தேவரீரது வழிபாட்டினால் ஆணவமல நீக்கமும் சிவப்பேறும் பெற்ற நிலையும், அடியார் கூட்டச் சார்வினால் வாசனாமல நீக்கமும் பெற்ற நிலையும், என்ற ஞானசாத்திரம் 12-ம் சூத்திரத்தின் உண்மை விளக்கங் கூறியபடி; மருவுதல் - தங்கி நிற்றல். |
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் - அருளும் ஈசர் - தமது செயல் யாவும் அருளேயாக இயற்றும் இறைவர்; ஐந்தொழில்களும் அருட்செயலேயாவன என்பது ஞானநூற் கருத்து. முன்னர் இவரது உள்ளத்துள் நின்று பாடுவித்து அருளிய ஈசர் என்பதும் குறிப்பு. இனி, அதனைக் கேட்டு அருள்புரிய நின்ற இறைவர் என்பதும் குறிப்பு. அவ்வருள் மேற்பாட்டிற் கூறப்படும். |
அன்பரும் கேட்பித்தார் - அன்பர் - சேரமானார். அன்பினாற் பாடினேன் என்ற குறிப்பு. கேட்பித்தார். "கேளாதே எல்லாம் கேட்டார்" என்றபடி பிறர் கேட்பிக்காமலே இருந்தவாறே எல்லாவற்றையும் கேட்கவல்ல இறைவரைத், தாம் சொல்வது போலவும், அவரைக் கேட்கச்செய்வது போலவும், நிகழ்த்துதல் அன்பின் பெருக்காலாவதாம் என்பது குறிப்பு. பரிவுடன் கேட்பித்த என்று மேற்பாட்டிற் கூறுவதும் இக்குறிப்புடையது. |
| உனைப்போற்றி - என்பதும் பாடம். 47 |
| 4276. | சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப் புறங்கொண்டு நாரி பாகரு நலமிகு திருவரு ணயப்புட னருள்செய்வார் "ஊர னாகிய வாலால சுந்தர னுடனமர்ந் திருவீருஞ் சார நங்கண நாதராந் தலைமையிற் றங்கு"மென் றருள்செய்தார். 48 |
(இ-ள்) சேரர்காவலர்.....கொண்டு - சேரமான் பெருமாள் அன்புடனே கேட்பித்த திருவுலாப்புறப் பாட்டினை ஏற்றுத் திருவுளங்கொண்டு; நாரிபாகரும்.....அருள் செய்வார் - அம்மைபாகராகிய இறைவரும் நன்மை மிகுந்த திருவருளின் விருப்பத்துடனே அருளிச்செய்வாராகி; ஊரனாகிய.....அருள் செய்தார் - நம்பியாரூரனாகிய ஆலாலசுந்தரனுடனே கூடி விரும்பியிருந்து நீவிர்கள் இருவீரும் சார நமது கணங்களுக்கு நாயகராகிய தலைமை பெற்று இங்குத் தங்குவீராக என்று அருளிச்செய்தனர். |
(வி-ரை) திருவருள் நயப்பு - திருவருளால் மேற்கொண்ட பெருவிருப்பம். |
நாரிபாகரும் - அருள் மிகச் செய்யும் முகமாக என்பது குறிப்பு. "நேரிழை வலப்பாகத் தொன்று மேனியர்" (4270); "மங்கை பாகர்" (4273) என ஈண்டு முன்னரும் இவ்வாற்றாற் கூறியமை காண்க. |
ஊரனாகிய ஆலாலசுந்தரனுடன் - இங்கு முன் ஆலாலசுந்தரனாக இருந்து, நமது ஆணையின்படி தென்றிசையிற் சென்று, நம்பி ஆரூரனாகி மீண்ட என்பது. ஆகிய - ஊரன் என்ற பெயருடைய தொண்டனாகிய; ஆரூரன் என்பது ஊரன் என நின்றது. (32-4277 பார்க்க.) இருவீரும் - இணைபிரியாது என்ற குறிப்புடையது. |
தங்கும் - மீளாநிலை பெற்றுத் தங்கியிருப்பீராக. |
சாருநங் கணநாதர்தம் - என்பதும் பாடம். 48 |
| 4277. | அன்ன தன்மையி லிருவரும் பணிந்தெழுந் தருடலை மேற்கொண்டு மன்னும் வன்றொண்ட ராலால சுந்தர ராகித்தாம் வழுவாத முன்னைநல்வினைத் தொழிற்றலை நின்றனர்; முதற்சேரர் பெருமானும் நன்மை சேரர்கண நாதரா யவர்செயு நயப்புறு தொழில்பூண்டார். 49 |