பக்கம் எண் :

பெரியபுராணம்557

 

உலகங்காக்கும் அரசர், திருமாலின் கூறுடைமையால் திருமால் போன்ற செந்தாமரைக்
கண்ணுடையார் என்ற குறிப்புமாம்.
 

     கழறிற்றறிவார் என்ற இத்தன்மையாற் கூறியது உலகுயிர்களின் மேல்வைத்த
கண்ணோட்டமாகிய தன்மை குறித்தற்கு.
 
     கூட - சேர்ந்து.                                             1
 
4230.    படியி னீடும் பத்திமுத லன்பு நீரிற் பணைத்தோங்கி
வடிவு நம்பி யாரூரர் செம்பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய விருவினையின் களைகட் டெழுந்து கதிர்பரப்பி
முடிவி லாத சிவபோக முதிர்ந்து முறுகி விளைந்ததால்.             2
 
     (இ-ள்) படியில் நீடும் பத்திமுதல் - உலகில் நீடிய பத்தி முதலானது;
அன்பு....ஓங்கி - அன்பாகிய நீரினாலே பருத்து மேல் எழுந்து; வடிவு...வனப்பாக -
நம்பியாரூரது செம்பொன் போன்ற வனப்புடைய மேனியே தனது வடிவமாக;
கடிய...கட்டு - கடுமையாகிய வெவ்விய இருவினைகள் என்னும் களையினைக் கடிந்து
அகற்றி; எழுந்து கதிர்பரப்பி - மேலோங்கி எழுந்து ஞானக் கதிர்களாகிய கதிர்களைப்
பரப்பி; முடிவிலாத...விளைந்தது - அழிவில்லாத சிவபோக மென்னும் பலம் முதிர்ச்சி
பெற்று மிகவும் விளைந்தது; (ஆல் - அசை).
     (வி-ரை) இப்பாட்டுச், சொற்பொருட் சிலேடை கலந்த முற்றுருவகவணி.
முதன்முறை கழறிற்றறிவாரைக் கண்டு பிரிந்து திருவாரூர் சேர்ந்தபின், நம்பியாரூர்,
மீளவும் அவரை நினைந்து கொடுங்கோளூர் சாரும்வரை அவரது பிற்றை வாழ்க்கை
நிலை, இவ்வுலகில் வாழ்ந்தவாறே சிவபோக விளைவாக நின்ற தன்மை இப்பாட்டால்
(நெற்) பயிர்களின் போக விளைவுபற்றிய உருவமாக வைத்து உணர்த்தப்பட்டது.
 
     நெற்போக விளைவுபற்றிய நிலையில் - படி - நிலம்; பத்தி - பயிர்களின்
வரிசை; முதல் - நாற்று; நீர் - பயிருக்குரிய தண்ணீர்; பணைத்தோங்குதல் - தூறு
கொண்டு பயிர் மிக வளர்தல்; வடிவு - பயிரின் வண்ணம்; களைகட்டல் - பயிர்க்குப்
பகையாகிய களையினைத் தெரிந்து களைதல்; எழுந்து கதிர்பரப்புதல் -
பயிர்த்தாள்களினின்றும் கதிர்கள் தோன்றி விரிதல்; முதிர்ந்து முறுகி விளைந்தது -
கதிர்கள் முற்றிச் செறிந்து விளைதல்.
 
     நம்பியாரூரர்பாற் சிவபோக விளைவு பற்றிய நிலையில் - படியில் -
இவ்வுலகில்; விதியின்படி என்றலுமாம்; பத்திமுதல் - சிவன்பாலும் அடியார்பாலும்
கொண்ட பரிவாகிய மூலம்; அன்பு நீரில் - (நீர் - நீர்மை) அன்பாகிய பண்பினோடு;
பணைத்தோங்குதல் - கிளைத்தெங்கும் பரவுதல்; வனப்பு மேனி வடிவு -
வனப்புடைய திருமேனியினையே பற்றி வடிவம் கொண்டு; இருவினையின் களைகட்டு
- சிவப்பயிர்க்குக் கேடு செய்யும் இருவினைகளையும் வராது ஒறுத்தல்; எழுந்து
கதிர்பரப்புதல்
; எங்கும் சிவஞான வொளி வீசுதல்; சிவபோகம்....விளைந்தது -
போகம்
- பயன்; சிவபோகம் - சிவானந்தானுபவமாகிய விளைவு; முதிர்ந்து முறுகி
விளைதல் - மேன்மேல் முதிர்ச்சியும் செறிவும் பெற்று மிக்கு உண்டாதல்.
 
     பணைத்தல் - கிளைத்து ஓங்குதல்.
 
     வடிவு - பிழம்பு; வனப்பு மேனியாக - என்று கூட்டுக.
 
     மேனி - பயிர்கள் மேனி காணுதல் என்பதும் மரபு. களைகட்டல் -
களையினைக்களைதல்; வெய்ய வினையிரண்டும் - தீவினை போல நல்வினையும்
பிறவிக் கேதுவாதலின் இருவினைகளையும் களை என்றார்; கட்டல் - பிடுங்குதல்; மரபு
வழக்கு.