4008. | என்று மற்றுளோ ரியம்பவு மேறுசீர்த் தொண்டர் “பொன்றி ரட்சுடர் நவமணி பொலிந்தமீ னுறுப்பால் ஒன்று மற்றிது வென்னையா ளுடையவர்க் காகும்; சென்று பொற்கழல் சேர்”கெனத் திரையொடுந் திரித்தார். 17 |
(இ-ள்) என்று...தொண்டர் - முன் கூறியவாறு மற்றுள்ளோர் சொல்லவும் அதுகேட்ட ஏறுகின்ற சிறப்புடைய தொண்டராகிய அதிபத்தர்; பொன்.....ஆகும் - பொன்னும் தொகுதியாகிய சுடரினையுடைய நவமணிகளும் விளங்கும் மீன் உறுப்புக்களாற் பொருந்துகின்ற வேறாகியஇது என்னை ஆளுடைய இறைவருக்கே ஆகும். அவரது பொன்னார்ந்த திருவடிகளிற் சேர்க என்று அலையில் சுழல விடுத்தனர். |
(வி-ரை) என்று....இயம்பவும் - என்று - “மீனொன்று படுத்தனம்” என்று; மற்றுளோர் - பரிசனங்களாகிய பரதவர். |
ஏறுசீர் - மிகுகின்ற சிறப்பு; ஏறும் - சிவனடியில் எறப்பெறும் என்றதும் குறிப்பு. தொண்டர் - அதிபத்தர். |
ஒன்றும் மற்று இது - ஒன்றுதல் - பொருந்துதல்; மற்று - ஏனைய மீன்களின் வேறாகிய என்பது. |
சென்று பொற்கழல் சேர்க - மீனினை விடும்போது அதனை நோக்கி அதிபத்தர் சொல்லியது. நிவேதிக்கும் வகை. (4002 - 4004). |
திரையொடும் திரித்தார் - ஒடு - உருபு திரையின் கண் என வேற்றுமை மயக்கம்; திரித்தல் - சுழலவீசுதல், கரையின்றும் கடலில் வீசுகின்றாராதலின் அலையினடுவுட் சேரும்படி சுழற்றி வீசினார் என்க. |
இது என்னை ஆளுடையவர்க்கு ஆகும் - உயர்ந்த பொருளாதலின் இறைவருக்கே உரியது என்றபடி. “விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று” (பட்டினத்தார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 28); உடையவர்க்கே என்ற பிரிநிலை ஏகாரம் தொக்கது. 17 |
4009. | அகில லோகமும் பொருண்முதற் றாமெனு மளவிற் புகலு மப்பெரும் பற்றினைப் புரையற வெறிந்த இகலின் மெய்த்திருத் தொண்டர்முன் னிறைவர்தாம் விடைமேன் முகில்வி சும்பிடை யணைந்தனர்; பொழிந்தனர் முகைப்பூ. 18 |
(இ-ள்) அகில....புகலும் - எல்லா வுலகுகளும் பொருளையே முன்னாகக் கொண்டு செல்லும் என்னும் பிரமாணத்தோடு சொல்லப்படுகின்ற; அப்பெரும்....தொண்டர்முன் - அந்தப் பெரிய வலிய பொன்னாசை என்னும் பெரும் பற்றினைக் குற்றமற நீக்கிய ஒப்பற்ற மெய்த் திருத்தொண்டர் முன்னே; இறைவர்.....அணைந்தனர் - இறைவர் இடப வாகனத்தின்மேல் முகில்படியும் ஆகாயத்தில் எழுந்தருளிவந்தனர்; பொழிந்தனர் முகைப்பூ - (தேவர்கள்) கற்பகப் பூமழை பொழிந்தனர். |
(வி-ரை) அகில.....எனும் - எவ்வுலகினும் எச்செயலும் பொருளன்றி யில்லை என்னும் உண்மை; பிரமாணம்; ''பொருளிலார்க்கிவ்வுலகமில்லா தியாங்கு'' (குறள்) “முனிவரு மன்னரு முன்னுவபொன்னான் முடியும்” (திருக்கோவை - 332); முனிவருக்கும் தங்கரும முடிக்க இன்றியமையாது வேண்டற்பாலதாகிய பொருளை, |