பக்கம் எண் :

 102. சீகாழி1003


1101. காமருகண்ணார் கோயிலுளானைக்

கடல்சூழ்ந்த

பூமருசோலைப் பொன்னியன்மாடப்

புகலிக்கோன்

நாமருதொன்மைத் தன்மையுண்ஞான

சம்பந்தன்

பாமருபாடல் பத்தும்வல்லார்மேற்

பழிபோமே. 11

திருச்சிற்றம்பலம்

___________________________________________________

11. பொ-ரை: அழகிய திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்துள் விளங்கும் சிவபெருமானை, கடல் ஒரு புடைசூழ்ந்ததும், பூக்கள் நிறைந்த சோலைகளை உடையதும் அழகியதாய் அமைந்த மாட வீடுகளைக் கொண்டதுமான புகலிப் பதியின் தலைவனும், பழமையான இறை புகழை, நாவினால் மருவிப் போற்றுபவனும் ஆகிய ஞான சம்பந்தன் பாடிப் பரவிய ஓசையோடு திகழும் இப்பதிப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்.

கு-ரை: கண்ணார் கோயிலைப்பற்றி ஞானசம்பந்தன் சொல்லிய பாடல் பத்தையும் வல்லார் மேல்பழி போம் என்கின்றது. காமரு - அழகிய. பாமரு பாடல் - பரந்துபட்டுச் செல்லும் ஓசை மருவிய பாடல்.

திருஞானசம்பந்தர் புராணம்

திருமறைச் சண்பைய ராளி சிவனார் திருக்கண் ணார்கோயில்
பெருவிருப் பால்அணைந் தேத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர்தமிழ் மாலைகொண் டேத்தி
வருபுனற் பொன்னி வடபால் குடதிசை நோக்கி வருவார்.

- சேக்கிழார்.