பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்542

 
4223. மூலத் தானத் தெழுந்தருளி யிருந்த முதல்வன் றனைவணங்கிச்
சாலக் கால மங்கிருந்து தம்பி ரான்றன் றிருவருளாற்
சீலத் தார்கள் பிரியாத திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தா ரமருந் தானம் பலவணங்கி,            9
 
4224. ஆழி சூழந் திருத்தோணி யமர்ந்த வம்மா னருளாலே
யாழின் மொழியா ளுமைஞான மூட்ட வுண்ட வெம்பெருமான்
காழி நாடன் கவுணியர்கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த யாழ்ப்பாணர்.             10
 
     4223. (இ-ள்) மூலத்தானத்து.....வணங்கி - திருமூலத்தானத்தில் விளங்க
வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி; சால.......இருந்து - மிகுந்த காலம் அங்கு
இருந்து; தம்பிரான்றன்.......போய் - இறைவரது திருவருள் விடைபெற்றுச் சீல முடைய
அடியவர்கள் நீங்காமல் வாழ்கின்ற திருவாரூரினின்றும் போய்; ஆலத்து.....வணங்கி -
விடம் நிறைந்த கழுத்தினையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் பதிகள்
பலவற்றையும் வணங்கி;                                              9
 
     4224. (இ-ள்) ஆழி......உண்ட - கடலாற் சூழப்பட்ட திருத்தோணியிலே விரும்பி
எழுந்தருளிய இறைவரது திருவருளினாலே யாழிசையினும் இனிய மொழியாளராகிய
உமையம்மையார் ஞானவமுத மூட்ட வுண்டருளிய; எம்பெருமான்.....வணங்குதற்கு -
எமது பெருமானும், சீகாழி நாடுடையவரும், கவுணியர் தலைவரும் ஆகிய ஆளுடைய
பிள்ளையாரது தாமரைபோன்ற திருவடிகளை வணங்கும் பொருட்டு; வாழி.....யாப்பாணர்
- வாழ்வுடைய மறையவர்களது பதியாகிய சீகாழிப்பதியினில் சந்தமுடைய
யாழ்ப்பாணனார் வந்தனர்.                                           10
 
     இந்த இரண்டு பாட்டுக்களுக்கும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4223. (வி-ரை) மூலத்தானத்து.......வணங்கி - “புகுந்து வணங்கினார்” (4222) என
முன்பாட்டிற் கூறிய ஆசிரியர், அத்திருக்கோயிலினுள் திருமூலத்தானத்துள்
புற்றிடங்கொண்ட இறைவர் திருமுன்பு வணங்கினர் என்று அந்த இடத்தினைக்
கூறியவாறு. சீலத்தார்கள் - தேவாசிரியனில் உள்ள மெய்யடியார்கள்; முத்திபெறும்
தகுதியார்களாய திருவாரூர்ப் பிறந்தார்கள் என்றலுமாம்.
     முதல்வன் - புற்றிடங்கொண்ட பெருமான்.
 
     சாலக்காலம் அங்கிருந்து - அங்கு - திருமுன்பு; வணங்கியபின் மிக்ககாலம் -
வழிபாட்டுக் காலங்கள் முழுதும் அங்கிருந்து; இவ்வாறன்றிச் சாலக்காலம் - அத்திரு
நகரில் பின்னர் தங்கிய பல நாட்கள் என்றலுமாம்; இப்பொருளில்அங்கு அத்திருநகரில்
என்றுரைத்துக்கொள்க.
 
     திருவருளால் - திருவருள் விடைபெற்று; திருவருளால் - போய் என்று
கூட்டுக.
 
     தானம்பல - பல பதிகளையும்; உம்மை தொக்கது; “தானங்கள்” (4221)
“தானமெல்லாம் பணிந்துபோய்” (4215) என்றாங்கு உரைத்துக் கொள்க. இத் தானங்கள்
- திருவாரூரினின்றும் சீகாழிக்குச் செல்லும் இடையில் வழியினும் மருங்கினும்
உள்ளவை. ஆலத்து ஆர்ந்த -ஆலம் ஆர்ந்த; அத்து சாரியை.
 
     வணங்கி - வணங்குதற்கு - வந்தார் என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.
                                                                    9
     4224. (வி-ரை) ஆழிசூழம் திருத்தோணி - ஊழி வெள்ளத்தில் மிதத்தால்
ஆழிசூழம் என்றார்.