பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்270

     மானம் அழிதன்மை - “மானம் படவரின் வாழாமை முன்னினிதே” என்பது
நீதிநூல். இவர் மானம் அழிதன்மை வரும் காமக் குறிகள் பலவும் வெளிப்பட நிகழ்ந்த
ஊனம் விளங்கவும் நின்றனர் என்பதாம்.
 

     நீறணிந்து - அவ்வூன நிகழ் மேனியில் அதனுடன் பொருந்தாத திருநீற்றினையும்
அணிந்து கொண்டு; நீறணிதலே அடியாராந் தன்மை தருவது என உணர்ந்தாராதலின்
காமக்குறிவிளங்க மானநிலையழி தன்மை வெளிப்பட இருப்பினும் நீற்றினையும்
அணிந்து வந்தார். இச்செயலே மேற்சரித விளைவுக்குக் காரணமாயிற்றென்க.
 

     ஒருவர் - இத்தன்மையில் வந்தவர் இவர் ஒருவரேயாம் என்பது; ஒப்பில்லாதவர்
என்பதுமாம்; என்னை? இப்புண்ணிய சரித விளைவுக்கு ஏதுவாயிந்தமைபற்றி.   5
 

3988. மற்றவர்தம் வடிவிருந்த படிகண்டு மருங்குள்ளார்
உற்றவிகழ்ச் சியராகி யொதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனா ரெதிர்சென்று கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங் கொண்டாடிப் பேணுவார்;                 6
 
3989.   சீலமில ரேயெனினுந் திருநீறு சேர்ந்தாரை
ஞாலமிகழ்ந் தருநரக நண்ணாம லெண்ணுவார்
பாலணைந்தார் தமக்களித்த படியிரட்டிப் பொன்கொடுத்து

மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடைகொடுத்தார்.           7
 
     3988. (இ-ள்) மற்றவர்தம்....படிகண்டு - மற்றும் அவருடைய வடிவம் இருந்த
தன்மையினையே பார்த்து; மருங்குள்ளார்...தமைக் கண்டு - பக்கத்தில் இருந்தவர்கள்
இகழ்ச்சியோடும் அவரை அணுகாமல் அருவருத்து ஒதுங்குவாராக அதனைக் கண்டு;
கொற்றவனார்....பேணுவார் - அரசர் அவரெதிரே சென்று கைகூப்பி வணங்கி
அழைத்துக்கொண்டு வந்து அத்தன்மையுடைய அவரை மிகவும் பாராட்டி
உபசரிப்பாராகி,                                                    6
 
     3989. (இ-ள்) சீலமிலரே......எண்ணுவார் - உலகியல் நெறியாகிய சீலஒழுக்கம்
இல்லாதவர்களேயானாலும் திருநீற்றினைச் சார்ந்த அடியவர்களை உலகத்தார் இகழ்ந்து
அதனால் கொடிய நரகமடையாமல் உய்யவேண்டும் என்று சிந்திப்பவராய்;
பாலணைந்தார்....கொடுத்து - அங்கு அணைந்தவர்களுக்குக் கொடுத்ததனிலும்
இரட்டிப்பாக இருநூறு பொன்கொடுத்து; மேலவரை...கொடுத்தார் - அதன்மேல்
அவரைத் தொழுது இனிய மொழிகளைச் சொல்லி உபசரித்து அவருக்கு விடை
கொடுத்தனர்.
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.
 
     3988. (வி-ரை) ஒதுங்குவார் தமைக்கண்டு - அந்த அடியார் அணிந்த
திருநீற்றின் தன்மையினைப் பார்த்தும் அவரது உடற்றன்மையான நிலையினையே கருதி
அருவருத்துப் பக்கத்திலிருந்தவர்கள் ஒதுங்கிய நிலையினைப் பார்த்து; இருந்தபடி -
இருந்த தன்மையினையே; ஏகாரம் தொக்கது.
 
     பேணுவார் - எண்ணுவார் - திருநீற்றினை அணிந்த நிலையே பேணத்தக்கது
என்பது ஒன்று; உலகர் அவ்வாறு பேணாது உடலின்நிலையே கண்டு இகழ்ந்தனராயின்
நரகடைவர்; அவ்வாறு அடையாத உலகினரைத் காத்துச் சிவநெறிகாட்டுதல் வேண்டும்
என்று உலகர்பாற்கொண்ட இரக்கம் மற்றொன்று என்பார், பேணுவார்