பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்556

 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

பதின்மூன்றாவது

வெள்ளானைச் சருக்கம்
_ _ _ _ _
 

4229.    மூல மான திருத்தொண்டத் தொகைக்கு முதல்வ ராயிந்த
ஞால முய்ய வெழுந்தருளு நம்பி தம்பி ரான்றோழர்
காலை மலர்ச்செங் கமலக்கட் கழறிற் றறிவா ருடன்கூட
ஆல முண்டார் திருக்கயிலை யணைந்த தறிந்த படியுரைப்பாம்.    1
 
     (இ-ள்) மூலமான....தம்பிரான்றோழர் - திருத்தொண்டர் சரிதங்களைக் கூறும்
இந்நூலுக்கு மூல நூலாகிய (முதனூல்) திருத்தொண்டத்தொகை அருளிச்
செய்வதற்குரிமையுடைய முதல்வராக இந்த நிலவுலகம் உய்யும் பொருட்டே இங்கு
எழுந்தருளி வந்த நம்பிகளாகிய தம்பிரான் றோழர்; காலை...கூட - காலையில் மலரும்
தன்மைத்தாகிய செந்தாமரைபோன்ற கண்களையுடைய கழறிற்றறிவார் நாயனாருடன்கூட;
ஆல முண்டார்.....உரைப்பாம் -விடத்தை உண்டருளிய இறைவரது திருக்கயிலையின்
கண் அணைந்த வரலாற்றினை அறிந்தவாறு சொல்வோம்.
 
     (வி-ரை) மூலமான - இப்புராணத்துக்கு முதனூலாகிய. மூலம் - மூலநூல்;
முதனூல். மூலம் - பிறிதோர்நூலினின்றும் எவ்வாற்றானும் எடுத்துக் கொள்ளப்படாது
உண்டாகியது; திருத்தொண்டத் தொகைப் பதிகத்தினையே முதனூலாகவும்,
திருவந்தாதியினை வழி நூலாகவும் கொண்ட சார்பு நூலாக இப்புராணம்
போந்ததென்பது முன் திருமலைச் சருக்கத்துள் (47 - 48- 49) உரைக்கப்பட்டது;
கடைப்பிடிக்க. இதனாலே இப்புராணம் மொழி பெயர்ப்புநூல் என்ற போலியுரைகாரர்
கூற்றும் மறுக்கப்பட்டதும் காண்க.
 
     முதல்வர் - ஆசிரியர். செய்தவர்; முதல்வரோ டொப்பாந் தன்மையுடையவர்
என்ற குறிப்பும் காண்க. முன் உபமன்னிய முனிவர் கூற்றும் (29) காண்க.
 
     ஞாலமுய்ய எழுந்தருளும் நம்பி - “மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத்,
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப், போதுவார்” (35) என்று தொடக்கத்துக்
கூறியதனைப் புராண முடிபில் இங்கு நினைவு கூர்ந்து மனத்துள் வைத்தற் பொருட்டு
இவ்வாற்றாற் கூறினார். மூலமான......முதல்வர் - என்றதும் “தீதிலாத்திருத் தொண்டத்
தொகைதர” என்ற கருத்தைச் சுட்டி நிற்றல் காண்க.
 
     காலைமலர்ச் செங்கமலக் கண் - காலையில் மலருந் மலராகிய செங்கமலம்;
இடையறாத கண்ணோட்டம் பெரிதும் வேண்டி வரம்பெற்ற குறிப்புப் பெறக்கூறியது;
“திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேன்” என்றபடி