒருவராய் உடையவராய் முதல்வராயுள்ள அம்பலவர் கழல் பணிவாராகி முடிசூடப் பெறவேண்டி வேண்டினார் (3935) என்க. தில்லைவாழந்தணர் புராணத்துள் முதலில் அம்பலவர் துதிசெய்தமைபற்றி உரைத்தவை ஈண்டு நினைவு கூர்தற்பாலன. பணிவார் - முற்றெச்சம். பணிவார் - துயில்வோர்க்கு எனவரும் பாட்டுடன் முடிக்க. |
பணிந்தார் - என்பதும் பாடம். 5 |
3935. (வி-ரை) அற்றை நாள் - ஐயுறவால் மனந்தளர்ந்து நின்று பணிந்த அன்று. இரவின்கண் - கனவில் என்று கூட்டுக. |
பேறு - பேறாக; பேறாகப் பாதம் பெறவே என்க. |
பேறு - மணிமுடிகள் எல்லாம் சடப் பொருளாய் அழியுந்தன்மையன; மலர்ப்பாதம் அவ்வாறன்றி ஞானமயமாய் என்றுமழியாத தன்மையுடையது. ஆதலின் பேறு என்றார். “எவற்றையும் ஒருங்கே ஓரியல்பா னறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ் சுடர்முடியும்” (போதம் - 8. சிற்றுரை) என்றது காண்க. |
பாதமே முடியாகப் பெற்ற பேறு - உமது பாதம் என்னும் ஞானமயமாகிய திருவடியின்கீழ் எனது முடியானது தாடலைபோல் அடங்கி நிற்க என்ற பொருட் குறிப்பும் காண்க. |
பற்று விடாது துயில்வோர் - துயிலும்போதும் இந்நினைவு விடாத நிலையில் துயில்வோர். |
பாதமலரளிக்க உற்ற அருளால் - பாதங்களையே முடியாகச் சூட்டியருள அத்திருவருளின் துணையாலே. |