பக்கம் எண் :

பெரியபுராணம்539

 
     திரிபுரமெரித்த.........காய்ந்தவாறும் இவை இறைவர் செய்த வீரங்கள்;
“அயன்றலை கொண்டுசெண் டாடல் பாடி யருக்க னெயிறு பறித்தல் பாடி, கயந்தனைக்
கொன்றுரி போர்த்தல் பாடிக் காலனைக் காலா லுதைத்தல் பாடி, யியைந்தன
முப்புரமெய்தல் பாடி யேழை யடியோமை யுரண்டு கொண்ட, நயந்தனைப் பாடிநின்
றாடி யாடி நாதற்குச் சுண்ண மிடித்து நாமே” (திருவா - திருப்பொற். 18) என்பது
முதலாகிய திருவாக்குக்கள் ஈண்டு நினைவுகூர்ந்து ஒப்புநோக்கற்பாலன; தேர் -
பூமியாகிய தேர்.
 
     அடியவர்க் கெளியவாறும் - இறைவர் செய்த அரும்பெரும் வீரங்கள் எல்லாம்
அவர் அடியவர்க் கெளிவந்த அருளையே உட்பொருளாக உடையன என்பது.
 
     கேட்டுப் பரமனமார் செய்த அருளினாலே, எழுந்த ஓசை......என - என்று
மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக் கொள்க.
 
     கேட்ட - என்பதும் பாடம். 5
 
     4220. (வி-ரை) அந்தரம் - வானம். ஆகாயம் - மேலிடம்; ஓசை.....என -
என்க. என - என்று கூற; என்று ஆணையிட் டறிவிக்க.
 
     சந்தயாழ் - இசைநூல் விதிப்படி உரிய பக்குவமுடைய மரத்தினால் அமைந்த
யாழ். சந்தம் - சந்தத்தினை எழுப்பும் தன்மை பொருந்திய; தட்பவெப்ப நிலைகளின்
சமனாக அமைந்தபோதே மரத்தினின்றும் சங்கம் ஒழுங்குபடக் கிளம்பும் என்பது.
சந்தம் - பெருமை - புகழ் - என்றலுமாம்.
 
     தரையிற் சீதம்தாக்கில் வீக்கழியும் என்று - தரையிலிருந்து
பாடுகின்றாராதலின் யாழும் தரையில் வைக்கப்பட்டதாம்; தரையினுடைய குளிர்ச்சி
பாணனாரது கை விரல்களின் மூலமும், யாழின் மரத்தண்டு உடல் இவற்றின் மூலமும்
தாக்க நரம்புகளின் முறுக்கு அழியும்; நரம்புகள் என்பது தொக்கு நின்றது; வீக்கு -
இறுக்கம்; முறுக்கு; அழிதல் - முறுக்க மதிகமாதலும் இளகுதலும் குறித்தது.
 
     சுந்தரப்பலகை - பொற்பலகை; பலகையிடும் என - பலகையிட்ட
திருவிளையாடல் வரலாறு பார்க்க. “தார முய்த்தது பாணர்க் கருளொடே” என்ற
பிள்ளையார் தேவாரத் திருவாக்கும், அதற்குத் “திருவிய மகத்தி னுள்ளும் திருநீல
கண்டப் பாணர்க் கருளிய திறமும் போற்றி” (2769) என்று ஆசிரியர்
உரைவிரித்தருளியதும் இங்கு நினைவுகூர்தற்பாலன.
 
     செந்தமிழ்ப் பாணனார் - செந்தமிழ்ப் பாடல்களைக் கருவியிலும் கண்டத்திலும்
பாடும் பாணனார்; தமிழ்ப்பாடல்களையே யன்றி ஏனைய மொழிப் பாடல்களை
யாழியற்றும் நிலை தமிழ்நாட்டில் அந்நாள்வரை வழக்கில் இல்லை என்பது
கருதப்படும்; அப்படி இருந்தமை பெறப்படின், அவற்றைப் பொருள் எனக் கருதாது
ஒதுக்கிச் சிறப்பு நோக்கித் தமிழ்ப் பாட்டுக்களையே பாடும் என்றுரைத்துக்கொள்க;
பாணனார் ஆளுடைய பிள்ளையாரது செந்தமிழ்ச் திருப்பாடல்களையே யாழியற்றி
உடனிருந்த வரலாறுங்கருதுக.
 
     கழியுமின்று - என்பதும் பாடம்.                                6
 
4221. தமனியப் பலகை யேறித் தந்திரிக் கருவி வாசித்
துமையொரு பாகர் வண்மை புலகெலா மறிய வேந்தி,
யிமையவர் போற்ற வேகி யெண்ணிறா னங்கள் கும்பிட்
டமரர்நா டாளா தாரூ ராண்டவ ராரூர் சேர்ந்தார்.                   7