யாழின் மொழியாள் - யாழினும் இனிய மொழியாளாகிய; “யாழைப் பழித்தன்ன மொழி மங்கை” (நம்பி - தேவா - மறைக்காடு). |
அம்மான் அருளாலே - உமையாள் - ஊட்ட - “துணைமுலைகள், பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத் தூட்டென்ன” (1964) என முன்கூறிய வரலாறுகள் நினைவுகூர்க. ஞானம் - சிவஞானவமுதம் குழைத்த திருமுலைப்பால்; ஞானம் - ஞானங் குழைத்த பாலுக்காகி வந்தது ஆகுபெயர். |
எம்பெருமான் - எமது பரமாசாரியர். |
வணங்குதற்கு - திருவாலவாயினிலும் திருவாரூரினிலும் இறைவரது கோயில் பணியச் சென்றனர். இங்கு ஆளுடைய பிள்ளையாரது திருவடிகளை வணங்குதல் குறித்து வந்தனர். |
மறையோர் புகலியினில் - மறையவர்கள் பதியாகிய புகலியினில்; பிள்ளையாரது திருவடிகளை வணங்குதற்காகவன்றி அங்குப்பாணனார் அணுக்கமாய் வருதற்கியைபில்லை என்பது குறிப்பு. திருநாளைப்போவார் நாயனார் வரலாறு பார்க்க. 10 |
4225. | ஞான முண்டார் கேட்டருளி நல்ல விசையாழ்ப் பெரும்பாணர்க் கான படியாற் சிறப்பருளி யமரு நாளி லவர்பாடும் மேன்மைப் பதிகத் திசையாழி லிடப்பெற் றுடனே மேவியபின் பானற் களத்தார் பெருமணத்தி லுடனே பரமர் தாளடைந்தார். 11 |
(இ-ள்) ஞானமுண்டார்....நாளில் - (முன்கூறியபடி பாணனார் வந்த செய்தியினைச்) சிவஞானமுண்டருளிய பிள்ளையார் கேட்டருளி நல்ல இசையினையுடைய யாழ்ப்பெரும்பாணனாருக்கு ஏற்றபடியினாற் சிறப்புச் செய்து விரும்பி உறையுநாளில்; அவர்பாடும்...மேவியபின் - அப்பிள்ளையார் பாடியருளுகின்ற மேன்மையுடைய திருப்பதிகத்திசையினை யாழில் இட்டு வாசிக்கும் பேறுபெற்று அவருடனே கூட உறைந்து இருந்தபின்; பானற்களத்தார்.....அடைந்தார் - நீலமலர் போலும் நிறம் பொருந்திய கழுத்தினையுடைய இறைவரது திருநல்லூர்ப் பெருமணத்தில் அவருடனே இறைவரது திருவடிகளை அடைந்தனர். |
(வி-ரை) ஞானமுண்டார்.....நாளில் - இவ்வரலாறு முன் ஆளுடையபிள்ளையாரது புராணத்துள் (2029 - 2037) விரிக்கப்பட்டுள்ளது. |
ஆனபடி - மரபுக்கும் அன்பிற்கும் இயைந்த வகையாக; |
அவர்பாடும்......மேவியபின் - (2037 - 2039) ஆளுடையபிள்ளையார் புராணம் பார்க்க; உடனே மேவுதல் - பிள்ளையாரைக் கண்டு பணிந்து அவரது அருள்பெற்ற நாள்முதலாக அவரது திருமணத்தில் உடனாக இறைவரது திருவடியடையும் வரை, அவரைப் பிரியாது உடனிருக்கவும், அவரது திருப்பதிகங்களை அவ்வப்போதும் அங்கங்கும் அவராணைப்படி யாழிலிட்டுச் சேவித்து வரவும் பேறுபெற்றதுவும் இங்கு நினைவு கூர்க; ஆண்டு முன்னர் விரித்தமையின் இங்குச் சுட்டிய மட்டிற் சுருங்கக் கூறினார். |
பானற்களத்தார் - பானல் - நீலமலர்; நீலமலர்போன்ற கரிய கண்டம். |
உடனே - ஆளுடையபிள்ளையாரும் அவரது பரிசனங்கள் முதலாகிய எல்லவரும் கூடிய கூட்டத்துடனே, 3148- ம் பிறவும் பார்க்க. 11 |