| இவ்வாறு செல்லும் இடையில் நம்பிகள் "தானெனை முன் படைத்தான்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடிக் கயிலாய பதியினைத் துதித்துக்கொண்டு சென்றருளினர்; இத்தன்மையில் இவர்கள் கயிலைமலைத் தாழ்வரைத் திருவாயிலில் சார யானையினின்றும் குதிரையினின்றும் இறங்கினர். அம்மலைத் தடம் பலவற்றையும் கடந்து திருவணுக்கன்றிருவாயிலினை அடைந்தனர். அங்குச் சேரர் காவலர் தடையுண்டு நின்றனர். நாவலர் காவலர் உட்சென்று இறைவர் திருமுன்பு சென்று நெடுந்தூரத்துப் பிரிந்துவிட்ட ஆன் கன்று தாய்ப்பசுவினைக் கண்டணைந்தது போன்று பெருவிருப்புடன் விரைந்து சேர்ந்து நின்று போற்றினர். அவரை நோக்கி அம்மைபங்கராகிய இறைவர் அருணோக்கம் செய்து "ஊரனே உலகுய்யச் சென்று வந்தனையோ?" என்றருளிச் செய்தனர்; நம்பிகள், அடியேனது பிழையினைப் பொறுத்து ஆட்கொண்டு, பிழையால் நேர்ந்த அத்தொடக்கினை நீக்கி மீளா நெறிதரும் தேவரீரது பெருங்கருணை அடியேன் பெறுந்தரமுடையதோ? என்று ஊன்றிய நெஞ்சினொடு பலமுறையும் பணிந்தெழுந்தனர்; பரம்பரையில் வரும் ஆனந்த வடிவம் நின்றதுபோலப் பேரின்ப வெள்ளத்துள் திளைத்தனர்; பின்னர் இறைவர் கழல்சாரப் பணிந்து நின்று, "சேரலன் திருவாயிற் புறத்தினுள்ளான்" என்று விண்ணப்பித்தனர். இறைவர் நந்தியெம்பெருமானாரைச் சென்று அவரைக் கொணர்க என ஆணையிட, அவரும் அவ்வாறே சென்று அருளிப்பாட்டினை அறிவித்தனர். சேரலனார் பணிந்து, உடனே திருமுன்புவந்து தூரத்தே வணங்கிப் போற்றினர். இறைவர் புன்முறுவல் செய்து "இங்கு நாமழையாமை வந்த தென்னை" என்று அருளியிட, அவர், "அடியேன் நம்பிகளது கழல்போற்றி வந்தனன். தேவரீரது திருவருள் வெள்ளம் உந்திக்கொடு வந்து புகுத்தியிடத் திருமுன்பு வரப்பெற்றேன் என்று கூறிப், பின்னரும், "பெருமானே! இனியும் ஒரு விண்ணப்பமுண்டு; தேவரீரைத் திருவுலாப்புறம் பாடினேன்; திருச்செவி சாத்தியருளுதல் வேண்டும்; அடியேனது பாசநீங்கிட வன்றொண்டர் கூட்டத்தைத் தந்தருளினை!" என்று விண்ணப்பித்தனர். அதுகேட்ட இறைவர் "சொல்லுக" என்றருள் செய்ய, அன்பரும் கேட்பித்தார். இறைவர் திருவுள்ளக்கருணை செய்து "ஆலால சுந்தரருடன் அமர்ந்து நீவிர் இருவீரும் நமது கணநாதர் தலைவர்களாய்த் தங்குங்கள்" என்று அருள் செய்தனர். | அதனைத் தலைமேற்கொண்டு வன்றொண்டர் முன்புபோல ஆலால சுந்தரராகித் தாம் வழுவாதியற்றிய முன்னை நல்வினைத் தொழிலிற் றலைநின்றனர்; சேரனாரும் கணநாதராய் அவர் செய்யும் அன்புடைத் தொழில் பூண்டார்; நிலவுலகில் வந்தவதரித்த பரவையார் சங்கிலியார் என்ற இருவரும் ஆளுடைய நாயகியாரருளாலே கமலினியாருடன் அனிந்திதையாராக ஆகிப் பார்வதியம்மையார் கோயிலிற் றமது முன்னைத் தொழில்வழி நின்றனர். | ஆலாசுந்தரர் தாம் வழியில் அருளிச் செய்த திருப்பதிகத்தினைக் கடலரசனாம் வருணனுக்கு அளித்து, அதனைக் கொண்டு சென்று திருவஞ்சைக்களத்தப்பருக்கு அறிவிக்கும்படி ஆணையிட, அவனும் அவ்வாறே கொண்டு உய்த்தது அறிவித்தனன்; சேரலனார் அருளிய திருவுலாப்புறத்தினை அன்று உடனிருந்து கயிலையிற் கேட்ட மாசாத்தனார் அதனைத் தரித்து இவ்வுலகில் வேதியர் திருப்பிடவூரினில் வெளிப்படப் பகர்ந்து உலகிடை நாட்டினர். | மன்றுளா ரடியா ரவர் வான்புகழ், நின்ற தெங்கு நிலவி யுலகெலாம்! | - - - - - | | |
|
|