வெள்கிநீர் வாரா - தொழித்தாள் “வெள்கிநீர் வாரா விட ” வகை நூல். |
வாளை வாங்கி - வாளை உருவி; கரகம் வாங்கி - மனைவியார் கையில் இருந்த கரகத்தினைத்தாம் வாங்கிவைத்து; கரகம் அடியார்க்கு உதவும் புனித நீருடைமையால், அதனுடனே தண்டித்தல் தகாதென்று, அதனைத்தாம் வாங்கி நீக்கி என்க. அரசாங்க அடையாளக் குறிகளுடையாரைத் தண்டிக்க நேரின், இந்நாளினும் அவ்வடையாளங்களை அகற்றி மாற்றிப் பின்னரே தண்டம் வகுக்கும் நீதிமுறையும் மரபும் காண்க. |
கைதறித்து - நீர்வார்க்காது முட்டுப்பாடு செய்த குற்றம் செய்தது கையாதலின் அதனைத் தடிந்தார் என்க. இவ்வரிய செயலே செயற்கரிய செயலாய்ப் பேறு தந்ததனால் “கைதடிந்த வரிசிலையான்” என்று இதனையே தொகைநூலுள் எடுத்தோதிப் போற்றுதல் காண்க. |
கரக.....விளக்கினார் - மனைவியார் செய்யத் தவறிய நிலையில் அதனைத் தாமே செய்து திருத்தொண்டினை நிறைவாக்கினார் என்க. |
தறித்தக் கரக - கரகம் பிடித்தகை - என்பனவும் பாடங்கள். 8 |
4020. | விளக்கி யமுது செய்வதற்கு வேண்டு வனதா மேசெய்து துளக்கில் சிந்தை யுடன்றொண்டர் தம்மை யமுது செய்வித்தார் அளப்பில் பெருமை யவர்பின்னு மடுத்த தொண்டின் வழிநின்று களத்தி னஞ்ச மணிந்தவர்தா ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார். 9 |
(இ-ள்) விளக்கி.....செய்து - (முன்கூறியவாறு அடியாரது திருவடியைத்தாமே) விளக்கிய பின்னர் அவர் அமுது செய்வதற்கு வேண்டிய ஏனைய செயல்களையெல்லாம் தாமே செய்து; துளக்கில்...செய்வித்தார் - அசைதல் இல்லாத மனநிலையுடன் அத்தொண்டரைத் திருவமுது செய்வித்தார்; அளப்பில்......நெறிநின்று - அளவற்ற பெருமையினை உடைய அவர் அதன்பின்னும் அடுத்த திருத்தொண்டின் வழியிலே வழுவாமல் ஒழுகி; களத்தில்.....கலந்தார் - கண்டத்தே விடத்தினை வைத்தருளிய இறைவரது திருவடி நிழற்கீழே அடியார்களுடன் கலந்து மீளாநெறியில் அமர்ந்தனர். |
(வி-ரை) விளக்கி - முன்கூறியவாறு அடியவரது திருவடியை விளக்கி. |
வேண்டுவன - பரிகலந்திருத்தல், அமுது படைத்தல், முதலிய எல்லாச் செயல்களையும்; |
தாமே - மனைவியார் கைதடியப்பட்டு ஒதுக்கப்பட்டாராதலின் தாமே செய்தனர் என்பதாம். துளங்கல் - தளர்தல் - சலித்தல். |
துளக்கில் சிந்தையுடன் - முன்னே நிகழ்ந்த செயலைப் பற்றிச் சிறிதும் மனம் அசையாதபடி; “சுரும்பமருங் குழன்மடவார் கடைக்க ணோக்கிற் றுளங்காத சிந்தையராய்த் துறந் தோருள்ளப், பெரும்பயனை” (தேவா - தாண் - கோயில் - 7); “அளவில்லாத பெருமையராகிய....அடியார்” (5) பார்க்க. |
பின்னும் - அந்நிகழ்ச்சியின் பின்னரும் பலகாலம். |
அடுத்த தொண்டின் வழி - தமக்கேற்ற திருத்தொண்டின் வழி; “அடித்தொண்டு பற்றி” (4013); சிவன் திருத்தொண்டே உயிர்களுக்கு அடுத்தது; ஏனையவெல்லாம் அடாதன என்ற குறிப்புமாம். |
தாணிழற்கீழ் அடியாருடன் கலந்தார் - நாயனார் பெற்ற வீடுபேற்றின் நிலை; “சிவலோக நண்ணி அடியார் பாங்குறத்தலை யளித்தார்” (4010). |
9 |