பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்296

போலும் என்று காதல் மனைவியார் எண்ணும்போது; மலர் ...முட்ட - மலர்கின்ற
பூக்கள் பொருந்திய மணமுடைய கரக நீரினை வார்க்கத் தாமதிக்கவே;
முதற்றொண்டர்...கருதுவார் - முதன்மை பெற்ற திருத்தொண்டராகிய அவர் கரிய
கூந்தலையுடைய மனைவியாரைப் பார்த்துத் தமது மனத்துள்ளே கருதுவாராய்,   7
 

     4019. (இ-ள்) வெறித்த....இவர் - மணமுடைய கொன்றை சூடிய முடியினையுடைய
இறைவரது அடியாராகிய இவர்; முன் மேவும் நிலை ...மனங்கொண்டு - முன்பு மேவும்
நிலையினைக் குறித்துத் திருவடி விளக்க நீர்வார்க்காதொழிந்தனர் என்று
மனத்திற்றுணிந்து; மறித்து நோக்கார் - மீண்டும் பார்க்காமல்; வடிவாளை வாங்கிக்
கரகம் வாங்கி - வடிவாளை உருவி அவர் கையிலிருந்த கரகத்தினையும்
வாங்கிக்கொண்டு; கைதறித்து - அவருடைய கையினைத் தறித்து; கரக நீர்...விளக்கினார்
கரகத்தினை எடுத்து நீர் வார்த்துத் தாமே அவருடைய தாள்களை விளக்கினார். 8
 

     இந்த ஆறு பாட்டுக்களும் சரிதத் தொடர்ச்சி பற்றி ஒரு தொடர்பு பட உரைக்க
நின்றன. 4014 பாட்டைத் தனி முடிபாக்கி யுரைக்கினு மிழுக்கில்லை.
 
     4014. (வி-ரை) ஆன அன்பர் - செய்வித்தே -அளிப்பார் (4014) -
தொடங்குவிப்பார் - முயல்கின்றார் (4015) - மனையார் - விளக்கி - அமைத்து -
நீரளிக்க - விளக்கும் பொழுதின் கண் - (4015) - ஒருவர் தோன்ற - விளக்கும் -
பெருந்தகையார் (4017) - பிடிக்க - மனையார் - வார்க்க முட்டப் - பார்த்துக் -
கருதுவார் (4018) - மணங்கொனடு - வாங்கி - வாங்கிக் - கைதறித்து - எடுத்து -
விளக்கினர். (4019) என்று இந்த ஆறு பாட்டுக்களையும் தொடர்ந்து கூட்டி
முடித்துக்கொள்க.
 
     ஆன அன்பர் - முன்பாட்டிற் கூறியபடி ஆயின அன்பர். தேனின் - ஐந்தாம்
வேற்றுமை. இன் - உருபு உறழ்பொருளது; ஒப்புப் பொருளுமாம்.
 
     மேன்மை விளங்கு.......திருந்த - திருவமுதுக்கு வேண்டிய இன்றியமையாத
பொருள்களை கூறியது காண்க. இளையான் குடிமாற நாயனார் புராணமும் பார்க்க.
 
     கட்டி - கரும்புக்கட்டி; சர்க்கரை; கற்கண்டு; “கட்டிபட்ட கரும்பினும்” (அரசு -
தேவா) இவற்றை உடன் கூட்டித் திருந்த அமுது செய்வித்தே. மேன்மை - போனகம்
- செந்நெலரிசிச் சோறு.
 
     வேண்டுவன - அவர் வேண்டுவனவும் தாமே வேண்டி அளிப்பனவுமாம். 3
 
     4015. (வி-ரை) தொன்மை முறையே - தாம் நியம ஒழுக்கமாகக் கொண்டு
செய்து வந்த முறையே; பண்டை நூல்களில் விதித்த ஒழுக்க முறையிலே என்றலுமாம்.
ஒருநாள் - பின் விளைவினால் ஒப்பற்ற நாள் என்பது குறிப்பு.
 
     தொடங்குவிப்பார் - விளக்க முயல்கின்றார் - அமுதூட்டும் செயல்; முதலில்
அடியவர்களது பாதம் நீரால் விளக்குதலுடன் தொடங்குவதாம். “கொண்டு வந்து
மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே” (443); “கரக மெடுத்தேந்த (3729) - தூய
நீராற் சிறுத்தொண்டர் சோதியார் தங்கழல் விளக்கி” (3730) என்பன முதலியவை
காண்க. பாதப் பிரக்ஷாளணம் என்பது வடமொழி.
 
     முன்னர் - முதலின்; முன்பு அவர் தம் - தம் - சாரியை; அவரை.    4
 
     4016. (வி-ரை) திருந்தும் - இனி, இச்சரித நிகழ்ச்சியில் நாயனாராற்
றடியப்பட்டுச் சிவாபராதத்தினின்றும் உய்ந்து திருந்த நின்ற என்ற குறிப்பும் காண்க.
 
     மனையெல்லாம் - அமைத்துக் கரக நீரளிக்க - இவையெல்லாம்
விருந்தோம்புதலினும் அடியார்க் கமுதூட்டுதலினும் மனைக் கடனுடையார் செய்ய
வேண்டியவை - (3725 - 461 - 462)