கழல் தொழ - இறைவரது திருவடிகளைக் கண்டு தொழும்பொருட்டு; விரைந்து - விரைவு ஆர்வங் குறித்தது. கழல் வீழ்ந்து - என்பது பாடமாயின், பெரிய தேவரை வணங்கி என்க. |
விரைந்தெய்தி - வந்தித்துப் - போற்றிட என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
நின்மலர்க்கழல் - நிரைமலர்க்கழல் - என்பனவும் பாடங்கள். 44 |
4273. (வி-ரை) போற்றிட - துதித்து நிற்க. |
புதுமதி - தேய்மதியின்பின் புதிதின் முறைத்து விரியநின்ற ஒற்றைக்கலையுடைய மதி; பிறை. |
அலைகின்ற கங்கை - அலைதற்கிடமாகிய கங்கை. |
திருமுறுவலின் கதிர்காட்டி - திருப் புன்முறுவலின் இள ஒளியினைக் காட்டி; முறுவல் - சிறுநகை; வரவு அங்கீகரித்த நிலைகாட்டும் மெய்ப்பாடு. இறைவரது முறுவலே புரமெரித்தது; இங்கு அவ்வாறன்றி அருட்புன்முறுவலாயிற்று என்பது; "குமிண்சிரிப்பும்" - "சிரித்த முகம் கண்ட" (தேவா) |
"நாம் அழையாமை நீ இங்கு எய்தியதென்னை?" - இஃது இறைவர் சேரலனாரை நோக்கி வினாவியருளியது. 45 |
| 4274. | அரச ரஞ்சலி கூப்பிநின் "றடியனே னாரூரர் கழல்போற்றிப் புரசை யானைமுன் சேவித்து வந்தனன்; பொழியுநின் கருணைத்தெண் டிரைசெய்வெள்ளமுன்கொடுவந்து புகுத்தலிற்றிருமுன்பு வரப்பெற்றேன்; விரைசெய் கொன்றைசேர் வேணியா! யினியொரு விண்ணப்பமுள தென்று, |
| 4275. | "பெருகு வேதமு முனிவருந் துதிப்பரும் பெருமையா! யுனையன்பாற் றிருவு லாப்புறம் பாடினேன்; திருச்செவி சாத்திடப் பெறவேண்டும் மருவுபாசத்தையகன்றிடவன்றொண்டர்கூட்டம்வைத் தா"யென்ன, அருளு மீசருஞ்"சொல்லுக" வென்றன; ரன்பருங் கேட்பித்தார். |
4274. (இ-ள்) அரசர் அஞ்சலி கூப்பிநின்று - சேரனார் சிரமேற் கைகூப்பி நின்று; அடியனேன்.....வந்தனன் - அடியேன் நம்பியாரூரருடைய திருவடிகளைப் போற்றிக்கொண்டு அவர் அருளினால் ஏறிவந்த புரசையானையின் முன்னே அவரைச் சேவித்துக்கொண்டு வந்தேன்; பொழியுநின்....வரப்பெற்றேன் - தேவரீரது மிக்குப் பொழிகின்ற கருணையாகிய தெள்ளிய அலையினையுடைய பெருவெள்ளமானது அடியேனை உந்திக்கொண்டுவந்து இங்கே புகுத்தியதனாலே தேவரீரது திருமுன்பு வந்து சேரும் பேறு பெற்றேன்; விரைசெய்....என்று - மணமுடைய கொன்றைமலர் மாலையினை யணிந்த சடையினையுடைய பெருமானே! மேலும் ஒரு விண்ணப்பம் உளது" என்று கூறி, 46 |
4275. (இ-ள்) பெருகும்....பெருமையாய்! - பெருகுகின்ற வேதங்களும் முனிவர்களும் துதித்தற்கரிய பெருமையுடையவரே!; உனை.....வைத்தாய் என்ன - அன்பினாலே தேவரீரைத் திருவுலாப்புறப் பாட்டுப் பாடினேன்; அதனை அருள் செய்து திருச்செவி சாத்திக் கேட்டருள வேண்டும்; பொருந்திய பாசத்தினின்று நீங்கிட வன்றொண்டரது கூட்டத்தினைச் சாரவைத்தவரே! என்று விண்ணப்பிக்க; அருளும்....என்றனர் - அருளே புரிகின்ற பெருமானும் சொல்லுக என்றருளினர்; அன்பரும் கேட்பித்தார் - அன்பராகிய சேரனாரும் பாடி அவரைக் கேட்பித்தனர். |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு பொருள்மேனின்று ஒருமுடிபு கொண்டன. |