பக்கம் எண் :

பெரியபுராணம்219

     இம்பர் ஞாலம் களிசிறக்க - பரார்த்த பூசை என்பர்; கோயிற் பூசைகள் உலகம்
வாழ அரசராற் செய்யப்படுவன. இவை நன்கு செய்யப்படின் உலகம்களித்துத் தழைத்து
ஓங்கும்; செய்யாவிடின், அதற்கு மாறாக உலகம் துன்பமடையும் என்று எதிர்மறை
முகத்தால், “முன்னவனார் கோயிற் பூசைகண் முட்டிடின், மன்னர்க்குத் தீங்குள வாரி
வளங்குன்றும்; கன்னங் களவு மிகுத்திடுங் காசினி” என்று நாட்டுக்கும் அரசுக்கும்
கேடுவருமென்ற சிவாகம ஆணைவழி அறுதியிட்டருளிய திருமூலர் திருமந்திரமும்
காண்க.
 
     எய்தும்பூசனை - பெரும்பூசனை - எனப் பிரித்துக் காட்டி நித்திய
நைமித்திகங்கள் எனப்படும் இரண்டும் கொள்ளத்தக்கன.
 
     இயற்றி - இயற்றுவித்து; நிபந்தங்கள் நியமித்து.
 
     உம்பர்மகிழ அரசளித்தே - அறநூல் வழியான செங்கோலரசு மழைக்குக்
காரணமாய் வானவர் பூசைக்கும் ஏதுவாதல் குறிப்பு. இறைவரது பூசையினால் உலகம்
மகிழவும், அரசாட்சியினால் உம்பர் மகிழவும் என்க.                         7
 
3937.    காதற் பெருமைத் தொண்டினிலைக் கடல்சூழ் வையங் காத்தளித்துக்
கோதங் ககல முயல்களந்தைக் கூற்ற னார்தங் கழல்வணங்கி
நாத மறைதந் தளித்தாரை நடைநூற் பாவி னவின்றேத்தும்
போத மருவிப் பொய்யடிமை யில்லாப் புலவர் செயல்புகல்வாம்.    8
 
     (இ-ள்) காதல்...அளித்து - பெருவிருப்பமுடைய பெருமையுடைய
திருத்தொண்டினிலைத்த கடல் சூழ்ந்த உலகத்தைக் காத்து அரசளித்து;
கோது....வணங்கி - குற்றம் நீங்கும்படி முயன்ற களந்தைக் கூற்றுவநாயனாரது
திருவடியை வணங்கி, (அத்துணை கொண்டு); நாதமறை....மருவி - நாத உருவாகிய
வேதங்களைத் தந்து உலகளிக்கும் இறைவரை நடைநூலின் பாக்களால் சொல்லித்
துதிக்கும் சிவபோதம் பொருந்தி; பொய்யடிமை...புகல்வாம் - பொய்யடிமையில்லாத
புலவர் என்ற திருக்கூட்டத்திற் சேர்ந்த அடியார்களது செயலினைச் சொல்லப்
புகுகின்றோம்.
 
     (வி-ரை) ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிப் போந்த சரிதத்தை வடித்து
முடித்துக் காட்டி, இனி, மேற் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
 
     காதற் பெருமைத் தொண்டு - பெருவிருப்பம் விளைத்தற்கேதுவாகிய
பெருமையுடைய திருத்தொண்டு.
 
    தொண்டின் நிலை - இந்நாயனார் திருத்தொண்டின் நிலைத்த தன்மைகள் முன்
(3930 - 3935 -3936) கூறப்பட்டன.
 
    தொண்டின் நிலை(யில்) - காத்து - அளித்து - இறைவரது திருவடியே
முடியாகக் கொண்டு அரசு செய்து என்ற சரிதப் பகுதி; “அவைதாங்கி - புரந்தார்”
(3935).
 
    கோதங் ககல முயல் - கோது - ஆணவமலக்குற்றம். “ஆழ்க தீயது;
எல்லாமரனாமமே, சூழ்க - வையக முந்துயர் தீர்கவே” என்ற திருப்பாசுரம் காண்க.
 
     களந்தைக் கூற்றனார் - “கூற்றன் களந்தைக்கோன்” (தொகை);
“களப்பாளனாகிய கூற்றுவனே” (வகைநூல்); (களப்பாள் - களப்பாளன் - களந்தை
முதல்வன்).