| | குன்ற வில்லியார் பெரியதேவரைச்"சென்றுகொணர்"கெனவவரெய்தி "வென்றி வானவர்க் கருளிப்பா"டெனவவர்கழறொழ விரைந்தெய்தி, |
| 4273. | மங்கை பாகர்தந் திருமுன்பு சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப் பொங்கு மன்பினிற் சேரலர் போற்றிடப், புதுமதி யலைகின்ற கங்கை வார்சடைக் கயிலைநா யகர்திரு முறுவலின் கதிர்காட்டி "இங்கு நாமழை யாமைநீ யெய்திய தென்?" னென வருள்செய்தார். |
4272. (இ-ள்) நின்ற.....சென்று - முன் கூறியவாறு நின்றவராகிய வன்றொண்டப் பெருமான் கங்கையைத் தரித்த சடையவராகிய இறைவரது நிறைந்த மலர் போன்ற திருவடிகளினருகே சென்று சேரலன் தேவரீரது கோயிலின் மணியானியன்ற றிருவணுக்கன் றிருவாயிலின் புறத்தில் உள்ளான் என்று விண்ணப்பிக்க; குன்றவில்லியார்.....கொணர்க என - மேருவை வில்லாகவுடைய பெருமான் திருநந்தி தேவரை நோக்கி அவரைச் சென்று கொண்டு வருக என்று ஆணையிட; அவர்எய்தி.....என - அவர் போய் ஞான வெற்றி பொருந்திய சேரலனாருக்கு (உள்ளே வர) ஆணை என்று அறிவித்த உடனே; அவர்.....எய்தி - அவர் (இறைவரது) திருவடியைத் தொழுவதற்கு விரைந்து சார்ந்து, 44 |
4273. (இ-ள்) மங்கை....போற்றிட - உமையம்மையாருடைய வலப்பாகத் திருமேனியரது திருமுன்பு சென்று தூரத்தே நின்று தொழுது மகிழ்ச்சியுற்று மேன்மேல் அதிகரிக்கின்ற அன்பினாலே சேரலர் துதித்திட; புதுமதி....கயிலை நாயகர் - பிறைச் சந்திரன் சஞ்சரிக்கும் கங்கை சூடிய நீண்ட சடையினை உடைய கயிலையினிறைவர்; திருமுறுவலின்....அருள் செய்தார் - திருப்புன் முறுவலையுடைய இனிய ஒளியினைக்காட்டி "நாம் அழையாமல் இங்கு நீ வந்தது என்னை?" என்று அருளிச் செய்தனர். 45 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன. |
4272. (வி-ரை) கழல் சாரச் சென்று - திருவடியின் அருகே சென்று வணங்கி; இது விண்ணப்பம் செய்யும் முறை. |
நீரணி வேணிய! நின்மலர்க்கழல் சாரச்சென்று - என்பது பாடமாயின், வேணியரே - உமது திருவடி சாரும்படி இங்குப் போந்து என்றுரைத்துக் கொள்க; ஆயின் சேரனார் இறைவரது வினாவுக்கு விடையாக அறிவிக்கும் விண்ணப்பத்தை நோக்க, முந்தியபாடமே பொருந்துவதாகக் காணப்படுகின்றது. |
சேரலன் புறத்தினன் எனச் செப்ப - இது நம்பிகள் தமது தோழராகிய சேரமானார் பொருட்டு இறைவர்பால் செய்துகொண்ட விண்ணப்பம். இஃது இறைவர் தாமே நினைப்பித்துக் கூட்டுவித்த நற்சார்பின் பயனாகக் கிடைத்த பெரும் பேறு என்க; உலக நிலையிலும் சார்கின்ற நற்சார்புகள் அவ்வந் நிலைக்கேற்றவாறு நற்பயன்றருதல் காணப்படும். உயர்ந்தோர் சார்பும் நன்னடையும் இவ்வாறு சிறந்த பயன்றருவன. |
பெரியதேவர் - நந்தியெம் பெருமானார்; நந்தி - அபர சிவனே எனப்படுவார்; நந்தி - சிவன் பெயராதலுமறிக; வானவர்க்கு - சேரனாருக்கு; சேரர்களுக்கு வானவரம்பர் எனப் பெயர் வழங்குதல் குறித்தது. |
அருளிப்பாடு - ஆணை; உள்ளே வரும்படி இறைவரது ஆணை பிறந்துள்ளது என்பதாம். |