பக்கம் எண் :

பெரியபுராணம்541

 
     (வி-ரை) கோயில் வாயில்முன் அடைந்து - தமது மரபொழுக்கத்தின் படியே
கோயில் வாயிலின்முன்பு சேர்ந்து.
 
     கூற்றும்.....இட்டுப்பாட - திறனும் - அளியும் - என்ற இவை இறைவரது
அருட்டன்மைகள்; கோபப் பிரசாதம் எனப்படும்; இப்பெயருடையதொருநூல்
நக்கீரரால் அருளப்பட்டுப் பதினொராந் திருமுறையுள் கோவை செய்யப்பட்டுள்ளது;
அதன் கருத்துக்கள் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன. இவை யிரண்டும் எல்லா
ஆன்மாக்களுக்கும் பொதுவாயும், அடியார்களுக்குச் சிறப்பாய்வேறாயும் இறைவர்
செய்யும் அருள்கள்; திறல் - வீரம்; அளி - அருட்செயல்கள்; முன் (4291)
உரைத்தவையும் பார்க்க. இறைவரைத் துதிப்பன இவ்விரண்டனுள் அடங்குவன
என்பதும் குறிப்பு.
 
     தாயின் நல்ல - தாயினும் நல்ல என்க. சிறப்பும்மை தொக்கது, “பானினைந்
தூட்டுந் தாயினும் சாலப் பரிந்து” (திருவா); “தாயிற் சிறந்த தயாவான” “தாயினு நல்ல
சங்கரன்” (தேவா); தண்ணளி - இறைவர் செய்யும், செற்றம் போன்ற செறுகின்ற
செயலும் அளியே எனப்படுமாதலின் அத்தன்மையினின்றும் வேறு பிரிக்கத் தண் என்ற
அடை மொழி தந்தோதினார், அறக்கருணை மறக்கருணை என்பர்.
 
     கருவியிற் றொடுத்தலாவது - யாழினில் பாடற் பண்ணுடன் சொல்லமைதி
வரச்செய்தல்; இட்டு - அதற்கேற்ற யாழ்முறைகள் எல்லாம் செய்து; பாட -
கண்டப்பாட்டும் கூடப்பாட; கேட்டு - இறைவர் கேட்டு என்க. எழுவாய் வருவிக்க.
 
     அங்கண் - பாணர்க்கு அருள்புரியும் அதன் பொருட்டு; திருவாலவாயில்
அடியார்க்கருளி உட்புகச் செய்தமைபோல, அங்கண் வடதிசையில் வேறுவாயில்
வகுத்தருளினர் என்க. இவ்வாறு ஒருவனுக்கே இருவேறு விதம்பட விதித்தருளிய
தென்னையோ? எனின், திருவாலவாய், உச்சிக்குமேல் 12 அங்குலம் உயர்ந்த பதியாயும்
அங்கு இறைவர் மாபாதகர் தீர்த்தது, பன்றிக் குட்டிகளுக்கு அருளியது முதலிய
திருவிளையாடல்களை இயற்றிய பதியாயும் உள்ளது; திருவாரூர், இறைவர், அரசர்க்கு
புரிந்து உலகுக்கு அறநெறி வகுத்து அமரும் பதியாகும்; என்பவை முதலியவற்றை
ஈண்டுக் கருதலாம் போலும். இனையவகை யறநெறியி வெண்ணிறந்தோர்க் கருள்புரிந்து,
முனைவரவ ரெழுந்தருளப் பெற்றுடைய மூதூர்; (நகரச் சிறப்பு); “ஆட்பா
லவர்க்கருளும், வண்ணமும்...கேட்பான் புகில் அளவில்லை; கிளக்க வேண்டா;”
என்றமைக.
 
     புகுந்து - திருமூலத்தானர் திருமுன்பு புகுந்து; மேல் (4223) பாட்டுப் பார்க்க.
 
     வாயில்.......வகுப்ப - இவ்வருளிப் பாட்டின் வகையினையும், திருவாலவாயின்
இறைவரது அருளிப்பாட்டினையும், தெரிந்த பின்னரே சீகாயிழில் ஆளுடைய
பிள்ளையார் பாணனாரைப், புறத்திரு முன்றிலிற் கொடுபுக்குக் கும்பிடுவித்து,
“யாழ்உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும்” (2032) என்றருளிய நிகழ்ச்சியைப்பற்றி,
முன் அறிந்தோம். இஃதென்னையோ? எனின் முன்னர்க் கூறியவை ஆண்டவரது
அருளிப்பாடுகள்; பிள்ளையது, ஆண்டவனது ஆணை மொழியாகிய வேதாகமங்களின்
வழியினைக் கைக்கொண்டு உலகை வழிப்படுத்த வந்தருளிய கடப்பாடுடைய
ஆசாரியரின் செயல்; இவ்வேறுபாடு கண்டுகொள்க.
 
     குறிப்பு; இவ்வடதிசை வாயிலின் அடையாளங்கள் இன்றும் காண உள்ளன. சரித
ஆராய்ச்சியாளர் காணலாம்.
 
     வந்துபுகுந்து - என்பதும் பாடம்.                                8