அவை தாங்கி - பாதங்களையே முடியாகத் தாங்கிக்கொண்டு. |
தனிப்புரந்தார் - ஒப்பற்ற அரசு செலுத்தினார். பொதுக் கடிந்து என்றலுமாம். |
பாதமலர்தாங்கி - உலகு புரந்தார் - இராமனது பாதுகைதாங்கிப் பரதன் உலகாண்டனன் என்ற இராமன்கதைப் பகுதி ஈண்டு நினைவு கூர்தற்பாலது. 6 |
| 3936. | அம்பொ னீடு மம்பலத்து ளாரா வமுதத் திருநடஞ்செய் தம்பி ரானார் புவியின்மகிழ் கோயி லெல்லாந் தனித்தனியே இம்பர் ஞாலங் களிகூர வெய்தும் பெரும்பூ சனையியற்றி உம்பர் மகிழ வரசளித்தே யுமையாள் கணவ னடிசேர்ந்தார். 7 |
(இ-ள்) அம்பொன்....தம்பிரானார் - அழகிய பொன்னாலியன்ற திருவம்பலத்திலே ஆராவமுதமயமாகிய திருநடனத்தினைச் செய்கின்ற பெருமானார்; புவியின்....இயற்றி - இந்நிலவுலகத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற கோயில்களில் எல்லாம் தனித்தனியாக இவ்வுலகத்துயிர்கள் இன்பமடையும்படி பொருந்துகின்ற பெரும்பூசனைகளைச் செய்வித்து; உம்பர் மகிழ அரசளித்தே - தேவர்கள் மகிழும்படி அரசாட்சி செய்து; உமையாள் கணவனடி சேர்ந்தார் - உமைபாகராகிய சிவபெருமான்றிருவடி சேர்ந்தனர். |
(வி-ரை) அம்பொன் நீடும் அம்பலம் - “முழுதும் வானுல கத்துள தேவர்கள்....தூயசெம் பொன்னினால், எழுதி வேய்ந்த சிற்றம்பலம்” (தேவா) என்றபடி தேவர்களும், பின்னர் இரணிய வர்மன் முதலிய அரசர்களும் அவ்வக்காலங்களில் முறையே பொன் வேய்ந்து வந்தமையால் பொன்நீடு என்றார். “அம்பொ னீடிய வம்பலம்” (440) |
ஆரா அமுதத்திருநடம் - தெவிட்டாத - குறைவு படாத - அமுதம் போன்ற திருநடனம். அமுதம் - மரணம் தவிர்ப்பது. தேவரமுதம் சில காலம் நீடிக்க மரணமின்றி வைப்பினும் பிறவிக்கேதுவாவது; ஆதலின் மரணத்துக்கு மேதுவாவது; திருநடனம் அவ்வாறின்றி, என்றைக்கும் பிறவியில் மீளாத நிலையுடன் பேர் இன்பமும் தருவது. தம்பிரானார் - அவரது திருவடியே முடியாகச் சூடியமையால் தமது பெருமான் என்றார். |
கோயில்....இயற்றி - இறைவர் கோயில்களிற் பூசை வழுவாது நிகழச்செய்தல் அரசரது கடமைகளுள் ஒன்று. “எங்குமாகி யிருந்தவர் பூசனைக், கங்கண் வேண்டு நிபந்தமா ராய்ந்துளான், துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்” (100); “மங்கையைப் பாக மாக வைத்தவர் மன்னுங் கோயி, லெங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட லாடல், பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து” (469); “புற்றிடங்கொள் புனிதர்க் கமுதுபடி முதலா, நீதி வளவன் றான்வேண்டு நிமந்தம் பலவு மரியணையின், மீது திகழ விருந்தமைத்தான் வேதா கமநூல் விதிவிளங்க” (1884) என்பன முதலியவற்றால்இவையே யாண்டும் அரசர்க்குரிய முதற்கடமையாக வகுத்து வற்புறுத்திக் காட்டிய ஆசிரியரது அருளிப்பாடு காண்க. |
தனித்தனியே - ஒரு கோயிலுக்காயின திருவமுது முதலியவற்றையே எல்லாக் கோயிற் சுவாமிகளுக்கும் கைகாட்டும் கோயில் அதிகாரிகள் இதனை நோக்கித் தக ஒழுகுவார்களாக. |