கற்பனை :- (1) சிவயோக முதிர்ந்து முறுகியபோது சிவபோகம் விளையும். (4220) |
(2) முன்னர்க் கொடுங்கோளூரில் இருக்குநாள் திருவாரூரரை நினைந்துகொண்டு, "ஆரூ ரானை மறக்கலு மாமே" என்று பாடி, அங்கு நின்றும் திருவாரூரினை அடைந்த நம்பிகள், இப்போது திருவாரூரிலிருக்கும்போது சேரர்பெருமாளை நினைந்து கொண்டு மலைநாட்டுக்குப் புறப்படுகின்றார்; (4231) இது "பாரோடு விசும்பாட்சி எனக்குமது பாதமலர்" (3906) என்று இடைவிடாது நம்பிகளை நினைந்திருந்த சேரலனாரது நினைப்பின் உறைப்பினாலாகியது; சேரனாருடன் நம்பிகளைக் கயிலைக்குச் செலுத்தும் சிவசத்தியின் விளைவுமாம். |
(3) சிவனருள் நிறைந்த பெரியோர்கள்பால் வைத்த அன்பு, எல்லாம் செய்யவல்லது; சில ஆண்டுகள்முன் இழந்த மகனை எண்ணிச் சோகத்துள் மூழ்கி அழுது கொண்டிருந்த (புக்கொளியூர்) மறையோனும் மனைவியும், தாம், நெடுநாள் காண ஆவல்கொண்டு தியானித்திருந்த நம்பிகள் தாமே தம் வாயிலின் வந்ததனைக் கேட்டவுடன் சோகத்தினை மறந்து அவரை வணங்கி மகிழ்ந்தனர். அதுவே ஆறாகத் தாம் முன் இழந்த மகளையும் மீளப் பெற்றனர் (4237). |
(4) இறைவரைப் பிரிந்தெய்தும் சேய நன்னெறி குறுகிட, இவ்வுலகவாழ்வில் வெறுப்பும் சிவனைச் சேரும் விருப்பும் சிவனருட்சத்தியால் விளையும் (4256 - 4257). "பற்றுநான் மற்றிலேன் கண்டாய்.....சிவபுரத்தரசே - வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே" (வாழாப்பத்து - திருவா) என்றது சிவயோக நிலைகூடிய பெரியோரது மனநிலையின் பண்பு. |
(5) சிவனாணையின்வழி யானையேறிச் சிவனகர் புகப்போகும் நம்பிகள் கழறிற்றறிவாராகிய தமது தோழரை நினைந்து சென்றனர்; இது சிவன்பாலன்பினாற் பிணைக்கப்பட்ட தூய நட்பின்றிறம்; ஏனைநட்புகளின் நினைவுகள் பாசசம்பந்தப்பட்டுப் பிறவிக் கேதுவாவன; இது பிறவி போக்கி முத்திக்கேதுவாதல் கண்டு கொள்ளத் தக்கது; இவ்வகைத்தாகிய நட்பினை உலகர் பெருக்க முயலுதல் வேண்டும் (4264). |
(6) திருவஞ்சைக்களத்திலிருந்து நம்பிகள் வானவீதியில் செல்லும்போது தம்மை நினைந்ததனைச் சேரனார் கொடுங்கோளூரி லிருந்தவாறே உணர்ந்தனர்; இஃது அவர் சிவன்பால் வரம்பெற்றுக் கழிறிற்றறிவாராய் நின்ற பண்பினாலும், நம்பிகளது சிவம்பற்றி தூய சிந்தனையின் நட்பாகிய உறைப்பாலுமாகியது. |
(7) சேரனாரது பரி, ஆகாய வீதியில் எழப்பாய்ந்து சென்ற செயல், இட்டமாஞ் சிவமந்திரத்தின் வலிமையாலும், சேரனாரது தவவலிமையாலும், பெற்ற வரத்தின் நலிமையாலுமாகியது (4264). |
(8) நம்பிகளது முத்திவிண்ணப்பத் திருப்பதிகம் முடியுமுன் தேவர்களும் வெள்ளானையும் வாயிலில் வந்து நின்ற செயல் சிவனருள் செய்கின்ற விரைவினைப் புலப்படுத்துவது; பெரியோர்களது நினைவினை இறைவர் உடனே நிறைவாக்கியருளுவர். |
(9) சிவனாணைவழிச் சார்பவர் சிவன் சந்நிதியில் உடனே சார்குவர். அவ்வாறன்றித் தம் நினைவின் முயற்சியாற் சார்பவர்கள் அவனது ஆணைநிகழும் வரை காத்திருந்து அருள்வந்த பின்னரே சார்குவர் (4209 - 4274). |