பக்கம் எண் :

பெரியபுராணம்611

 
     (இ-ள்) அன்ன....மேற்கொண்டு - அத்தன்மையிலே இரு பெருமக்களும் பணிந்து
எழுந்து இறைவரது திருவருளினைத் தலைமேற்பூண்டு ஏற்றுக்கொண்டு;
மன்னும்....நின்றனர் - நிலைபெற்ற வன்றொண்டப் பெருமான் ஆலாலசுந்தரராகித் தாம்
வழுவாதியற்றிய முன்னை நல்வினையின் தொழிலினில் நிலைநின்றனர்; முதற்சேரர்
பெருமானும்.....தொழில் பூண்டார் - முதன்மையுடைய சேரனாரும் நன்மை சேரும்
சிவகணநாதராகி அவர்கள் செய்யும் விருப்பமிக்க திருத்தொண்டினை மேற்கொண்டனர்.
 
     (வி-ரை) அன்ன....மேற்கொண்டு - முன்கூறிய அவ்வாறு; முன் பாட்டுக்களில்
இவ்விருவரையும் பற்றிக் கூறிய நிலை; அருள் தலை மேற்கொள்ளுதலாவது -
அருளியவாறே மேற்கொண்டொழுகுதல்.
 
     மன்னும்.....நின்றனர் - நம்பிகள் தமது முன்னை நிலையில் உள்ள
ஆலாலசுந்தரராகிய நிலையிற்செய்த திருத்தொண்டு பூண்டு நின்றனர். மலர்மாலை
சாத்தியும், திருநீறு எடுத்து ஏந்தியும் வரும் செயல்கள். (31)
 
     முதற்சேரர்.....பூண்டார் - இது சேரமான் பெருமாள் மேற்பூண்டு
கயிலையிலமர்ந்த நிலை. அவர் செய்யும் தொழில் - அவர் - அக்கண நாதர்கள்;
அவர் தாம் முன் செய்த என்றுரைத்தலுமாம். அவை முன் (3755 - 3770 - 3756 -
3771) உரைக்கப்பட்டன. நயப்பு - அன்புடன் கூடிய விருப்பம். முதல் - மூவேந்தருள்
முதன்மை. (4264).                                                  49
 
4278.     தலத்து வந்துமுன் னுதயஞ்செய் பரவையார் சங்கிலி யாரென்னும்
நலத்தின் மிக்கவர் வல்வினைத் தொடக்கற நாயகி யருளாலே
அலத்த மெல்லடிக் கமலினி யாருட னனிந்திதை யாராகி
மலைத்த னிப்பெரு மான்மகள் கோயிலிற் றந்தொழில் வழிநின்றார். 50
 
     (இ-ள்) தலத்து......மிக்கவர் - இந்நிலவுலகத்தில் வந்து முன் அவதரித்த
பரவையார் - சங்கிலியார் என்ற பெயர்பூண்ட நன்மைமிக்க இருவரும்;
வல்வினை.....அனிந்திதையாராகி - வலிய வினைப்பாசம் நீங்க உமையம்மையரது
திருவருளினாலே முன்னை நிலையில், செம்பஞ்சூட்டிய மெல்லிய அடியினையுடைய
கமலினியாருடனே அனிந்திதையார் என்ற பெயருடைய சேடியர்களாகி
மலைமகளாராகிய அம்மையாரது கோயிலில் தாம் முன்னர்ச் செய்த திருத்தொண்டின்
வழியே நிலைபெற்றனர்.
 
     (வி-ரை) நம்பி ஆரூரர் ஆலாலசுந்தரராகித் தமது முன்னைத் திருத்தொண்டின்
வழியே நின்றதனை முன்உரைத்த ஆசிரியர், இதுவரை கூறிவந்த காவிய வரலாற்றினை
முடித்துக் காட்டும் வகையாலே, கயிலையினின்றும் ஆணையின்படி
ஆலாலசுந்தரருடனே அவர் பொருட்டுத் தென்றிசையிற்றோன்றி அவரை மணந்த இரு
சேடியர்களும் மீண்டு தத்தமது முன்னைத் தொழில் வழிநின்றதனை இப்பாட்டாற்
கூறிமுடிக்கின்றார். தம்தொழில் - முன்னை நிலையிற் செய்த திருநந்தனவனத் தொழில்
செய்தலும், மாலை தொடுத்துச் சாத்துதலும், இறைவியார் திருமுன்பு பாடலாடல்
பயிலுதலும் முதலாயின. (33 - 34 - 35). அலத்தகம் - செம்பஞ்சு; இங்கு அதன்
குழம்பைக் குறித்தது.
 
     வல்வினைத்தொடக்கற - "காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்" (35)
என்றதனாற் றொடங்கிய வில்வினைத் தொடர்பு.
 
     கமலனியாருட னனிந்திதையாராகி மலைத்தனிப் பெருமான் மகள்
கோயிலில் - வழி நின்றார்
- தோற்று முறையில் இக்காவிய முகப்பில் 1. ஆளுடைய
நாயகி (33).