4274. (வி-ரை) அடியனேன்...வரப்பெற்றேன் - புன்முறுவல்பூத்து இங்கு நாம் அழையாமை நீ வந்ததென்? என்று வினவியருளியதற்குச் சேரனார் கூறிய விடை; முதலாவது, அடியேன் இங்கு வரக்கருதி வரவில்லை; நம்பியாரூரைப் பிறிவின்றிச் சேவித்துவருதலையே கருத்தாகக்கொண்டு யானையின்முன் அவரைச் சேவித்துக்கொண்டே வந்தனன்; அச்சேவை அடியேனைத் தேவரீரது திருவணுக்கன் றிருவாயில்வரை கொண்டுவந்து விட்டது; இரண்டாவது, இனி, அதன்மேல் இங்குத் திருமுன்பு வந்த செயலும் அடியேனது செயலாவதன்று; தேவரீரது அருளிப்பாடு என்னும் கருணைப் பெருவெள்ளம் என்னை உந்திக்கொண்டு வந்து திருமுன்பு புகுத்தியது. இது வழியும் அடியேன் இங்கு வரவேண்டும் என்ற முனைப்பின்றித் திருவருட் செயலாகவே வரப்பெற்றேன் என்றதாம்; இஃது அரசனாரது சொற்பெரு வன்மையும், தற்போதமிழந்த பேரடிமைத் திறமும் ஆம்; இவை கண்டு பின்பற்றி உலகம் உய்யத்தக்கது. புரசை - யானைக் கழுத்திடு கயிறு. "உடையா னடியா ரடியா ருடன் போய்ப், படையா ரழன்மேனி பதிசென்று புக்கேன், கடையார நின்றவர் கண்டறிவிப்ப, வுடையான் வருகென வோலவென் றானே" திருமந் II. 211. |
தெள் - திரை - செய் - வெள்ளம் - கொடுவந்து புகுத்தலின் - அலையினாலும், பெருவெள்ளமாம் தன்மையாலும், அதனகப்பட்டுப் புகுத்தப்பெற்றேன் என்றது அவரது திருவருளின்றி நிகழ்ச்சி யொன்றுமில்லை என்றபடி. இறைவர் அருளின்படி நந்தியெம்பெருமான் "வானவர்க்கு அருளிப்பாடு" என்று அழைத்தருளிய செயலைக் குறித்தது. |
கொன்றைசேர் வேணியாய் - சிவனுக்குரிய சிறப்பாகிய கொன்றைத் திருவடையாள மாலை. நியதியாய்த் தாம் வழிபட்ட திருவஞ்சைக்களத்தினின்றும் வழிபட்டுப் போந்தமையால் அது அப்பதியின் தல மரமாதலும் குறிப்பு. |
| புகுதலின் - என்பது பாடம். |
| 46 |
4275. (வி-ரை) பெருகும்.....துதிப்பரும் பெருமையாய் - தேவரீரது பெருமை துதித்தற்கும் அரியது. உமது வாய்மொழியாகிய பெரிய வேதங்களாலும், உம்மையே உணர்ந்து உள்ளந் தழுவிய பெரு முனிவர்களாலும் துதித்தற்கரியது; ஆயின் வேறுயாவர் துதிக்க வல்லார்? |
அன்பால் உனைத் திருவுலாப்புறம் பாடினேன் - அவ்வாறாதல் அறிந்துவைத்தும், திருவுலாப்புறம் பாடி உன்னைத் துதித்தேன். என்னை? எனின், அஃது அன்பின் றிறத்தலாகியதன்றி நான் துதிப்பேன் என்ற எண்ணத்தலாகியதன்று என்பது. |
திருவுலாப்புறம் - புறப்பாட்டின் வகையுள் ஒன்றாகிய திருவுலா என்னும் நூல். புறத்திணைகள் பன்னிரண்டனுள், புறப்புறம் என்னும் பாடாண் திணையுள் வருவது. அதன் துறைகள் 47-ல் கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்ற துறையுள் முற்பகுக்கப்பட்டது. இதுவே முதலிற் பாடப்பட்டதாதலின் ஆதியுலா என்றும், சிவஞானமே கருத்தாகப் பதிபோதத்தால் கயிலை நாயகர்மேல் அருளப்பட்டதாதலின் திருக்கயிலாய ஞானவுலா என்றும், தெய்வத்தன்மை வாய்ந்ததாதலின் தெய்வவுலா என்றும் பலவாறும் விதந்து போற்றப்படுவது. |
திருச்செவி சாத்திடப் பெறவேண்டும் - கேட்டருளுதல் வேண்டும். கேட்டலாவது அருள்புரிதல். மருவு.....வைத்தாய் - மருவுபாசம் - ஆன்மாவுடன் சகசமாயுள்ள ஆணவமலமும் வாசனாமலமும்; வன்றொண்டர் கூட்டம் வைத்தாய் - முன்னர் அவரை நினைப்பித்துச் சாரச்செய்த திருவருட்செயல் (3791); மருவுபாசத்தை அகன்றிட என்றது |