முதற்சொற் குறிப்பாவன; தில்லை.....மறைநாவனொடே - தில்லை என்பது முதல் மன்னியசீர் மறைநாவன் என்பதனொடே வருவனவாம். |
அணித்திகழ் - அழகுன் விளங்கும்; எதுகை நோக்கித் தகரம் இரட்டித்தது செய்யுள் விகாரம்; இணைத்திகழ் - பொருந்த விளங்கும்; மணித்திகழ்சொல் - மணிபோல விளங்கும் பதிகப் பாட்டுச் சொற்கள். முதல் - மறைநாவனொடேயாம் - என்று முடிக்க. ஆம் என்பது வருவிக்க. |
வானினுள்ளோர்...பாதத்தார் - தேவருலத்தில் உள்ள தேவர்களும் சிரத்திற் சூடிடும் சிறப்பினையுடைய திருவடிகளை உடையவர்களாகிய; தொண்டத் தொகையில் உள்ள சேடர்தம் - திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பட்ட பெரியோர்களது; பெரும்புகழ்...செப்பிட - பெரிய புகழ்களைத் துதிக்கும் இத்திருவந்தாதியினைச் சொல்ல; ஓடிடும்.....செய்தனன் - கட்டுப்பட்டு நில்லாது மாறி மாறி ஓடுகின்ற ஐந்திந்திரியங்களையும் அவ்வாறு ஓடாமல் ஒடுக்கி ஒருமுகப்படுத்தி என் உள் வினைகள் அறும்படி நின்று என்ன பெருந்தவத்தினைச் செய்தேன்; (ஒன்றும் செய்யவில்லையே!) |
ஐந்திந்திரியங்களையும் ஒடுக்கி வினையை வாட்டும் தவஞ் செய்திருந்தாலன்றித் திருத்தொண்டர்களின் புகழ்களைக் கூறும் இத்திருவந்தாதியினைச் செப்பலரிது என்பதாம்; இத்திருவந்தாதி தவப்பயனாகச் செப்பவருவது என்பதாம்; ஓடிடும் - கட்டிலடங்காது இச்சை வழியே மாறுபட்டுப் பல இடமும் ஓடும்; எத்தவம் செய்தனன் அத்தகைய எத்தவமும் செய்யவில்லை என்பது குறிப்பு; அவ்வாறாகவும் இப்பேறு கிடைத்த தெவ்வாறோ? என்றதாம் “அரும்பின் வன்பில்லை யர்ச்சனை யில்லை....எங்ஙனே வந்து நேர்பட்டதால்.....கழலடியே” (ஆளுடையபிள் - அந். 24); வானினுள்ளோர் சூடிடும் சீர்த்திருப்பாதத்தர் - திருத்தொண்டர்களை வானவர்கள் வணங்கிவரம்பெறுவர் என்பதாம்; “தேவாசிரியன்” என்றதன் கருத்து; சேடர் - பெரியோர்; அறிவிற் சிறந்தவர் என்றலுமாம்; அந்தாதி - இத்திருவந்தாதி; செப்பிடவே - இத்திருவந்தாதி “செப்பத் தகுபுகழ்” என்று தொடங்கி ஆதியே அந்தமாக மண்டலித்து முடிந்தநிலை கண்டுகொள்க. சேடன் - அஞ்சிநின்றவன் - சிவன் என்று கொண்டு சேடர் - சிவத்தன்மை பெற்ற பெரியோர் என்றலுமாம். |
திருத்தொண்டர் திருவந்தாதி முற்றிற்று |
12-வது மன்னியசீர்ச் சருக்கம் முற்றிற்று |
குறிப்பு :- இரண்டாவது தில்லை வாழந்தணர் சருக்கம் முதல், பன்னிரண்டாவது மன்னியசீர்ச் சருக்கம்வரை உள்ள 11 சருக்கங்களும் முறையே திருத்தொண்டத் தொகையின் ஒவ்வோர் திருப்பாட்டின் தொடக்கத்தையே பெயராகக் கொண்டுள்ளதுவும், அவ்வச் சருக்கள் அவ்வத் திருப்பாட்டினுட் போற்றப்பட்ட அடியார்களின் வரலாறுகளை ஓதியதுவும் இவ்வாறு திருத்தொண்டத் தொகையின் அடியார்கள் எல்லாருடைய திருத்தொண்டுகளும் போற்றப்பட்டதுவும் கண்டு கொள்க. “தமிழ் முறையே.....ஏத்தலுறுகின்றேன்” (349) பார்க்க. |