| 3962. | மலையொடு மலைகள் மலைந்தென, வலைமத வருவி கொழிப்பொடு சிலையினர் விசையின் மிசைத்தெறுங், கொலைமத கரிகொலை யுற்றவே. |
(இ-ள்) மலையொடு....மலைந்தென - மலையோடு மலைகள் பொருதனபோல; அலைமத...கொழிப்பொடு - அலைபோலப் பாயும் மதமாகிய அருவியின் ஆர்ப்புடனே; சிலையினர்.....தெறும் - மேலேறிய வில்வீரர்களின் செலுத்துகின்ற வேகத்தினும் அழிவு செய்யும் தன்மையுடைய; கொலை.....கொலையுற்றவே - கொலை செய்கின்ற யானைகள் தாமும் கொலையுண்டன. |
(வி-ரை) மலையொடு....மலைந்தென - யானைகள் ஒன்றோடொன்று முட்டிப்பொருதல் மலைகள் பொருவன போன்றன என்பதாம்; மெய்யும் வினையும்பற்றி வந்த உவமம். இவ்வடி முற்றுமோனை. “மலைகளுடன் போதுவ போன்ற” (3795). |
அருவி கொழிப்பொடு....தெறும் - என்று கூட்டுக. மலைகளை உவமை கூறியதனால் அருவியும் ஈரிடத்தும் ஒக்குமென்றவாறு. |
சிலையினர் - மேலேறிக் கடவும் வில்வீரர்கள்; விசையின் - இன் - ஒப்புப் பொருளில் வந்த ஐந்தனுருபு. |
விசையின் - கடவி ஏவும் விசையினாலே என ஏதுப் பொருள் கொள்ளலுமாம். |
கொலை மதகரி கொலையுற்ற - ஒரு யானையைக் கொலைசெய்த யானை தானும் பிறிதொன்றதனாற் கொலையுண்டது; இவ்வாறு பல - என்பார் உற்ற என - அகரவீற்றுப் பலவறி சொல்லாற் கூறினார். கொன்றான் கொல்லப்படுவான் என்று வினைப்பயன் பற்றிய ஞானநூற் கருத்துப்பட நின்ற குறிப்பும் காண்க. இப்பாட்டால் யானைப் போரின் மூண்டநிலை கூறப்பட்டது. 21 |
| வேறு |
| 3963. | சூறை மாருத மொத்தெதிர், ஏறு பாய்பரி வித்தகர், வேறு வேறு தலைப்பெய்து, சீறி யாவி செகுத்தனர். 22 |
(இ-ள்) சூறை மாருதம் ஒத்து - சூறாவளியைப் போன்று; எதிர்....வித்தகர் - எதிரெதிராக ஏறுதலைக்கொண்டு பாய்கின்ற குதிரை வீரர்கள்; வேறு....செகுத்தனர் - வெவ்வேறாக எதிர்த்துச் சினந்து ஒருவரை யொருவர் கொன்றனர். |
(வி-ரை) சூறை மாருதம் - சூறாவளி; மிக்கவேகமாய் எறியும் சண்டமாருதம்; வாயுவேகம் என உவமிக்கும் மரபுபற்றிக் கூறினார். |
எதிர் ஏறுபாய் - எதிர்த்துச் செல்லும் ஏற்றத்தினை மேற்கொண்டு பாயும்; ஏறு - ஏறுதல்; முதனிலைத் தொழிற்பெயர்; ஏறு - பரி என்று வினைத்தொகையாகக் கொள்ளினும் அமையும். |
பரிவித்தகர் - குதிரை வீரர். பரி - குதிரையினைச் செலுத்தும் வித்தை; வித்தகம் - அறிவு. வித்தகர் - சதுரப்பா டுடையவர். “வித்தகர்க் கல்லா லரிது” (குறள்). |
தலைப்பெய்தல் - ஒரு சொல். கூடுதல் - முட்டுதல். |
பரிகளை ஆவி செகுத்தனர் என்றலுமாம். |
இப்பாட்டால் குதிரைப்போர் மூண்டநிலை கூறப்பட்டது. 22 |
| 3964. | மண்டு போரின் மலைப்பவர், துண்ட மாயிட வுற்றெதிர், கண்ட ராவி கழித்தனர், உண்ட சோறு கழிக்கவே. 23 |