பக்கம் எண் :

பெரியபுராணம்251

     (இ-ள்) மண்டு....துண்டமாயிட - மிக்க போரிலே எதிர்த்துச் சண்டை
செய்பவர்கள் துண்டமாகும்படி; உற்று எதிர் கண்டர் - பொருந்தி எதிர்த்த கண்டர்கள்;
ஆவி......கழிக்கவே - (தாம் எதிர்வீரர்களைக் கொல்ல) உண்ட சோற்றுக் கடனைக்
கழிக்கப் போரில் பொருது தாமும் (எதிரிகள் செயலால்) உயிர்நீத்தனர்.
 
     (வி-ரை) மலைப்பவர் - பொரும் வீரர்கள்; துண்டமாதல் - உடல்
பலகூறுபடுதல்; துண்டம் - உடற்பகுதி; கண்டர் - கண்டம் செய்பவர்; நிர்க்கண்டகர்
என்றலுமாம். ஆவி கழித்தனர் - உயிர் கழிக்கப்பட்டனர்.
 
     சோறு கழித்தலாவது சோறுண்ட கடமையினைக் கழித்தல்; சோறு -
சோற்றுக்கடன் என்ற பொருளில் வந்தது. ஆகுபெயர், கழித்தல் - கடமை
செலுத்துதல். “செஞ்சோற்றுக் கடனின்றே கழியே னாகிற், றிண்டோள்கள்
வளர்த்ததனாற் செயல்வே றுண்டோ?” (வில்லி - பாரதம்) உண்ட - உண்ணப்பட்ட.
 
     துண்டமாயிடவுற்று - ஆவி கழித்தனர் - பகைவரையும் கொன்று தாமும்
கொல்லப்பட்டனர். “அவனு மறிந்தன னாயினர் பலருளர்” (627).
 
     இதனால் காலாட் படைப்போர் கூறப்பட்டது.                       23
 
3965. வீடி னாருட லிற்பொழி, நீடு வார்குரு திப்புனல்,
ஓடும் யாறென வொத்தது, கோடு போல்வ பிணக்குவை.            24
 
     (இ-ள்) வீடினார்....ஒத்தது - துண்டமாக்கப்பட்டு இறந்தவர்களது உடலினின்றும்
பொழியும், நீடி ஓடுகின்ற இரத்த நீர்ப்பெருக்கானது ஓடும் யாற்றைப் போல நிகழ்ந்தது;
கோடுபோல்வ பிணக்குவை - இறந்த வீரர்களின் பிணக்குவியல்கள் மலைபோன்றன.
 
     (வி-ரை) உடலிற்பொழி குறுதிப்புனல் - துண்டமாக்கப்பட்ட உடலினின்றும
 இரத்தம் நீண்டநேரம் பெருகி வடியும் என்பது. குருதிப்புனல் - உருவகம்.
 
     யாறு என ஒத்தது - ஊறிப் பெருகி ஓடுதல் பொதுத்தன்மை; வினைபற்றிய
உவமம்.
 
     பொழி நீடு வார் - பொழிதல் - மிகுதியாய் வருதல்; நீடுதல் - நீண்டு
வருதல்; வார்தல் - தொடர்ந்து வருதல்; குருதி - இரத்தம்.
 
     கோடு - மலை; கோடு - யாறு என்பதற்கேற்ப அதன் கரை
என்றுரைப்பாருமுண்டு; யாறு மலையினின்றும் ஊறிப் பெருகுதலால் கோடு மலை
என்பது பொருந்துவதாம்.
 
     போல்வ - எனப் பன்மையிற் கூறுதலால், குவை - பல குவியல்கள் என்க.
 
     வீடினார் - வெட்டி வீழ்த்தப்பட்டு வீடினார். வினையாலணையும் பெயர்.
 
     என ஒத்தது - என - என்னும்படி. இருபுறமும் ஒத்தலின் இரண்டு உவம
உருபுகள் வைத்தார்.                                                24
 
3966. வானி லாவு கருங்கொடி மேனி லாவு பருந்தினம்
ஏனை நீள்கழு கின்குலம், மான வூணொ டெழுந்தவே.             25
 
     (இ-ள்) வான்.....கொடி -ஆகாயத்தில் பறக்கின்ற கரிய காக்கைகளும்,
மேல்.....குலம் - அவற்றின்மேல் சஞ்சரிக்கும் பருந்தின் கூட்டமும் ஏனை நீண்ட
கழுகுகளின் வகைகளும்; மான.....எழுந்த - பெரிய உணவாகிய
மாமிசத்துண்டங்களுடன்மேல் எழுந்தன.