பக்கம் எண் :

பெரியபுராணம்289

இம்மையில் இல்வாழ்க்கையினை யுடைய ஒருவர் (நாயனார்) பற்றறக் களைந்ததனால்
இவரது மேன்மை புலப்படும். பெரும்பற்று - விடுதற்கருமை குறித்தது.
 
     புரை அற எறிதலாவது - அப்பற்றுத் தம்மிடம் சிறிதும் சாராது
முற்றக்களைதல்; வாகீசர் முன்பு திருமுற்றத்தில் பொன்னினொடு நவமணிகள்
பொலிந்திலங்க இறைவர் அருளியதும், அவற்றை அவர் பூம்பொய்கையில்
எறிந்ததுமாகிய வரலாறு ஈண்டு நினைவுகூர்தற்பாலது.
     இகல் - ஒப்பு; இகல் - வெறுப்பு என்று கொண்டு அதனை இறைவர்க்கு ஆகும்
பண்டமாக இகலின்றி விரும்பிய சிறப்பு என்றலுமாம். புரையற - என்றதும்
அக்குறிப்புடையது; தேவர் (பொழிந்தனர்) என்ற எழுவாய் அவாய் நிலையான்
வருவிக்கப்பட்டது, மாரி பொழிதற்குரியார் அவரே யாகலின்.               18
 
4010.    பஞ்ச நாதமு மெழுந்தன; வதிபத்தர் பணிந்தே
யஞ்ச லிக்கரஞ் சிரமிசை யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோக நண்ணி
யஞ்சி றப்புடை யடியர்பாங் குறத்தலை யளித்தார்.                 19
 
     (இ-ள்) பஞ்ச....எழுந்தன - ஐவகைத் தேவவாத்தியங்களும் எழுந்து ஒலித்தன;
அதிபத்தர்...நின்றவரை - நிலமுற விழுந்து வணங்கி எழுந்து குவித்த கைகளைச்
சிரமேற் கூப்பி நின்றவராகிய அதிபத்தரை; சிவலோகம்.....பாங்கு உற - சிவலோகத்தைச்
சேர்ந்து அழகிய சிறப்பினையுடைய அடியார்களோடு இருக்கும்படி; நஞ்சு.....மிடற்றவர் -
விடமுண்ட ஒளிபொருந்திய கண்டத்தினையுடைய இறைவர்; தலையளித்தார் -
திருவருள் பாலித்தார்.
 
     (வி-ரை) (அதிபத்தர் நின்றார்;) நின்றவராகிய அவரை என்று கூட்டுக;
நின்றவரைப் பாங்குறத் தலைஅளித்தார் - என்க.
 
     தலையளித்தல் - ஒரு சொல்; சிறந்த அருள் வழங்குதல்; தலையளி -
பெருங்கருணை.
 
     நஞ்சு வாண்மிடறு - கரிய நஞ்சு நீலமணிபோல விளங்கும் கழுத்து. வாள் -
ஒளி.
 
     சிவலோகம்.....பாங்குற - இவ்வுலகில் அடியாரோ டிருத்தலன்றி மீளா நிலையிற்
சிவலோகத்திலும் அடியார்களோடிருக்க. தஞ்சிறப்புடை - என்பதும் பாடம்.  19
 
4011. தம்ம றம்புரி மரபினிற் றகும்பெருந் தொண்டு
மெய்ம்மை யேபுரி யதிபத்தர் விளங்குதாள் வணங்கி
மும்மை யாகிய புவனங்கண் முறைமையிற் போற்றுஞ்
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்.          20
 
     (இ-ள்) தம்மறம்புரி....வணங்கி - கொலைத்தொழில் புரியும் தமது மரபுக்குரியபடி
நின்றவாறே தகுதியாகிய பெரிய திருத்தொண்டினை உண்மையிற் பிறழாது செய்த
அதிபத்த நாயனாரது விளக்கம் செய்யும் திருவடியை வணங்கி (அத்துணை கொண்டு);
மும்மையாகிய...பகர்வாம் - மூன்று உலகங்களும் முறைமையினாற் போற்றுகின்ற
செம்மையுடைய நீதியினை உடையராகிய கலிக்கம்ப நாயனாரது திருத்தொண்டினைச்
சொல்வோம்.
 
     (வி-ரை) ஆசிரியர் இதுவரை கூறிவந்த புராணத்தை முடித்துக் காட்டி, இனி
வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.