பக்கம் எண் :

பெரியபுராணம்577

 
நாசி யப்பா பாண்டி வெள்ளமே" (மேற்படி ஆனந்த மாலை - 7) என்றும் வரும்
திருவாசகத் திருவாக்குக்களால் திருவாதவூரடிகள் இந்நாட்டுக்கும் இப்பதிக்கும்
எழுந்தருளிய மையும் கருதப்படும். அன்றியும் திருவாதவூரடிகள் நம்பிகள்
திருவுருவங்கள் பெரிய அளவில் கோபுரவாய்தலினுள் தீட்டப்பட்டுள்ளன.
 
     ஏறக்குறைய 120 ஆண்டுகளின் இப்பதியின் அணிமையில் வாழ்ந்த, சீர்க்கருணீகர்
மரபு, இளையான் கவிராயர் என்ற புலவர் பெருமானால் இதற்குத் தலபுராணம்
எழுதப்பட்டுள்ளது. இதனைக் கோயமுத்தூர் வித்வான் கந்தசாமி முதலியார் அவர்களும்
நெகமம் வித்வான் முத்துநாகப்ப முதலியாரும் பரிசோதித்து 62 ஆண்டுகளின் முன்
அச்சியற்றினர். முகவுரைச் சருக்கம் முதல் சுந்தரச் சருக்கமீறாக 13 சருக்கங்களுக்கு
1020 பாட்டுக்கள் உடையது. சருக்கங்களின் வசனமும் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுவேயுமன்றி செட்டிபாளையம் மகாவித்வான் வாசுதேவ முதலியார் இயற்றி
“கருணாம்பிகை சதகம்”, சிவக்கவிமணி. C.K. சுப்பிரமணிய முதலியார் இயற்றிய
“பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்” முதலிய பிரபந்தங்களும், கருணைதாசர்
இயற்றிய கீர்த்தனங்களும் உண்டு.
 
     சுவாமி - அவிநாசியப்பர்; அம்மை - பெருங்கருணையம்மை; தலமரம் - மா;
தீர்த்தம்; காசிக்கங்கை (கோயிலினுள் உள்ள தீர்த்தக்கிணறு); நள்ளாறு (கோயிலின்
வடக்கில் ஓடும் நதி); பதிகம் -1.
 
    இது திருப்பூர் நிலயத்தினின்றும் வடக்கில் 7 நாழிகையளவில் நல்ல கற்சாலைவழி
அடையத்தக்கது; இடையில் 5 நாழிகையளவில் திருமுருகன்பூண்டி உள்ளது; மோட்டார்
பஸ்வசதியும் உண்டு; வஞ்சிப்பாளையம் நிலையத்தினின்றும் வடக்கே கற்சாலை வழி 5
நாழிகை யளவிலும் அடையலாம்; வண்டிவசதி உண்டு; கோயமுத்தூரினின்றும்
மோட்டார் பஸ்கள் நிறைய ஓடுகின்றன. 24 நாழிகை; நல்லவழி.
 
4244. “முன்னாண் முதலை வாய்ப்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னா ரூர ரெழுந்தருளா நின்றா” ரென்று சேரர்பிரார்க்
கந்நாட் டரனா ரடியார்கண் முன்னே யோடி யறிவிப்பப்
பொன்னார் கிழியு மணிப்பூணுங் காசுந் தூசும் பொழிந்தளித்தார்.
 
     (இ-ள்) முன்னாள்.....என்று - முன்னாளிலே முதலையின் வாயில் விழுங்கப்பட்ட
மைந்தனை முன்போல உயிர்பெற்று வர மீட்டுக் கொடுத்துத் தென்னாரூர் நம்பிகள்
எழுந்தருளி வருகின்றார் என்று; சோர்பிரார்க்கு.....அறிவிப்ப - அந்நாட்டில் உள்ள
சிவனடியார்கள் முன்னாக ஓடிச் சென்று சேர் பெருமானாருக்கு அறிவிக்கவே;
பொன்னும்....அளித்தார் - அறிவித்தவர்களுக் கெல்லாம் பொற்கிழியும் மணிப்பூண்களும்
காசும் துணியும் மழைபோல மிகுதியாக அளித்தனர் (சேரனார்).
 
     (வி-ரை) அரனாரடியார்கள்.......அறிவிப்ப - நம்பிகள் எழுந்தருள்வது பெரிய
நல்ல சிவச் செய்தி யாதலின் அடியார்கள் அதனை அரசனுக்கு முன்னாக ஓடி
அறிவித்தனர்; அந்நாள் அரசரியல்பும் அடியாரியல்பும் அன்பினொழுக்கமும்
குறித்தவாறு.
     தென்ஆருர் - தென் - ஆரூர் - திரு ஆரூர் உள்ள பகுதி - “தென்
திருவாரூர் புக்கு,.....என்று கொலெய்துவதே” (நம்பி - தேவா).