பக்கம் எண் :

பெரியபுராணம்225


சிவமயம்
திருச்சிற்றம்பலம்

40. பொய்யடிமையில்லாத புலவர் புராணம்
- - - - -

தொகை

“பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (7)

வகை

“தரணியிற் பொய்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர்
பரணர்நக் கீரர் முதனாற்பத் தொன்பது பல்புலவோர்

அருணமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - 49
 

விரி

3939. “செய்யுணிகழ் சொற்றெளிவுஞ் செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே” யெனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே யாளானார்
பொய்யடிமை யில்லாத புலவரெனப் புகழ்மிக்கார்.
                  1
 
     சருக்கம்;- இனி, நிறுத்த முறையானே, எட்டாவதாகத் திருத்தொண்டத்
தொகையினுள் “பொய்யடிமையில்லாத புலவர்” என்று தொடங்கும் திருப்பாட்டிற்
றுதிக்கப்படும் அடியார்களது பண்பு கூறும்பகுதி; அவராவார் பொய்யடிமை யில்லாத
புலவர், புகழ்ச்சோழர், நரசிங்க முனையரையர், அதிபத்தர், கலிக்கம்பர், கலியர்,
சத்தியார், ஐயடிகள் காடவர்கோன் என்னும் எண்மராவார்.
 
     புராணம்;- அவருள், நிறுத்த முறையானே, முதலாவதாகப் பொய்யடிமையில்லாத
புலவர் பண்பு கூறத்தொடங்குகின்றார். பொய்யடிமையில்லாத புலவர் என்ற
கூட்டத்தார்களது பண்பு கூறும் பகுதி; திருக்கூட்டத்தவர்களாதலின் சரித வரலாறு
கூறுதற்கியைபின்மையுணர்க. இவர்கள் பண்பினால் மட்டும் அறியப்படுவர். தில்லை
வாழந்தணர், பத்தராய்ப் பணிவார் முதலியவர் புராணங்கள் பார்க்க.
 
     தொகை;- பொய்யடிமையில்லாத புலவர் என்று கூறப்படும் திருக்கூட்டதினைச்
சேர்ந்த அடியார்களுக்கு நான் அடியேனாவேன். புலவர் - பலபேர் என்பது.