பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)220

     வணங்கிப் (அத்துணை கொண்டு) புகல்வாம் - என்க. அத்துணைகொண்டு
குறிப்பெச்சம்.
 
     நாதமறை - நாத உருவின் வெளிப்படுத்தப் பெற்ற மறை. சத்தவடிவம்.
 
     தந்து அளித்தார் - தந்து உலகினைக் காத்த இறைவர். உலகமுய்ய வழிகாட்டி
வேதங்களை அருளியவர்.
 
     நடைநூற்பாவின் - நடை - பாக்களுக்கு விதித்த ஒழுங்கு. யாப்பு இயல். நடை
- ஒழுக்கம் என்றலுமாம்.
 
     போதம் - சிவபோதம்; பாவினால் நவிலப் பெறுவதெல்லாம் இறைவன்
புகழ்களேயாதல் வேண்டும்; ஏனைப்பொருள் எவையும் பாடத்தக்கவையல்ல என்னும்
அறிவு. “பொய்ம்மை யாளரைப் பாடாதே” (தேவா). “இறைவன் பொருள் சேர்புகழ்
புரிந்தார்” (குறள்) என்றவிடத்து “இறைமைக் குணங்க ளிலராயினாரை
உடையரெனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாதலின், அவை
முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டது” என்று ஆசிரியர்
பரிமேலழகர் உரைத்தவை ஈண்டு நினவு கூர்தற்பாலன.
 
     பொய்யடிமையில்லாப் புலவர் - முதனூற் சொற்பொருள் ஆட்சி. (தொகை)
 
     செயல் புகல்வாம் - தொகுதிப்பட்ட திருக்கூட்டத்து அடியார்களாதலின்
சரிதவரலாறாகிய பகுதிகளன்றிச் செயற் பண்பு மட்டின் எடுத்து போற்றுவோம் என்பார்
செயல் - என்றார். செயல் - செயல்கையின்றிறம்; பண்பு, தன்மை என்ற பொருடந்து
நின்றது.                                                             8
 
    சரிதச்சுருக்கம்:- கூற்றுவநாயனார் களந்தை என்னும் களப்பாள் என்கிற
பதியில் வாழ்ந்தவர். கூற்றனார் - அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும்
ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வருளின் வலிமையாலே
நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்றுத் தம் தோள் வல்லமையால் பல போர்களிலும்
பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளை யெல்லாம் கவர்ந்து, மணிமுடி
ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையராய் விளங்கினார்.
 
    மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய
தில்லைவாழந்தணர்களைக் கேட்டனர். அவர்கள் சோழர் குலமுதலோர்க்கன்றி முடி
சூட்டமாட்டோம் என்று மறுத்துத், தம்மில் ஒரு குடியை மணிமுடியைக் காவல்
செய்யும்படி வைத்து, இவராணைக்கு அஞ்சிச், சேரநாட்டுக்குச் சென்றுவிட்டனர்.
     அதுகண்ட கூற்றனார் ஐயுறவுற்று “முடியாக உமது பாதம் பெறவே வேண்டு”
மென்று பரவி, அந்நினைவுடன்றுயின்றனர். அன்றிரவு மன்றிலாடும் பெருங் கூத்தர்
எழுந்தருளி, அவ்வாறே தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள,
அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர்.
 
    இறைவர் கோயில்களிலெல்லாம் உலகு வாழப் பூசை புரிவித்தனர். இவ்வாறு
 உம்பர் மகிழ நல்லரசாட்சி புரிந்திருந்து இறைவனடி சேர்ந்தனர்.
 
     தலவிசேடம்:- (1) களந்தை - (களப்பாள்) இது சோழநாட்டில்
திருத்துறைப்பூண்டிக்கு மேற்கே திருக்களரினின்றும் தென்மேற்கில் கற்சாலை வழி 2
நாழிகை யளவில் முள்ளியாற்றின் தென்கரையில் உள்ளது.
 
     (2) தொண்டைநாட்டில் உள்ள பொன்விளைந்த களத்தூர் என்று கூறுவாருமுண்டு.