பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்606

 
பற்றிக் கூறியது. அம்மைக்கு ஐயன் வலப்பாகத்தர் என்பது. இரண்டும் ஒரு
பொருளையே குறிப்பனவாயினும், ஈண்டு, அருள் பழுத்தொழுகும் மிகுதி பற்றி
இவ்வாறு கூறினார். அம்மை - வீட்டுக்குடையவள் என்ற வழக்கும் காண்க.
 
     ஊரனே உலகுய்ய வந்தனை - என்க; உலகுய்யச் செய்து வந்தனையே! என்ற
நன்மையருளி ஆட்கொண் டழைத்தபடி; "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திட" (35);
செய்து என்பது குறிப்பெச்சம். "என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்
குறிப்பே" (தேவா); ஊரன் - நம்பியாரூரன்.
 
     தனிப்பெருந் தொண்டர் - நம்பிகளது ஒப்பற்ற சிறப்புடைமை குறித்தபடி.   42
                                     
 
4271.     "அடியனேன் பிழைபொறுத்தெனையாண்டுகொண்டத்தொடக் கினைநீக்கி
முடிவிலாநெறிதரும்பெருங் கருணையென் றரத்ததோ?"
வெனமுன்னர்ப்
படியு நெஞ்சொடு பன்முறை பணிந்தெழும் பரம்பரை யானந்த
வடிவு நின்றது போன்றின்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன்றொண்டர்.
 

43
 

     (இ-ள்) அடியனேன்....என - அடியேன் செய்த பிழையினைப் பொறுத்து என்னை
ஆளாகக்கொண்டு, பிழையினாற் போந்த அந்தத் தொடக்கினை நீக்கி, முடிவில்லாத
மீளா நெறியாகிய திருவடிப் பேற்றினைத் தருகின்ற தேவரீரது பெரிய கருணையானது
சிறிய எனது தரத்துக்குத் தகுதியாமோ? என்று துதித்து; முன்னர் - திருமுன்பு;
படியும்.....எழும் - படிகின்ற உள்ளத்தோடு பலமுறையும் பணிந்து எழுகின்ற; பரம்பரை
- அடுத்து அடுத்துத் தொடர்ச்சியோடு வரும்; ஆனந்த....வன்றொண்டர் - ஆனந்தமே
ஒரு வடிவெடுத்து நின்றது போன்று இன்ப வெள்ளத்தில் அழுந்தி வன்றொண்டப்
பெருமான் திளைத்தனர்.
 
     (வி-ரை) அடியனேன் - என்தரத்ததோ? - அடியேன் செய்த பிழை பெரிது;
அப்பெரிய பிழையினையும் பொறுத்து ஆட்கொண்ட தேவரீரது கருணை மிகப் பெரிது;
அத்துணைக் கருணை பெறுதற்கு அடியேன் எத்துணையும் தகுதியில்லேன் என்பதாம்;
இவ்வாறு தமது சிறுமையினையும் தகுதியின்மையினையும், இறைவரது கருணையின்
பெருமையினையும் எண்ணி எண்ணிப் பாராட்டுதல் பெரியோரியல்பு; "பித்தனேன்
பேதையேன் பேயே னாயேன்....பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தா யன்றே,
யித்தனையு மெம்பரமோ, வைய! வையோ! வெம்பெருமான் றிருக்கருணை
யிருந்தவாறே!" (அரசுகள் - தாண்); பிழை என்று நம்பிகள் கூறியவை கயிலையின்
முன் நிகழ்ச்சியும், ‘அடியேனலேன்' என்ற வழக்கும், பிறவுமாம்; தொடக்கு - பந்தம்.
 
     பன்முறை பணிந்தெழும் பரம்பரை - வணங்கி எழுதற்கு விதித்த முறைகளின்
மிக்கு ஆராமையால் பன்முறை பணிந்தெழுந்தார்; பரம்பரையால் - என மூன்றனுருபு
விரிக்க; பரம்பரையாவது ஒன்றன்பின் அதுபற்றிய ஒன்றாகத் தொடர்ச்சியாய் வருவது.
இடையறாதொழுகும் நீரோட்டம் போல என் றுவமை கூறுவர்.
 
     ஆனந்த வடிவு நின்றது போன்று - ஆனந்தமென்பதே ஓர் வடிவெடுத்து
நின்றது போல; ஆனந்தம், அனுபவிப்போனும் அனுபவிக்கப் படுவோனும் ஆனந்தமும்
என்ற உணர்வு இன்றி அதுவே மயமாக நிற்பது என்பதாம்.
 
     மலர்தல் - சிவானந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தல்.               43
 
4272. நின்ற வன்றொண்டர் நீரணி வேணியர் நிறைமலர்க் கழல்சாரச்
சென்று "சேரலன் றிருமணி வாயிலின் புறத்தின" னெனச் செப்பக்