பக்கம் எண் :

பெரியபுராணம்299

4021.   

ஓத மலிநீர் விடமுண்டா ரடியார் வேட மென்றுணரா
மாத ரார்கை தடிந்தகலிக் கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங் களிற்பொலிந்த
காத லன்பர் கலிநீதி யார்தம் பெருமை கட்டுரைப்பாம்.           10
 

     (இ-ள்) ஓதமலி.....உணரா - குளிர்ந்த நிறைந்த நீரையுடைய கடலின் எழுந்த
விடத்தினையுண் டருளிய இறைவரது அடியாரின் திருவேடம் இஃது என்றுணராத;
மாதரார்....வணங்கி - மனைவியாரது கையினைத் தடிந்த கலிக்கம்ப நாயனாரது மலர்
போன்ற பாதங்களை வணங்கி, அத்துணையாலே; பூத....புரிந்து - பூதங்களுக்கு
நாதராகிய சிவபெருமானது திருத்தொண்டு செய்து; புவனங்களில்.....கட்டுரைப் பாம் -
எல்லா உலகங்களிலும் விளங்கிய பெருவிருப்பமுடைய அன்பராகிய கலிநீதி நாயனாரது
பெருமையினை எடுத்துச் சொல்வோம்.                                10
 

     (வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த
சரிதத்தை முடித்துக்காட்டி, மேற் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
 
     அடியார் வேடமென் றுணரா மாதரார் - இஃது சிவன் அடியார் திருவேடம்
(முன்னைநிலத் தம் ஏவலாளன் வேடமன்று) என்றுணராமையே இச்சரித மெழுந்த
நுட்பம். அதனை வடித்தெடுத்துக் கூறி முடித்தவாறு; உணரா மாதரார் -
உணராமையினால் என்று காரணப் பொருள்தர உடம்பொடு புணர்த்தி ஓதினார்.
 
     கைதடிந்த - தொகைநூற் சொற்பொருள் விரித்து எடுத்தாண்டபடி.
 
     பூதம் - சிவபூதம்; சிவகணங்கள்.
 
     காதலன்பர் - சிவன்பாலாகிய பெருவிருப்பம் சிறந்தவர்.
 
     புவனங்களிற் பொலிந்த - கலிநீதியார் செய்த திருவிளக்குத் திருத்தொண்டு
மும்மைப் புவனங்களையும் பொலிவுறுத்தி விளங்கியது என்பது. “பொற்புடைய
சிவபுரியிற் பொலிந்திருக்க” (4037) என்று இவரது வீடுபேற்றினிலை கூறுதல் காண்க.
                                                                    10
 
     சரிதச் சுருக்கம்: கலிக்கம்ப நாயனார் புராணம்: நடுநாட்டிலே வளங்கள்
சிறந்த பழவூர் திருப்பெண்ணாகடம் என்பது. அவ்வூரில் வணிகர் குலத்தில்
அவதரித்தவர் கலிக்கம் நாயனார். அவர் சிவனடிப் பற்றாகிய அன்புடனே வளர்ந்து
வந்து அப்பதியிற் றூங்கானைமாடத் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவக்கொழுந்து
நாதருடைய திருத்தொண்டினையே பற்றிப் பணிசெய்து வந்தனர். வேறு ஒரு
பற்றினையுமி்ல்லாதவர். சிவன் அடியார்களுக்கு விதிப்படி இனிய திருவமுதினை ஊட்டி
வேண்டுவனவற்றையும் இன்பம் பொருந்த அளித்து வந்தார்.
 
     ஒருநாள் முன்போலத் திருவமுதுண்ணவந்த அடியார்களின் திருவடிகளை
மனைவியார் நீர்வார்க்கத் தாம் விளக்கும்பொழுது, முன்னர்த் தம் ஏவலாளரா யிருந்து
ஏவலை முனிந்து சென்ற ஒருவர், சிவனடியாரது திருவேடத்துடன் அணைந்தனர்.
அவரது திருவடியினையும் விளக்குதற்கு, நாயனார் அவரது அடியினைப் பிடிக்க,
அப்போது மனைவியார், “இவர் முன்பு ஏவல் செய்யா தகன்ற தமர் போலும்” என்று
தேரும் போது நீர்வார்க்க முட்டுப்பாடு நிகழ்ந்தது. நாயனார் மனைவியாரைப்
பார்த்தார்; அவரது கருத்தை அறிந்தார்; நீர்க்கரகத்தை வாங்கிக்கொண்டு,
அம்மனைவியாரது கையை வாளினாற் றடிந்தார்; அடியார் திருவடியைத் தாமேவிளக்கி
அமுதூட்டுதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செfய்து துளங்காத
சிந்தையுடன் அவரைத்