பக்கம் எண் :

பெரியபுராணம்559

 

பிள்ளையார் திருமணத்துக்கு எழுந்தருளும்போது “மூலமான தோணிமேல் முதல் வரை
வணங்கி”ச் (3094) சென்றருளினர் என்பதும் காண்க.
 

     சாரல் - மலைநாட்டிற் பெய்யும் மழைச்சாரல்களும் அதனால் வரும் ஏனைய
தாவரச்சார்புகளும் கொண்ட என்பது.
 
     தவிரா விருப்பு - தடுக்கலாகாத பெருவிருப்பம்.
 
     சேரர் பெருமை - என்பதும் பாடம்.                        3
 
4232.    நன்னீர்ப் பொன்னித் திருநாட்டு நாதர் மகிழுந் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி யகன்றுபோய்முல்லைப்படப்பைக் கொல்லைமான்
துன்னி யுகைக்குங் குடக்கொங்கி லணைந்து தூய மதிவானீர்
சென்னி மிசைவைத் தவர்செல்வத் திருப்புக்கொளியூர்சென்றடைந்தார்.
 
     (இ-ள்) நன்னீர்...போய் - நல்ல நீரையுடைய காவிரித்திருநாடாகிய சோழ
நாட்டிலே இறைவர் மகிழ்ந்தெழுந்தருளும் திருப்பதிகளை நினைந்தும் வணங்கியும்
நீங்கிச்சென்று; முல்லை...அணைந்து - முல்லை நிலச்சார்புடைய புறவங்களில்
தோட்டங்களில் மான்கள் துள்ளி ஆடுதற்கிடமாகிய மேல் கொங்கு நாட்டில் சேர்ந்து;
தூய...அடைந்தார் - தூய மதியினையும் கங்கையினையும் சிரத்தில் வைத்த இறைவரது
செல்வ நிறைந்த திருப்புக்கொளியூரினைச் சென்று அடைந்தனர்.
 
     (வி-ரை) நன்னீர் - ஒருதுளி யளவும் வீணாகாது பயிர்களுக்கும் உயிர்களுக்கும்
பயன்படும் நிலையும், இருகரையிலும் பதிகளை வணங்கி வழிபட்டுச் சென்று எல்லா
உயிர்களும் சிவனை வழிபட்டுய்யச் சாதனமாயிருக்கும் நிலையும் குறிப்பு.
 
     முன்னி இறைஞ்சி - நினைந்தும் நேரே வணங்கியும் என்று எண் உம்மை
விரிக்க; வழியிடைப் பட்ட பதிகளை இறைஞ்சியும், அவ்வாறு படாதவற்றை நினைந்தும்
சென்றார் என்பதாம்.
 
     முல்லைப்படப்பை - குடக்கொங்கில் அணைந்து - காவிரிசூழும்
சோழநாட்டையகன்று, காவிரியைக் கடந்து, கீழ்கொங்கு நாட்டை நீங்கி, மேல்கொங்கு
நாட்டினை அணைந்தனர் என்பதாம்; இவ்வழிகள் முன் சேரனாருடன் செல்லும் போது
கூறியமையால் இங்குக் கூறினாரிலர்; (3876 - 3888); முல்லைப்படப்பை -
முல்லைப்புறவு நிலம்; மலைநாட்டினை அணுகுமுன் உள்ள காடுகளடர்ந்த
நாட்டுப்பரப்பு. “குன்றுங்கானு முடைக்குறும்ப ரிடங்க டோறுங் குறைவறுப்பத், துன்று
முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்து” (3798) என்று முன் இதனைக் கூறியது
காண்க.
 
     கொல்லைமான் துன்னி உகைக்கும் - முல்லைப் புறவுகளைக்கடந்து
அந்நிலத்தின் ஊர்களை அணுகச் செல்லும் இடங்களின் பண்பு; காட்டின்றன்மையும்
 நாடு நகரங்களின் தன்மையும் கலந்த பகுதிகள்; காடாரம்பமாகிய இந்நிலைகள் இங்கு
இன்றும் காண உள்ளன.
 
     குடக்கொங்கு - மேல்கொங்கு. கீழ்கொங்கு, வடகொங்கு, மேல்கொங்கு என்று
கொங்குநாடு மூன்று பிரிவுகளையுடையது; அவற்றுள் மேல்கொங்குநாடு;
சோணாட்டிலிருந்து வரும் வழியில் இதனைக் கடந்து மலைநாட்டினை அணைதல்
வேண்டும். இதனை “மீகொங்கு” (மீ - மேல்) என்பது தேவாரம். “மீகொங்கி
லணிகாஞ்சிவாய்ப் பேரூர்” (நம்பி); இது பற்றி முன் (3242) உரைத்தவையும் பார்க்க.

 
     தூயமதி - இறைவரை அடைந்தமையாற் றூய்மை பெற்ற மதி. அப்பிராகிருத
சந்திரன் என்றும் கூறுவர். “ஞானசந்திர கலான்விதம்” என்பர்.