புனிதத் தண்ணீருடன் - உண்ணும் நீர் மிகப்புனிதமாயும் தூய்மை யுடையதாயும் அமைக்கப்படுதல் வேண்டும்; என்பது பொருந்து - உடல் நலத்துக்கு ஏற்றபடி பொருந்தும். |
நோய்கள் மிக எளிதிற் பற்றுதல்உண் நீரின் மூலமேயாம் என்பது மருத்துவநூல் முடிபு. திருந்துதல் - திருத்தம் பெறுதல். பருகப் புனிதநீ ரளித்தல் மிக முக்கிய மானதென்றும், ஆனால் அது தான் பெரும்பாலும் கவனிக்கப் பெறுகின்றதில்லை என்றும், காட்ட இதனைச் சிறப்பாய் வேறுபிரித்துக்கூறினார். |
அளிக்க - விளக்கும் - மனைவியார் நீர்வார்க்கக் கணவனார் திருவடி விளக்குதல் மரபு. “செம்பொற் கரக வாசநீர் தேவி மார்க ளெடுத்தேந்த, வம்பொற் பாதந் தாம் விளக்கி யருளப் புகலும்” (3898). |
விரும்பு - தொண்டில் மிக்க விருப்பமுடைய; அருந்து மியல்பில் உள்ளன - அறுசுவையுடன் கூடிய நால்வகை உண்டிகளை; உள்ளன - குறிப்பு வினைப்பெயர். 5 |
4017. (வி-ரை) முன்பு.....தமர் - முன்னர்த் தம்முடைய பணியாளராயிருந்தவர்; ஏவல் முனிந்து - பணி செய்ய மறுத்து. |
பிரான் அடியாராகி - மனிதர்க் கடிமை செய்தலினும் சிவனுக் கடிமைசெய்தல் சிறந்ததென்று எண்ணினார் போல என்பது குறிப்பு. முன்னைநிலையில் இவருக்காளாகி ஏவல் செய்த அவர், பிரான் அடியராயினமையால் இவராற் பணி செய்யப் பட்டாராதல் இவ்வுண்மையை விளக்கும். “தொழுத பின்னைத், தொழப் படுந்தேவர்தம் மாற்றொழு விப்பர்தன் றொண்டரையே” (திருவா). |
பின்பு வந்து தோன்ற - அவர் தமது முன்னைநிலையை எண்ணி நாணிப் பின் வந்தனர் போலும். |
பாதம் - பாதமும் என உம்மை தொக்கது. |
பெருந்தகையார் - முன்னைநிலைமை எண்ணாது, அதனை, அடிமைத் திறத்திற்குக் கீழ்மைப் படுத்தித் தொண்டினிலை ஒன்றனையே கருதியது பெருந்தகைமை எனப்பட்டது. அதுவே இங்கு இவர்பாற் அரிய செய்கையாய் முடிந்து மீளா நிலையில் அடியாருடனிருக்கும் சிவச்சார்புப் பேறு தந்தமையால் இங்குப் பெருந்தகை என்ற தன்மையாற் கூறினார். |
பெருந்தகையார் - கையால் அவர்தம் அடிபிடிக்க என மேல் வரும் பாட்டுடன் கூட்டுக. 6 |
4018. (வி-ரை) முன்பு......பொழுது - இஃது மனைவியாரது மனத்துள் எழுந்த கருத்து. தேர்தல் - நினைந்து துணிவு பெறுதல்; தேரும் பொழுது - முட்ட என்க. மனத்துள் தேர்தல் நிகழ அதனால் அப்போது செயல் தாழ்த்தது. |
மலர் மொய் ஆர்வாசக் கரக நீர் - பாத்திய நீரில் மலர் சந்தனம் முதலியவை இடுதல் விதிமரபு; பாத்தியம் திருவடி விளக்குதற்கு அமைக்கும் நீர்; கரகம் - குண்டிகை; இடையறாது நீர்வார்த்தற்காகக் கொள்ளும் சிறியமூக்குள்ள பாத்திரம் . |
முதற்றொண்டர் - முதல் முதன்மையுடைய. 7 |
4019. (வி-ரை) வெறித்த - வெறி - மணம் - மணமுடைய. |
வெறித்த....என்று மனங்கொண்டு - இது மனையாரைப் பார்த்தும், அவர் கரக நீர் வார்க்க முட்டுப்பட்ட நிலையினைக் கண்டும், நாயனார் மனத்துட் கருதித் துணிந்த நிலை; மனங்கொண்டு - துணிந்து. |
முன் மேவுநிலை - முன்னர்த் தமது பணியாளா யிருந்த நிலையினை. |